அந்த சாமிக்கு ஏனிந்த கோபம்

எனது தலை மீது
பறக்கும் பறவையே
உன் சிறகுகளின் கீழ்
எனை எடுத்துக் கொள்!

இந்த நேரத்தில்
உன் மனதில்
இரக்கம் இருப்பின்
கொஞ்சமாவது
சுரக்கட்டுமே!.

சொந்த நாட்டில்
இருக்கும்போதே
நாடு கடத்தப்பட்ட
என் மன்றாட்டை
உன் கூட்டிற்குள் இழு!

பசி இருக்கட்டும்
உடல் மரத்துப்
பிடித்துக் கொண்டு
கொண்டு இருக்கும்
விரல்கள் வலிக்க,
மரத்துக்குத் தெரியுமா
இன்னும் கொஞ்சம்
நேரத்தில் இந்த
ஏரியின் வெள்ளம்
என் தலைக்கு மேல்
ஏறும் என்று..

தூரத்துப் படகுகள்
இல்லை நட்சத்திரங்கள்
என்னை ஏமாற்றின..
எனக்கும் ஒரு கனவு
இருந்து வந்தது.

அதுவும் என்னைக்
கடந்து போனது.
இப்போது இவ்வுலகில்
எனக்கென ஏதுமில்லை
ஒன்றுமே இல்லை
இந்த விஸ்தாரமான
தண்ணீர் படுக்கையை,
குப்பையைத் தவிர்த்து.

உன் சிறகுகளின் கீழ்
என்னை எடு,
என் தாயாக இரு,
என் சகோதரி இழு.
என் தலையை உன்
மார்போடு அணை..

ஏ ஏ ஏ, காகமே
உன்னை எவர்
அழைத்தார் இங்கு?
இன்னும் எனக்கு
உயிர் உள்ளது
என் கண்ணைக் கொத்த
உனக்கு என்ன தைரியம்.

பழங் காலக்
கடலோடியின்
பாட்டினிலே அன்று
அழகாக கோலரிட்ஜ்
காட்டி விட்டான்:
”தண்ணீர் தண்ணீர்
எங்கு பார்த்தாலும்
குடிக்க மட்டும்
துளியும் இல்லை”
என்ன சொல்ல
என்ன சொல்ல
மீண்டும்இருட்டிக்
கொண்டு வருகிறது
மேகம் அல்ல--
என் கண்களில்.

“இந்த பூமிக்கு
ஏனிந்த சாபம்?
அந்த சாமிக்கு
ஏனிந்த கோபம்?”.
ஏஏ…ன்..இ…ந்த்
கோ….ப……………????

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (2-Dec-15, 2:16 pm)
பார்வை : 109

மேலே