மண்ணில் தமிழரின் மாண்பு

காதலும் வீரமும் கண்ணெனக் கொண்டிடுவார்
ஈதலும் அன்னாரின் இன்குணமே !- பேதமின்றி
நல்விருந் தோம்புவார் நட்புற வாடுவார்
இல்லறம் காப்பார் இனிது .

தாயகப் பற்றும் தமிழ்மொழிப் பற்றுதலும்
ஆயகலை கள்பேணும் ஆர்வமும் - நேயமுடன்
தானமுஞ் செய்து தரணியி லுள்ளளவும்
மானமுடன் வாழ்வார் மதித்து .

தன்மானம் மிக்கத் தமிழர் குணங்களுள்
நன்றிமற வாத்தன்மை நன்றாமே ! - அன்பினால்
வென்றிடுவா ருள்ளம் வியக்கவைப்பார் பண்பாட்டில்!
இன்னலெனில் கைகொடுப்பா ரே !

இறையச்சம் கொண்டே இறுமாப்பு மின்றி
கறையின்றிக் கற்புநெறி காப்பார் ! -நிறைவாய்
மனசாட்சி சொல்லும் வழிநடப்பா ரன்னார்
மனம்போல் சிறந்திடும் வாழ்வு .

மதங்களையுந் தாண்டி மனித முடைய
இதயங்கள் கொண்டோர் இவரே ! - அதனாலே
செல்லுமிட மெல்லாம் சிறப்பர் தமிழரே
இல்லைநிகர் பாரில் இவர்க்கு !

வந்தாரை வாழவைப்பார் வாட்டமும் போக்கிடுவார்
சொந்தமென அன்புடன் தோள்கொடுப்பார் ! - விந்தைதான் !
எண்ணற்ற பண்புடன் ஈடிணையில் லாதது
மண்ணில் தமிழரின் மாண்பு .


(துபாய் தமிழர் சங்கமம் நடத்திக்கொண்டிருக்கும் உலகளாவியக் கவிதைப்போட்டியின் இரண்டாவது சுற்றில் தேர்வாகிய கவிதை )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Dec-15, 10:22 pm)
பார்வை : 94

மேலே