காட்சிப் பிழைகள் 5 - ஆண்டன் பெனி

முன்னுரை:
***************

உன் தாயக் கண்களை
உருட்டிக் கொண்டேயிருக்கிறாய்
ஒற்றைத் தாயமாக நான் விழ விழ...
******

எந்த மரங்களின் கீழிருந்தும்
இமைகளை மட்டும் விசிறி விடாதே
பூக்களற்றுப் போகின்றன மரங்கள்.
******

உன்னை வரைகிறேன்,
கண்கள் மட்டும் மீதமிருக்கிறது,
உன் பார்வைக்காக.
******


என்முறை:
**************

வண்ணத்துப் பூச்சியின்
கால் தடங்களை நுகர்ந்தே வருகிறேன்
உன் இருப்பிடம் தேடி.
******

நீயாகவும் அழைக்கவில்லை,
நானாகவும் வரவில்லை,
அழைத்து வந்த காதலோ
எனக்குள் ஒளிந்து கொள்கிறது.
******

என்னிலும் வாய் பிளந்து நிற்கிறது
அந்தத் தேனீர்க் கோப்பை
அதனிடம் எச்சரிக்கையாய் இரு.
*******

அறுந்து கிடக்கிறது
உன் கொலுசு..
அங்கே
சற்றுத் தள்ளி
நீ அறிந்தே
கிடக்கிறது
என் மனசு
******


உன்முறை:
***************

யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்றா
எச்சில்படுத்துகிறாய் உன் உதடுகளை...?
உதடுகள் அதில் விதிவிலக்கு.
******

நீ குளியலறையிலேயே தலை துவட்டி வருவதால்,
நான் சாரல் மழைக்கு அலைகிறேன்.
*******

பயன்படாது கிடக்கும் என் முத்தங்களை
நான் என்ன செய்யலாம், என்றாவது சொல்.
******

அகத்திணை
அளவேனும்
விலக்கி வை
உன் தோழியை
இது
நான்
உன்னை
தலைவியாக்கும்
தருணம்.

முடிவுரை:
*************

மல்லிகைப் பூக்கள் பூத்திருந்தன
நீ , அதன் வழியாகவே வந்தாய்
காதல் பூப்படைந்தது.
*******

இந்தக் கட்டிலுக்கு,
உன்னுடனே என்னைச் சுமக்க விருப்பம் போலிருக்கிறது...
புரட்டுகிறது என் உடலை அங்குமிங்கும்.
******

தொட்டில் பிடிக்கும் என்றாய்
மடையன் நான்...
உனக்கு, ஊஞ்சல் வாங்கி வந்துவிட்டேன்.
*******

…...ஆண்டன் பெனி

எழுதியவர் : ஆண்டன் பெனி (16-Dec-15, 2:24 am)
பார்வை : 621

மேலே