மழை ஓவியம்-ரகு
ஈரச்சுவர்களெங்கும்
மழையின்
கிறுக்கல் ஓவியங்கள்
கால்களில்லாத
செம்மறியும்
அதன் பெருங்கொம்பும்
அதிலடங்கும்
உணர்வற்ற
ஒரு ஜோடி
மைனாக்களை
அக்கொம்பின் மீது
அமர்த்தியிருந்தது
மழை
முன்காலத்தில்
பசுமை தேடிப்
புலம்
பெயர்ந்திருக்கலாம்
அவை
அல்லது
இன்று
சுவர்களடக்கிய
அந்நிலம்
நெல் மணிகள் சுமந்து
வயல்
போர்த்தியிருந்திருக்கலாம்
பரம்பரை காத்த
சிட்டொன்று
வெகு நேரமாய் தத்திக் கொண்டிருந்தது
அச்சுவரில்
ஒரு
நீள் பார்வையால்
ஓவியங்களையளந்த
சிட்டு
பின் மைனாக்களின் வழியொழுகும்
நீர்
பருகலானது
அவ்வழியே வந்த பெருத்த
மீசை வைத்த
ஒருவர் நனைந்தபடி
"யாமறிந்த
மொழிகளிலே"
பாடிக் கொண்டே
கடந்தார்
மழை மேலும்
வலுத்தது

