தனியொருவன் தவறினால் -கார்த்திகா

எப்போதும் போல்
பொறுமையோ சகிப்போ
கொண்ட அதி தீவிரத்துடன்
நடந்து கொண்டிருந்தபோது
அது நடந்தே விட்டது!
கச கச
காய்கறிச் சந்தையில்
ஊட்டி காரட் வந்திறங்கியதாய்
மணந்தாள் வண்ணப் பூச்சில்..
அவளுக்கும் கூட
அது புதிதாய்
இருந்திருக்கலாம்..
எப்போதும் போல்
கூச்சத்திற்கும்
நெளிவுகளுக்கும்
பழகி இருந்திருப்பாள்.....
அவள் தாய் சொல்லி இதை
அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்..
பக்கத்து கோவிலில்
சாமி கும்பிட வந்தவளை
நவ கிரகமாய் ஒதுக்கப்பட்டதில்
கூட்டத்திலிருந்து
விலகியே தெரிந்தாள்..
"இன்னைக்கு ஏதும்
சவாரி கிடைக்கலையோ இதுக்கு?"
என் யோசனையில் இடறி
அவசர வாகனத் திருப்பத்தில்
மண் மீது விழுவதற்குள்
மார் தாங்கினாள் என்னை..
காலணியைக் கழட்டி அறைந்து கொள்ள
முற்பட்ட போது எனைத் தடுத்த
அவளுள்ளும் தாய்மை துடித்திருக்கும்!!