சாவதற்கும் நேரம் காலம் வேண்டும்
நான்
முதலில் மரணித்த போது
திங்கள் கிழமை
மதியம் 11:30 மணி இருக்கும்
மறுநாள் அதே நேரம் வரை
என் உடலை வைத்திருந்தும்
உறவு, நட்பு ,தெருச்சனம்
என பல இருந்தும்,
பெருஞ்சாவுக்கான
கூட்டம் சேரவேயில்லை...
முகத்தில் துணிமூடி அழும்
என் மகனும்
பெருஞ்சாவுக் கவலையில்
அவ்வப்போது துணி விலக்கி
முச்சந்தி பார்க்கிறான்.
வேறுவழியின்றி நானும்,
சனிக்கிழமை நேற்று
அதே நேரத்தில்
மறுபடியும் இறந்தேன்
பெருஞ்சாவுதான்
ஆனாலும்,
அடக்கத்துக்கான நேரம்
12:15 மாயவரம் ரயிலைத்
தாண்டிவிடக் கூடாது என்று
மகன் அழுகையையும் நிறுத்திப்
பறபறக்கிறது கூட்டம்,
நேரத்தில் முடியாத போது
அதுவரை
மாயவரம் ரயிலை
அடக்கம் செய்துவிடுவார்களோ
என்ற பெரும் கவலைதான்
இப்போது எனக்கு.