நடமாடும் பிம்பங்கள்
அந்த பீச்சில் தானே அதிக போலித்தனத்தை பூசிக் கொண்டு அமர்ந்திருப்பதாக ராஜனுக்குத் தோன்றியது.இது ஒன்றும் புதிதல்ல என்றாலும்,
இன்று இப்படி அவன் நடந்து கொள்வது அவனுக்கே ஆத்திரமாக வந்தது.தன் ஃபோனில் எடுக்கப்பட்ட எல்லா புகைபடங்களையும்
திரும்ப,திரும்ப பார்த்து சலித்துப் போனவனாய்,அதை பாக்கெட்டில் வைத்து விட்டு சுற்றும்,முற்றும் வேடிக்கை பார்க்க ஆயத்தமானான்.
அங்கு 3-4 இளைஞர்கள் ரேஸ் பைக்குகளை,பீச் ரோட்டின் இருபுறமும் மாறி,மாறி ஓட்டிக்கொண்டும்,அவர்களுக்குள்ளே விரட்டிக் கொண்டும்
வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தனர்.அங்கு சிலர் மட்டும் அதை கண்கொட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.நிச்சயமாக
அந்த இளைஞர்களின் வேகம் இவர்களை ஈர்த்திருக்க வேண்டும்.ஆனால் அங்கு பலரும் அவர்களுக்குள் பேசிக் கொண்டும்,சிரித்துக் கொண்டும்,
பொய்யாய் கோபித்துக் கொண்டும்....இவர்களுக்கெல்லாம் அந்த இளைஞர்களின் வேகம் சலிப்புத் தட்டியிருக்கக்கூடும் அல்லது
இவர்களின் ஆற்றாமை அதை ரசிப்பதை உதாசீனப் படுத்தியிருக்கக்கூடும்.ம்ம்ம்...ஒருவனுக்கும்,மற்றொருவனுக்கும் இந்த பொல்லாத
வேகம் தான் எவ்வளவு வாழ்வியல் மாற்றங்களை உண்டாக்கிவிடுகிறது என்று சிந்தித்தவனாய் பார்க்கிங்க் ஏரியாவை ராஜன் மீண்டும் ஒருமுறை
நோட்டமிட்டான்.சுந்தர் வருவதாகத் தெரியவில்லை.வருவதாக சொல்லியிருந்த நேரத்தையும் தாண்டி 10 நிமிடங்களுக்கு மேல் ஆகியிருந்தது.
"இங்கு வந்திருக்கக் கூடாது.எப்போதும் போல் இதையும் நான் தவிர்த்திருக்க வேண்டும்"-ராஜன் தனக்குள் சொல்லிக் கொண்டான்."சரி..இன்றைய
மோசமான நிலைக்குக் கூட,இப்படியான மன நிலை தான் காரணமோ,என்னவோ?:என்று தன்னை தானே ஆறுதல் படுத்திக் கொண்டான்.இருக்கலாம்..
போனமுறை பீச் காஃபி ஷாப்ப்ற்கு வந்திருந்த போது,ராஜனின் நிலையே வேறு.ராஜன் தான் அதிகம் பேசியிருப்பான்.தொழில்,எதிர்கால திட்டங்கள்,
ஃபண்ட்,ஷர்ஸ்....இன்னும் எத்தனையோ.அதையெல்லாம் இன்று நினைத்துப் பார்க்க அவனுக்கு சற்று பயமாகத் தான் இருந்தது."வாழ்க்கை எவ்வளவு
கொடூரமானது.நாம் நினனப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன?" என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டான்.
