செல்ல மழையே வாராய்

"Rain Rain Go Away" பாடலை முற்றிலும் தடை செய்து விட்டு நம் குழந்தைகளுக்கு இதைப் போன்ற ஒரு மழைப் பாடலை புகட்டுவோமா ?

செல்ல மழையே வாராய் !
------------------------------------------------
மழையே மழையே வாராய் - உனை
அழைக்கும் என்னை பாராய் !
குளித்து மகிழ தினம் வருவாய் - உடல்
குளிர நனைத்து நீ பொழிவாய் !
குளங்கள் ஏரி நிரைத்திடுவாய் - நல்
வளங்கள் வாரி இறைத்திடுவாய் !
ஆறாய் மணற் மேல் நடந்திடுவாய் - குடி
நீராய் கிணற்றில் கிடந்திடுவாய் !
அணையில் பாசன நீர் தருவாய் - எங்கள்
அனைவர் பாசத்தை நீ பெறுவாய் !
விவசாயம், உழவர்கள் செழித்திடவே
அவசியம் தவறாமல் வந்திடுவாய்!
ஊரை சுத்தம் செய்திடவே - கனமழை 
நீரை பாய்ச்சி பெய்திடுவாய்!
பூமித்தாய் சூட்டை போக்கிடுவாய் - மழை
சேமித்தால் நாட்டையே காத்திடுவாய்!
அங்கிங்கு அலையாமல் இளைப்பாற - நீ
தங்கும் குளம் தூர்வாரி காத்திருக்கு!
வழி மாறாமல் மெல்ல வடிந்தோட 
வழியோரம் செல்ல இருபுறம் காலிருக்கு!
மண்ணைப் பற்றி குளிர்விக்க - என்
வீட்டைச் சுற்றி கொஞ்சம் நிலமிருக்கு!
நாட்டின் நலமோ உன் கையிளுண்டு - உனை
ஏட்டில் உணர்த்த பல செய்யுளுண்டு !
வீட்டில் நாங்கள் நால்வருண்டு - அதில்
நீயும் தங்க ஒரு ஓரமுண்டு !
நீயின்றி நீரின்றி நாங்களெல்லாம் - ஒரு
தாயின்றி வாடும் குழந்தையன்றோ!
நினைப்பதற்கு உன் பயன்கள் ஏராளம் - நீ
நனைப்பதாலே வாழும் இந்த பூகோளம்!
மழையே மழையே வாராய் - தினம்
அழைக்கும் என்னை பாராய் !

எழுதியவர்
-ஜெயராஜ் மணி

எழுதியவர் : ஜெயராஜ் மணி (17-Dec-15, 9:31 am)
பார்வை : 194

மேலே