திரும்பி விட்டாள் இறுதியாக
வைகறை துயில் எழுந்து வாயிலில்
உன் கருங்கூந்தலின் காய்ந்த மலரைப்
பிய்த்தெரிந்து கூந்தல் சுருட்டிக் கொண்டையிட்டு
நீர்த் தெளித்து வண்ணக் கோலமிடும்
அழகே! சற்றுத் திரும்பித்தான் பாராயோ!
உன்னழகு வெளிப்படும் அப் பொழுதில்
உன் திருமுகம் காண ஏங்கி
நிற்கிறேன் எதிர் வீட்டில். ஏழையாய்!
சோலையே! என்னைத் திரும்பித்தான் பாராயோ
ஏங்கி நிற்கிறேன் வலிதாங்கி நிற்கிறேன்
வண்ணமிலா உன் முகம் தேடி
கருவிழி நாடி. உன் கோ
அழகு உனக்குத் தெரியாது பெண்ணே!
யாமறிவோம். அது கருவிழி அல்ல
அது சுவையூட்டும் கன்னல் விழி
என்னை இழுக்கும் காந்த விழி
கண்ணைப் பறிக்கும் மின்னல் விழி
காத்திருக்கிறேன்.இன்னும் ஒற்றைக்
கன்னம் கூட காண இயலாமல்.
பைங்கிளியே! சற்றுத் திரும்பித்தான் பாராயோ!
திரும்படி பெண்ணே சற்றுத் திரும்படி
உன் ஒற்றைப் பார்வை போதுமே
எனக்கதுவே மேனி வருடி விடுமே
குயிலே! சற்று திரும்பித்தான் பாராயோ!
காத்திருந்து காத்திருந்து என் வீட்டு
கோலமும் கூட பூத்து விட்டதடி
மயிலே! சற்றுத் திரும்பித்தான் பாராயோ!
கதிரவனும் கண் விழித்து விட்டான்
உன் கல் மூக்குத்தியில்.பகலவன்
ஒளியில் மின்னுவது வெண்முகிலே
உன் கல் மூக்குத்தி மட்டுமா?
பொன் திருமேனியும் தானடி வெண்பனியே!
அன்னமே! சற்றுத் திரும்பித்தான் பாராயோ!
கதிரவனுக்கு முகக்காட்சி அளித்து விட்டு
எனக்கு மட்டுமேன் புறக்காட்சி கொடுக்கிறாய்
தமிழ் மகளே! சற்றுத் திரும்பித்தான் பாராயோ!
திரும்பிப் பார்த்தால் திருநாள் இன்று
இல்லையேல் காத்திருப்பேன் மறுநாளும் நின்று
கன்னலே! சற்றுத் திரும்பித்தான் பாராயோ!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! எழுந்து விட்டாள்
கோலமதை முடித்து விட்டு கோமகள்
ஒரு நொடி திரும்பி அவள்
சிகை விலக்கி என் முகம்
பார்த்து மின் னென நகைத்து
மானாய் உள் விரைந்து மறைந்தாள்.
இது போதும்! இந்நாள் எனக்கு இன்னாளே!