மண்ணில் தமிழரின் மாண்பு
புண்ணியம் தாயவள் செய்ததன் புறமே
பூமியில் தமிழனாய் பிறந்ததென் வரமே
அந்நிய மொழிகளில் கண்டிடவொண்ணா
அருந் தமிழ் கனியே சொல் அதிசயத்தேனா?
பன்முக ஆளுமை உலகில் தமிழரின் மாண்பு
பறையென வாழும் மெய் தமிழ் ஒன்றே நம்பு
மண்ணில் தமிழரின் மாண்பது தெம்பு-உலகு
மதிக்கிற தருவென ஆனதை எடுத்து இயம்பு
அகத்தியர்,ஔவை,வள்ளுவன்,கம்பன், பாரதிவழி
அரு மருந்தான புதையலென் தமிழ் மொழி
அறம்,புறம் அற்ற அழகிய தமிழது விழி
அதற்கிணை ஏதடா பூமியில் புதிதாய் இனி
தமிழனே தமிழினை வாழ்த்த நீ முன் நில்
தமிழதன் புகழினை உயர்த்து நீ விண்ணில்
மண்ணில் தமிழரின் மாண்பது தெம்பு-உலகு
மதிக்கிற தருவென ஆனதை எடுத்து இயம்பு
போற்றிடப் பொக்கிஷம் போலே மொழியான்
பூமியை சாமியாய் வழிபடும் வழியான்
ஏர் தறி அடித்து சோறது நெய்பவன்-இவன்
எறும்பென உழைத்து துரும்பென போனவன்
உலகதன் பசிக்கு விருந்தென ஆனவன்
உக்கிய போதிலும் உழைப்பதால் வாழ்பவன்
மண்ணில் தமிழரின் மாண்பது தெம்பு-உலகு
மதிக்கிற தருவென ஆனதை எடுத்து இயம்பு
இயற்கையின் விதியில் விழுந்தது போதுமவன்
எழுகதிர் போலே எழுந்தவன் மீளுமவன்
சத்திய சோதனை பல சந்தித்த சாதியவன்
சக்தியை மீறியும் சமர் செய்த வாதியவன்
புத்தியினாலே விண்வரை தாவியவன்
புதுமைகள் செய்து அக்கினி ஏவியவன்
மண்ணில் தமிழரின் மாண்பது தெம்பு-உலகு
மதிக்கிற தருவென ஆனதை எடுத்து இயம்பு
தன் புலம் ஈட்ட தன் நலம் மறந்தவன்
தரணியில் எங்கும் உயர்வென உயர்ந்தவன்
தூக்கி நிமிர்ந்திடும் துணிவுடன் பிறந்தவன்
தூக்கிலிடையிலும் நிமிர்ந்தே இருந்தவன்
மண் நிலம் காத்திட உயிரது துறந்தவன்
மானிட மொழிகளில் தமிழனே சிறந்தவன்
மண்ணில் தமிழரின் மாண்பது தெம்பு-உலகு
மதிக்கிற தருவென ஆனதை எடுத்து இயம்பு
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.