மழைக்குள் ஈரம்-Mano Red
காய்ந்து கெடுக்கும்
இல்லையென்றால்
பெய்ந்து கெடுக்கும்
கடும் வெயில் கண்ட சென்னையை
கொடும் நெஞ்சோடு ஈரமாக்கியது.
தார்ச் சாலைகளில்
பாம்பு, பல்லி, பூச்சிகளை
பார்க்கும்போதுதான்
சென்னையில் மண்ணும் உண்டு
என்பது நினைவுக்கு வருகிறது.
பிளாஸ்டிக் குடங்களுக்கு
கைகால்கள் முளைத்து,
வறண்ட நாக்குகளுடன்
தண்ணீர் லாரிகளின் பின்னால்
ஓடிய மக்கள்
தண்ணீரில் தவித்து நிற்கின்றனர்.
அடையாறுக்கும் கூவத்துக்கும்
கரை எதுவும் கிடையாது.
கரையெல்லாம் குடி(சை)யிருப்புகள்.
மழை மிகுந்ததால்
மரண சாகசத்தின்
கயிற்றிலேறி நடக்கிறார்கள்.
ஏரிகளில்
குடியேறியது தவறென
மன்னிப்பு கேட்கச்சொல்லி
மல்லுக்கு நிற்கிறது
பெய்யெனப் பெய்யும் மழை.
என்னைப் பெய்யச் சொல்லியிருந்தால்
குடையாக மட்டுமல்ல
கொடையாகவும் பெய்திருப்பேன்.
கொஞ்சமல்ல
ரொம்பவே மோசம் மழை.
இம்முறை
ஆறு குளங்கள்
தாங்கள் தொலைத்த இடங்களை
மழையின் உதவியோடு
கோவமாகத் தேடி வருகிறது
குறுக்கே யார் வந்தாலென்ன?
மழையின் நெஞ்சிலும்
ஈரம் இருக்கிறதே.