இதுவரை ரசித்த ஓடைகள்

நிலவின் நீரோடை
இரவை நனைக்க
கனவுகள் இன்றியே
கண்கள் தவிக்க
மனதில் ஜன்னல்வழி
மரக்கிளையூடே
வசந்த கூடுகளில்
புணரும் பறவைகள்

அவை
என்ன பேசிக்கொள்ளும் ?

***இது நான்
***ஆப்பிரிக்காவில் வாழ்ந்த
***அடர்மரத் தோப்பின்
***அறையின் ஞாபகம்

மண்ணும் சருகும்
மரப்பட்டை அழுக்கும்
மேனி முழுதும்
பூசிக்கொண்டதால்
நுரைகள் பொங்க
தன்னைத் தானே
துவைக்கின்றதோ
காட்டோடை
பாறைகளில் அடித்து?

***முதுமலை வனங்களில்
***பணி புரிந்த ஞாபகம்

ஆசாரி ஒருவன்
கதவுகள் செய்ய
பொறியாளன் நான்
பார்த்திருந்த வேளையில்
“தேவதச்சன் நீ செய்த
உயிர்ப்பொம்மை நானென'
"கடவுளின் நிழல்கள் "
என் மீது பரவிய
காலக் கவிதைகளின்
பரவச ஓடைகள்

***சென்னையில் என்னை நான்
***செதுக்கிய ஞாபகம்

"மணிக்கு மணி,
மாயக் குதிரை
தங்க மாம்பழம்
அம்புலிமாமா " என
பலநூறு கதைகள்
படித்துக்காட்டி
‘செவன ’ வாத்தியார்
ஊட்டிய பால் தான்
கவிதைச் சுனைகளாய்
கசிந்ததோ பிந்நாள்?

***பால்ய காலத்து
***பள்ளியின் ஞாபகம்

காற்றும் ஒருநாள்
கைதானதாம்
சூரியன் கூட
சிறைபட்டுப் போனதாம்
ஒரு இனிய விடியல்
நிகழ்ந்த நாளில்
நீக்ரோக்களின் தேவதூதன்
மண்டேலா கொடுஞ்சிறை
மீண்ட போது
நா.கா, மேத்தா
சிற்பி கவிக்கோ ,
புலமைப் பித்தன்
பூவை செங்குட்டுவன்
வைரமுத்து, துறவி
சக்திகனல், தமிழன்பன்
அறிமதி தென்னவன்
ஆலந்தூர் மோகனரங்கன் ,
முத்துலிங்கம்
முத்துராமலிங்கம்
இன்குலாப், இனும் சில
தமிழ்ப்பெரு நதிகள்
சங்கமித்த கடலென்
“கறுப்புச் சூரியன் ”

***முதன்முதலாய் வெளியிட்ட
***கவிதைநூல் ஞாபகம்

கண்ணீர் உப்பு
கலந்த ஓடைகள்
கவலைத் துகள்கள்
கரைந்த ஓடைகள்
காதலின் ஜீவன்
நனைந்த ஓடைகள்
வஞ்சக நெருப்பு
அணைந்த ஓடைகள்
வழிந்தே வியர்த்த
வேர்வையின் ஓடைகள்
வண்ணக் கவிதைகளின்
வசந்த ஓடைகள்

***இதுவரை ரசித்த
***வாழ்க்கையின் ஞாபகம் !

*
கவித்தாசபாபதி

எழுதியவர் : கவித்தாசபாபதி (9-Dec-15, 11:23 am)
பார்வை : 170

மேலே