காதல் உத்திகள்

சிலுசிலு சிலுசிலு என வீசும்
பூங்காற்றின் வாடையில்
சலசல சலசல என ஓடும்
காதலின் ஓடையில்
சிலுசிலு சலசல
'இரட்டைக் கிளவிகள்' நாம்- இணை
பிரிந்தால் பொருள் மாயும்
இளங்கிளிகள் நாம்

புது புது புது புது அர்த்தங்களில்
எழில். எழில் எழில் எழில் வண்ணங்களில்
'அடுக்காய்த் தொடரும்' சந்தங்களில்
அழகாய்க் கவி மலரும் சொந்தங்கள் நாம்.

தொட்டால் சிணுங்கி போல் நாணும் 'உவமை' - உன்விழி
பட்டாம் பூச்சியின் 'உருவகம்'
உயிருக்கு முகம் தந்த வடிவம் - என்
உயிரில் உயிரான 'படிமம்'

புரியாமல் புரிகின்ற 'இருண்மை' - நீ
புரிந்தும் புரியாத ஆளுமை - ஏழைக்
குடியான பெண் கிரீடம் சூடுவது போல்
கர்வமாய் நடக்கின்ற எளிமை

நாணங்களால் அசைகின்ற நளினம் - நீ
நகைப்ப தெல்லாம்' நவீனம்'
பாணங்கள் எய்திடும் பார்வை - உன்
பார்வைகள் ஒவ்வொன்றும் 'அங்கதம்'

எது கவிதை இது கவிதை புது கவிதை
ஏகாந்தம் எதுவோ அது கவிதை
ஏனடி நமக்கிந்தத் தலையீடு
நாமல்லோ நற்கவிதை 'குறியீடு' ...!

எழுதியவர் : கவித்தாசபாபதி (5-Dec-15, 12:36 pm)
சேர்த்தது : கவித்தாசபாபதி
Tanglish : uthi
பார்வை : 102

மேலே