தீவுகள்

சென்னைப் புறநகரில் கொஞ்சம் நிலம் வாங்கி
தனியாக வீட்டொன்றைக் கட்டினேன் , பாங்கி !
காலையில் விழித்தெழுந்து வெளியிலே பார்த்தால்
சாலையில் வெள்ளநீர் ஓடுதே ஓங்கி !

மாலையில் இருந்த நிலை முற்றுமாய் மாறி.
சுற்றிலும் சூழ்ந்ததே நீர் நிறைந்த ஏரி.
இன்றெந்தன் வீடு தனித்திருக்கும் தீவு,
தொடர்பற்றுப் போனதால் மனம் முழுதும் நோவு.

இத்தீவில் தனித்தமர்ந்து தத்தளிக்கும் போது
புத்தியில் உதித்தெழுந்த சத்தியமும் இதுவே!
அனைவரும் கூடிவாழ் வீடுகளின் உள்ளும்
தனித்தனித் தீவுகளாய் உள்ளதவர் உள்ளம்.

பக்கத்து வீடுகள் ஒவ்வொன்றும் தீவு அவர்
எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன ஆச்சு?
திக்கெட்டில் உள்ளோரும் என்னுறவு என்று
கொக்கரித்த காலம் மலையேறிப் போச்சு.

வீட்டுக்கு உள்ளேயும் வெவ்வேறு தீவு - தன்
பாட்டுக்கு அவரதிலே குடியேறி ஆச்சு.
முகநூலில் முழுகியே விடமறந்தார் மூச்சு
சகமனிதர் எவரோடும் இனி ஏது பேச்சு?

தொலைகாட்சி சீரியலில் ஒருசாரார் சரணம்.
அது நின்று போனால் அவரடைவார் மரணம்.
மிட்டாயை நொறுக்குகின்ற. ஆட்டத்தைப் பழகி
கிடக்கிறார் எப்போதும் அதற்குள்ளே முழுகி!

வெள்ளமும் முழுதாக வடிந்திடும் நாளை
தீவுகள் நிலத்தோடு சேர்ந்திடும் அவ்வேளை,
தன்னுள்ளே தானமைத்த தீவுகளை விட்டு
தனிமனிதர் வெளிவரவே, இறைவா, வழி காட்டு !

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம் ) (9-Dec-15, 3:48 pm)
பார்வை : 62

சிறந்த கவிதைகள்

மேலே