இந்த எண்ணவேட்டங்களில் இருந்து விடுபட எண்ணியவன்,அருகிலுள்ள ஸ்கேட்டிங்க் பிராக்டிஸ் இடத்தை நோட்டமிட்டான்.தன் கால்களை முன்னும்,பின்னுமாய் இழுத்துக் கொண்டு ஸ்கேட்டிங்க் வேகத்தை குழந்தைகள் அதிகபடுத்திக் கொண்டிருந்தனர்.பெரும் காற்றிலே அடித்துச் செல்லும்
தோணிக்களைப் போல பார்ப்பதற்கே ராஜனுக்கு பயமாகயிருந்தது.அதை 'பயம்' என்று தீர்க்கமாக சொல்லிவிட முடியாது.அது குற்றவுணராகக் கூட
இருக்கலாம்.அவனுக்கும் குழப்பமாகத்தான் இருந்தது.'சுந்தர்' என்று பெயர் கேட்ட பக்கம்,தன் தலையை மட்டும் திருப்பிப் பார்த்தான்.ஒரு சிறுவன்
தன் வலது கையில் சுண்டலையும்,இடது கையில் தண்ணீர் பேக்கெட் இருந்த பையையும் வைத்துக் கொண்டிருந்தான்.
பலகாலமாக ராஜனின் கவனத்திற்காக மட்டுமே காத்திருப்பது போன்ற அந்த சிறுவனின் பார்வையில் அப்படியான ஒரு ஈர்ப்பு.'வேண்டாம்' என்று
சொல்ல மனமில்லாமல் ஒரு தண்ணீர் பாக்கெட்டை மட்டும் ராஜன் வாங்கிக் கொண்டு, மீண்டும் தன் மண் கோலத்தை திருத்திக் கொண்டிருந்தான்.
"அவன் வந்தவுடன் தனக்கு வேலை இருப்பதாக சொல்லிக் கொண்டு கிளம்பிவிட வேண்டும்.அவன் முன் இயல்பாக நடந்துக் கொள்ள நிறைய
மெனக்கெட வேண்டும் போலிருக்கிறது"என்று தனக்குள் அழுத்தமாக சொல்லிக் கொண்டான்.அவனிடம் என்ன பேச வேண்டும் என்று தனக்குள்
ஒத்திகை பார்த்துக் கொண்டான்.ஆனால் அவன் பேச வேண்டும் என்று எண்ணியதில், பல இடங்களில் சென்சார் போட வேண்டிருந்ததால்,
அதையும் இடையிலேயே முடித்துக் கொண்டான்.விழா கூட்டத்தின் நடுவே அமர்ந்திருக்கும் பெண்களை போல,அடிக்கடி சட்டையை சரி பார்த்துக்
கொண்டான்.மூன்று வருடத்திற்கு முன்னால் சுந்தர்க்கு,அவன் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்த நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டதை
எண்ணினால் தன் மீது கோபத்தையும் தாண்டி,அவனுக்கான பரிதாபமே முன்வந்து நின்றது."பழைய மாதிரி அவனிடம் பேசுவதிலும்,அவனுக்கான
அறிவுரையோ,சமாதானமோ சொல்வதிலும் பெரும் தயக்கம்தான் உண்டாகும்" என்பதை அவன் காதில் யாரோ உரக்க சொல்வதை போல
உணர்ந்தவன்,அமர்ந்த இடத்தை விட்டு எழுந்து,தன் இரு கைகளால் பேண்டில் படிந்திருந்த மண்ணை தட்டிக் கொண்டிருந்தான்.அவன் தோளை
யாரோ தீர்க்கமாய் குலுக்கியதால் அதிர்ந்து போனவன் சற்றே இடுப்பை மட்டும் வளைத்து பின் நோக்கி பார்த்தான்.
