பச்சை – ஒரு பக்க கதை

பச்சை – ஒரு பக்க கதை
ஒரு பக்க கதை
-----------
தன் காதலி நளினியின் பெயரை கையில் பச்சை
குத்திக்கொண்டது எவ்வளவு தவறு என்று ராகவனுக்கு
இப்போது புரிந்தது. அமெரிக்காவில் வேலை பார்க்கும்
பணக்கார சாஃப்ட்வேர் மாப்பிள்ளை கிடைத்தவுடன்
டாட்டா சொல்லிவிட்டு பறந்து போய்விட்டாள்.

ராகவன் வீட்டிலும் அவனுக்கு வேறு பெண் பார்த்து
விட்டார்கள். பச்சை குத்திக்கொண்ட பெயரை எப்படி
அழிப்பது? திண்டாடினான். நிச்சயதார்த்தத்தில்
முழுக்கை சட்டை போட்டு சமாளித்தான். எத்தனை
நாள் இப்படி?

விசாரிக்காத டாக்டர் இல்லை. லேசர் சிகிச்சை மூலம்
அழித்துவிடலாமாம். ஆனால் அதற்கு அவன் நான்கு
மாதச் சம்பளத்தை கட்டணமாகக் கேட்டார்கள்.

யோசித்துக் கொண்டிருக்கும்போதே மொபைல்
அடித்தது. வருங்கால மனைவி சுமாதான் பேசினாள்.

‘‘ராகவ், நேத்து டி.வி பார்த்தீங்களா?
என் ஃபேவரிட் நளினிக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு.
பத்து வயசில் என்னமா பாடறா! ஆறு மாசமா நடந்த
போட்டியில் அவளுக்கு நான் பயங்கர ரசிகை ஆயிட்டேன்!’’

ராகவனுக்கு அவள் பேச்சு பாட்டாக ஒலித்தது.
‘‘நான்கூட நளினிக்கு தீவிர ரசிகன். அவ பேரை பச்சை
குத்தியிருக்கேன்னா பார்த்துக்க…’’

‘‘நமக்குள்ள என்ன ஒற்றுமை… நான் கொடுத்து வச்சவ!’’

‘அப்பாடா!’ – பெருமூச்சு விட்டான் ராகவன்.

———————————–
வி.சிவாஜி

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (25-Dec-15, 9:51 am)
பார்வை : 116

மேலே