3ஆதாமின் அப்துல்லா – பொள்ளாச்சி அபி

இருளை வேகமாக விலக்கிக் கொண்டிருந்த அதிகாலை,பல ஆண்டுகளுக்குப் பிறகு மேனியைத் தொட்ட இந்தியக் குளிர்காற்று.நாகூர் மீரானுக்கு உடல் லேசாய் சிலிர்த்தது.மெதுவாய் விழித்துக் கொண்டார். சென்னை துறைமுகத்தில் கப்பல் நின்றிருந்தது.

பொருள்தேடிச் சென்று,பல தலைமுறைகளாக ரங்கோனில் வசித்தவர்கள் தாங்கள் தேடிய பெரும் செல்வங்களையெல்லாம் இழந்து,பழந்துணிகளும்,சில பண்டபாத்திரங்களுமாய், சொந்த நாட்டில் அகதிகளாய் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

துறைமுகத்தின் வெளிவாயிலைக் கடந்து, முகாம் அமைத்திருந்த வெள்ளை அதிகாரிகள் கப்பலில் வந்து இறங்கியவர்களிடம் ஏதோ விசாரணை செய்வதும்,கோப்புகளில் எதையோ எழுதுவதுமாக இருந்தனர்.வரிசை நீண்டு கொண்டிருந்தது.

ஒரு மணிநேரத்திற்குப் பிறகு,மற்றொரு இடத்திற்கு அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு,அகதிகளின் தேவைகளைக் கவனிப்பதற்காக,சென்னை மேயர் தலைமையில்,‘பர்மா கஷ்ட நிவாரணக்குழு’என்ற பெயரில் அகதிகள் முகாம் அமைக்கப் பட்டிருந்தது.

அங்கு, பர்மாவிலிருந்து,அரகாண் மலைத் தொடர் வழியாக கால்நடையாகவே கல்கத்தா வந்து, அங்கிருந்து ரயில் மூலமாக சென்னை வந்தவர்களும் சேர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. அரகாண் மலைப்பகுதி வழியாக வரும்போது,பசி பட்டினியாலும், நோயினாலும் பல்லாயிரம்பேர் இறந்து விட்டதாகவும் வரிசையில் நின்றிருந்த பலர் பேசிக் கொண்டதைக் கேட்டு நாகூர் மீரானுக்கு மிகுந்த வருத்தமேற்பட்டது.

முகாமிலிருந்த அதிகாரிகள், அகதிகளின் முன்னோர்கள், உறவினர்கள் வாழ்ந்துவந்த ஊர்கள்,கிராமங்கள் குறித்து விசாரித்து,அங்கு செல்ல விரும்புவர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள இப்போதும் யாரேனும் அங்கே இருப்பார்கள் போலிருக்கிறது.

'தனது சொந்த ஊர் கீழக்கரை என்றாலும்,அங்கு இப்போது தனக்கான உறவினர் என்று சொல்லிக் கொள்ள யார் இருக்கிறார்கள்..?' , யோசித்துக் கொண்டிருந்த நாகூர் மீரானின் முறை வந்தபோது,“நீங்கள் எங்கே செல்கிறீர்கள்.. கோயமுத்தூருக்கா..?” அந்த அதிகாரி என்ன நினைப்பில் கேட்டாரோ தெரியவில்லை.

நாகூர்மீரானுக்கு அதனை மறுக்கத் தோன்றவில்லை. “ஆமாம்..” என்று தலையாட்டி வைத்தார்.

அன்று இரவு கோயமுத்தூர் செல்லும் ரயிலில் நாகூர் மீரானையும்,அதிகாரிகள் ஏற்றி அனுப்பிவைத்தனர். அடுத்தநாள் அதிகாலை நேரத்தில் போத்தனூர் வந்து இறங்கினார் நாகூர் மீரான்.

சென்னையைப் போலவே,போத்தனூர் ரயில்நிலையமும் மிகுந்த சந்தடியாகவே இருந்தது.வெள்ளைத்துரைகளும்,உடன்வந்த சீமாட்டிகளும் சளசளவென்று பேசியபடியே நிலையத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.அவர்களைத் தொடர்ந்து பெரிய பெரிய பெட்டிகளைத் தலையில் சுமந்தபடி இந்திய சுமைதூக்கிகள் ஓட்டமும் நடையுமாக பின்தொடர்ந்து கொண்டிருந்தனர்.

நிலையத்திலிருந்து வெளியே வந்த நாகூர்மீரானுக்கு அது புதிய இடம் என்பதால்,திசையும் தெரியவில்லை.அடுத்து எந்த ஊர்,எவ்வளவு தூரம் போகவேண்டும் என்றும் புரியவில்லை.
அகதிகள் முகாமில் கொடுக்கப்பட்ட இந்திய ரூபாய்கள் சில கையில் இருந்தது. எப்படியும் இரண்டு நாள் உணவுக்கு அதுபோதும் என்றே தோன்றியது. ' அதற்குப் பிறகு..? அல்லா விட்ட வழி..'

