நிலவு
நிலவு
வானவீதியில் உலவிடும் மங்கை – பால்
வெண்மையில் குளிர்பொழி கங்கை
கானமிசை காதலர்தம் துணை – அழகு
கன்னியர்க்கோ உன்னெழிலே இணை!
மாதம்தனில் ஒருபொழுதே ஓய்வு – நின்
மங்கல அழகினிலே ஏன் தேய்வு
தூதுபோவாய் கூடிடும் காதலிக்கு – உன்
தூதையும் வெறுப்பர் பிரிவாலே!
அலைமோதும் கடலினும் ஒளிவாய் – நின்
அழகுகண்டு மழலை திறக்கும் கனி-வாய்
மலைமீதும் ஓடியாடி தவழ்வாய்! –இம்
மண்மீது ஒளியென மிளிர்வாய்
இயற்கையன்னை தந்தாளே எமக்கு – வரும்
இரவுகளில் துணையாய் ஒளிவிளக்கு
மையல் கொண்டேன் உன்றன் மீது – என்
மோகம்தீர அழைத்துவா காதல்-மாது!
--- கே. அசோகன்

