வருங்கால மனைவிக்கு
பெண்ணே, உனக்காக வானத்தை
வில்லாக்கிறேன் என்று
சொல்ல நான் ஒரு
வார்த்தை ஜாலக்காரனல்ல.
போட்டியும் போராட்டமின்றி உன்னிடம்
தோற்றவன் என்று சொல்லும்
கற்பனை கலந்த ஒர் யதார்த்தவாதி.
இன்பத்துடன் துன்பத்தை சுவைத்த
நெஞ்சினிலே உறைந்த மொழிகளை
செப்புகிறேன் கேள்.
என் உயிரினை உனக்கு
நிச்சியம் தர மாட்டேன்
அதன்மேல் எனக்கு முழுரிமை
கிடையாததால்.
உனக்காக இரத்தத்தை சிந்த
மாட்டேன் எனக்கு மூளையை
உபயோகிக்கும் திறன் உள்ளதால்.
என் உரிமையை விட்டுதர
மாட்டேன் சுகந்திரத்தை சுவாசித்ததால்.
பின், எதைதான் தருவாய்
என்கிறாயா ? கேள்.
நீ தளர்ந்து கிடக்கும்போது
என் தோள் கொடுப்பேன்
நீ தயங்கி இருக்கும்போது
என் அறிவைக் கொடுப்பேன்
நீ போட்டியிடும் போது
என் கைக் கொடுப்பேன்
நீ அழுகைக் கொள்ளும்போது
என் மார்பைக் கொடுப்பேன்
நீ ஊடல் கொண்டபோது
நான் நடிப்பேன்
நீ காதல் கொண்டால்
நான் அணைப்பேன்
நீ கட்டப் பட்டால்
நான் துடிப்பேன்
உன் சுகந்திரத்தில் தலையிடேன்
வாழ்வை உணர
முழுதுணையாய் நிற்பேன்
இணை வாழ்வையென்
மூச்சாக கொள்ளுவேன்
என் செயலின் பாதியை
உன்னிடம் இணைப்பேன்
உள்மனத்தில் நோக்கில்
உண்மை பொருளாய் விளக்குவேன்
தரும் பாதியை சொன்னேன்
கேட்கும் பாதியையும் கேள்
சிந்தையின் சிரத்தையில் உன்
அறிவுரை கேட்பேன்
மயக்கத்தை விரும்பும்போது உன்
இடை கேட்பேன்
தயக்கம் கொள்ளும்போது உன்
தோள் கேட்பேன்
சேயாக மாற நினைத்தால் உன்
நெஞ்சினைக் கேட்பேன்
சுவையை விரும்பும்போது உன்
அதரம் கேட்பேன்
தடுக்கி விழும்போது உன்
கை கேட்பேன்
மன்னிக்கா தவறுசெய்தால் உன்
கால் கேட்பேன்
காமம் கொள்ளும்போது உன்
உடல்முழுவதும் கேட்பேன்
சோகம் கொண்டபோது
அன்னையாய் மாறக் கேட்பேன்
உறவை உணர உன்
வாழ்வின் பாதியைக் கேட்பேன்
வார்த்தையால் வடிக்க
முடிந்தவை எழுத்தில்
மற்றவை என் நெஞ்சினிலே....
- செல்வா