ரயில் நிலையத்திலிருந்து இரண்டு சாலைகள் பிரிந்து சென்று கொண்டிருந்தன. அதில் சாரட் வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருப்பதும்,அதில் அமர்ந்திருந்த துரைகள்,சீமாட்டிகளின் வண்ணத் தொப்பிகள் காலைச் சூரியனின் மெல்லிய வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தன..மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் நடக்கத் துவங்கினார் நாகூர்மீரான்.

“ரெண்டு நாளா.. எங்கெங்கியோ அலைஞ்சு திரிஞ்சு,இங்க வந்தப்போ,இந்த ஊரு எனக்கு ரொம்பப் புடிச்சுப் போச்சு.அதான் நேத்துராத்திரிலேருந்து இங்கியே தங்கிட்டேன்..”நாகூர் மீரான் சொல்லி முடிக்க, அவருடைய கதையைக் கேட்டு,முஸ்தபா உட்பட அனைவரும் ‘ஆண்டவனின் விளையாட்டை’ எண்ணி பெருமூச்சு விட்டனர்.

நாகூர் மீரானுக்கு ஆறுதலாக என்ன சொல்வது..எதைக் கேட்பது..? அங்கிருந்தவர்களின் மனங்களில் இனந்தெரியாத ஒரு சோகம் கப்பிக் கிடந்தது. அங்கு நிலவிய அமைதியில், அனைவரும் திணறிக் கொண்டிருந்தனர்.

முஸ்தபாதான் முதலில் சுதாரித்துக் கொண்டார். “யாகூப்..நீ உடனே போய்,இவர் சாப்பிடறதுக்கு ஏதாவது கொண்டு வா..” எனக் கட்டளையிட.., யாகூப் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டார்.

நாகூர் மீரானின் பக்கம் திரும்பிய முஸ்தபா..,“மீரான்..,இனிமே நீங்க எங்கியும் போக வேண்டா.இங்கியே தங்கிடுங்க.., தொழுகையில்லாத நேரத்துலே,இங்கிருக்குற குழந்தைகளுக்கு மார்க்கப் படிப்பை சொல்லிக் குடுங்க..! உங்க சாப்பாட்டுப் பிரச்சினைக்கு நாங்களாச்சு..நேரந் தவறாம,தினமும் ஒவ்வொருத்தர் வீட்டிலேயிருந்து சாப்பாடு உங்களைத் தேடிவந்துடும்.நீங்க எந்தக் கவலையும் பட்டுக்க வேண்டா.நீங்க பெரிய மனசு பண்ணி இதுக்கு ஒத்துக்கத்தான் வேணும்..” பணிவும்,அன்பும்,உரிமையுமாக சொல்லிய முஸ்தபாவின் பேச்சை மற்றவர்களும் உடனடியாக ஆமோதித்தனர்.

நாகூர் மீரானுக்கு இந்த ஏற்பாடு சற்று அமைதியைத் தந்தது.தனது மனதிற்கு பிடித்தமான வேலையாக இது அமைந்து போனதிலும், அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.., “இன்ஷா அல்லாஹ்..அப்படியே ஆகட்டும்.!”

அடுத்து வந்த நாட்களில்,குழந்தைகளுக்கான மார்க்கக் கல்வியை போதிப்பதும், பெரியவர்களுக்கு ‘ஹதீது’ எனும் மார்க்க உபதேசங்களை செய்வதுமாக,நாகூர் மீரானின் வாழ்க்கையில் புதிய பக்கங்கள் விரிந்து கொண்டு சென்றன.அவ்வப்போது,மற்றவர்களின் ஓய்வு நேரத்தைப் பொறுத்து அவர்களின் பங்களிப்புடன், பள்ளிவாசலை சுத்தம் செய்வதும் ,சிறிதும் பெரிதுமாக செப்பனிடும் வேலைகளையும் செய்து கொண்டார் நாகூர் மீரான். பள்ளிவாசல் இப்போது புது மெருகுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

தொழுகை நடத்த வருவோரின் எண்ணிக்கையும் இப்போது கணிசமாகக் கூடியிருந்தது. முஸ்தபாவின் அன்பையும்,பக்தூர் மக்களின் ஆதரவையும்,அரவணைப்பையும் எண்ணி,நாகூர் மீரானின் நெஞ்சம்,நாளுக்கு பல முறை நன்றி பாராட்டிக் கொண்டிருந்தது “ஆண்டவனே.. நன்றி..!”

------------தொடரும்.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (17-Dec-15, 7:45 pm)
பார்வை : 99

மேலே