காட்சிப் பிழைகள் - 12 - தர்மன்

காட்சிப் பிழைகள்
===============================

அழகியத் தருணங்களைத்
தின்னக் கொடுத்து நாம் வளர்த்த
இக்காதல் பூனை
அறையெங்கும் அலைகிறது
வெறி பிடித்த ஒரு மிருகமாக.

துயர வாசம் வீசும்
இவ்வறைக்குள்
நுழையமுடியவில்லை.

இந்த அலைகளின் பேரழுகையினூடே
உயிரை உருக்கி நீ தந்த இறுதி
முத்தம் தணலாய் தகிக்கிறது
தாங்க முடியவில்லை.

தற்செயலாய் உன் பெயர் கேட்கும்போதெல்லாம்
தன்னிச்சையாய் சிறிது புன்னகைக்கிறேன்.
பின் எதையெல்லாமோ நினைத்து
எனக்குள்ளேயே கொஞ்சம் அழுதும் கொள்கிறேன்.

ஒவ்வொரு செல்லிலும்
தீயாய் பரவுகிறது
இதயத்தில் அப்பியிருக்கும்
இந்தக் காதல்.

நீ இல்லா பொழுதுகளில்
தேம்பித் தேம்பி விம்முமிந்த
மனதை என்ன செய்வதன்றே
தெரியவில்லை.

தனிமைத் தீயில் தவியாய்
ஏங்கித் தவிக்குமிந்த காதலை
சேர்ந்தே அணைப்போம்
வாயேன்.

==============================

துளிகள் சில.......

இந்தக் கஸலைப் போலவே
புரியாத புதிர்தான் எனக்கு
இந்தக் காதலும்.

எனை மட்டும்
நனைக்கும் இதற்குப் பெயர்
மழை இல்லை.

நானெழுதி நீ கிழித்து வீசும்
ஒவ்வொரு கவிதையிலும்
காதலித்துக்கொண்டிருக்கின்றனர்
உன்னைப்போல் ஒருத்தியும்
என்னைப்போல் ஒருவனும்.

ஏமாறுகிறேன் எனத் தெரிந்தும்
ஏமாறிக்கொண்டே இருக்கிறேன்
இந்தக் காதலில்
ஒரு வாக்காளனைப் போலவே.

காதலைத்தான் கேட்டேன்.
இலவசமாய்த் தருகிறாய்
வலியுடன் வேதனையையும்
நமது அரசைப் போலவே.

உன்னை பூஜிக்கத்தான் விருப்பம்.
உன் காதலின் ஆகம விதியில்தான்
அனுமதி இல்லை.

முள்ளாகவும் இருக்கிறாய்
மலராகவும் இருக்கிறாய்
சமயங்களில்
வாழ்வாகவும் சாவாகவும்.

================================

-தர்மன்

எழுதியவர் : தர்மராஜ் (23-Dec-15, 12:59 am)
பார்வை : 515

மேலே