பீர்பால் வீடு எது

பீர்பால் வீடு எது?
-----------

நண்பர் ஒருவருடைய வீட்டுக்குப் பீர்பால் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒருவர் அவரைப்பார்த்து, 'அமைச்சர் பீர்பால் வீடு எது?'' என்று கேட்டார்.

அந்த மனிதர் பீர்பாலை பார்த்ததே இல்லை. ஆனால், அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். ஏதோ அவசர காரியமாக அவரிடம் ஆலோசிப்பதற்கு விரும்பினார்.

பீர்பால் அவரைப் பார்த்தார். பிறகு, 'அதோ தெரிகிறதே மாடி வீடு, அதுதான் பீர்பால் இல்லம்' எனச் சுட்டிக்காட்டினார்.

அந்த மனிதர் பீர்பாலுடைய வீட்டுக்குச் சென்றார். ஆனால், அங்கே பீர்பால் இல்லை, வெளியில் சென்றிருப்பதாகவும் சிறிது நேரத்தில் திரும்பி வந்துவிடுவார் எனவும் காவலாளி கூறினான். வந்தவர் காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் பீர்பால் வீட்டுக்குத் திரும்பினார்.

அவரைப் பார்த்ததும், வழியில் தான் பார்த்தவரே பீர்பால் என்பதை உணர்ந்து கொண்டு, ''உங்களை வழியில் பார்த்து ''பீர்பால் வீடு எது? என்று கேட்டபொழுது, ''நான்தான் பீர்பால் என்று சொல்லியிருக்கக் கூடாதா?'' என்று கேட்டார்.

''அமைச்சர் பீர்பால் வீடு எது?'' என்றுதான் நீர் என்னிடம் கேட்டீர். நான் வீட்டைக்காண்பித்தேன். ''பீர்பால் எங்கே?'' என்று கேட்டிருந்தால், ''பீர்பால் உம் எதிரில் நின்று கொண்டிருக்கிறார்' என்று கூறியிருப்பேன் என்றார்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (30-Nov-15, 3:08 pm)
பார்வை : 834

மேலே