பெருமழையில் முளைத்த புனிதம் - சந்தோஷ்
வெள்ளைக் குல்லா அணிந்தவர்
கொடுத்திட்ட சாம்பார் சாதத்தில்
முஸ்லீம் வாடையேதும் வீசவில்லை.
அந்த சிலுவைச் செயின் அணிந்தவர்
அளித்த பிஸ்கெட் பாக்கெட்டில்
கிறிஸ்துவ வாசம் அறவே இல்லை.
இந்த விபூதி பட்டைக்காரர்
அளித்த போர்வைத் துண்டுகளில்
இந்து நிறமேதும் இல்லை
தலித் என அழைக்கப்பட்டவர்
அளித்த தண்ணீர் பாட்டிலில்
எந்த கசப்புமே
எங்களுக்குத் தெரியவே இல்லை.
மாமழையே....!
உன்னால்
வீடு இழந்ததும் உண்மையே
உடமை இழந்ததும் உண்மையே
சில உறவுகளை இழந்ததும் உண்மையே
உன் மீது பெருங் கோபமே...!
என்றாலும் ,
உன்னால்
எங்களுக்குள்ளிருந்த
மனிதத்தன்மையற்ற கழிவுகள்
வெளியேறியதும் உண்மையே.
உன் மீது இப்போதும்
பெரும் மரியாதையே...!
இதோ ! நாங்கள்
மனிதர்கள் புனிதமடைந்துவிட்டோமே..!
பெருமழையே... !
நன்றி நவில்கிறோம்.
மீண்டுமொரு முறை
வேற்றுமையில் நாங்கள்
ஆடினால் மட்டுமே
வா.. அடிக்க வா..
---
-இரா.சந்தோஷ் குமார்.