பட்டெர்ஃப்ளை,ஸ்பைடெர்மேன்,சினிமா நடிகர்களின் ஸ்டிக்கெர்,ஃப்லௌஎர்
கேன்வாஸ் என பல மினுமினுப்பான ஐட்டங்களை வைத்துக் கொண்டு,ஒரு டல்லான முகம் அவன் முன்னே நின்று கொண்டிருந்தது.இங்கு பலர்க்கும்
வாழ்க்கை எவ்வளவு அபத்தமாய் போய்விடுகிறது?சென்னை போன்ற பெரு நகரங்களில் எல்லாம்,வாழ்க்கை இப்படித் தான்
வாழ்வதற்கும்,பிழைப்பதற்கும் இடையே நழுவிக் கொண்டே போகும் ."பரிவையும் கூட பணத்தில் காட்ட வேண்டும் என்றால் பத்து ரூபாய்க்கு
மேல் காட்ட முடியாத நிலையில் தான் இப்போது உள்ளேன்"என்று நினைத்துக் கொண்டவன், ஒரு பத்து ரூபாய் நோட்டை மட்டும் எடுத்துக்
கொடுத்துவிட்டு,பர்ஸை முன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
அந்த சிறு பெண் அதற்குள் எங்கு சென்றால் என்று அவன் கண்ணிற்கு எட்டிய தூரம் தெரியவில்லை."இப்படித் தான்
பயண வழிகளில் நாம் எத்தனை,எத்தனை சிறு தேவதைகளை தொலைத்துவிடுகிறோம்.எல்லா திசைகளும் ஒரு மாயைதான் போலும்"என்று
எண்ணிக் கொண்டு தன் வாட்ச்சை பார்த்தான்.சுந்தர் சொன்ன நேரத்தையும் தாண்டி 20 நிமிடங்கள் மேல் ஆகியிருந்தது.
"அவனுக்கு வேலை இருக்குமென்றால்,எனக்கு இருக்காதா என்ன?" என்று கோபித்தவன்...."இல்லை...சரிதான்..அது தானே உண்மையும் கூட.."-தனக்குள் சிரித்துக் கொண்டான்.
"சுந்தர் மிகவும் பண்பானவன்.இந்த இடைப்பட்ட நாட்களில் உதவி கேட்டிருந்தால் கூட செய்திருப்பான்.
ஏனோ கேட்கவில்லை.இதற்கும் அவன் 'நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்' என்ற வகையும்
எனக்கில்லை.ஒரு வேளை இந்த சமூகம் என் திறமையுன் மீது அளவுக்கு அதிகமாக கணக்கு காட்டிவிட்டதோ?அல்லது அப்படியான ஒரு இல்லுஸன்னில்
நான் காலத்தை துரத்தி தோற்றுவிட்டேனோ?"என்று யோசித்தவனுக்கு, இந்த யோசனையெல்லாம் ஆழமான ரணமாகவே இருந்தது.
"சமூகமாவது,மண்ணாவது...யாரவர்கள்?என் மீதான அவன் பார்வையும்,அவன் மீதான என் பார்வையும் தான் காரணம்.அவனை எனக்கு
குறைவாக எடை போட்டுவிட்டது கூட இன்றைய சஞ்சலமான நிலைக்கு காரணமாக இருக்கலாம்"என்று எண்ணியவன் மீண்டும் ஒருமுறை
சுற்றிலும் பார்த்துக் கொண்டான்.ஒன்றும் மாறிவிட்டதாகத் தெரியவில்லை.மானிட இயங்கியல் ஒரு மாற்றமும் இன்றி சுமூகமாகத் தான் இருந்தது.
"ஹாய் ராச்"-என்று குரல் கேட்ட திசையை நோக்கி தன் தலையை மட்டும் திருப்பினான்.சுந்தர் தன் காரின் கதவை சாத்திவிட்டு,அதை ஒருமுறை
சரி பார்த்துவிட்டு ராஜனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.எப்படி ரியாக்ட் செய்வதென்று தெரியாமல் கையை மட்டும் உயர்த்தி ராஜன் சிரித்தான்.
அந்த சிரிப்பின் போலியை சுந்தர் நிச்சயமாக கண்டிருக்க போவதில்லை.
"சாரிடா.கார் எடுத்துட்டு வர லேட் ஆய்ருச்சு." என்றான் சுந்தர்.
"பரவாயில்லை.நானும் அஃபிஸியலா ஒரு கால் பேசிட்டு இருந்தேன்..டைம் போனதே தெரிலடா" என்றான் ராஜன்.
"வாடா..கார்ல போய்டே பேசுவோம்"என்றவனிடம்,'சரி' என்று சொல்லிவிட்டு காரில் ராஜன் ஏறிக் கொண்டான்.
எப்படி,எதை ஆரம்பிப்பது என்று தெரியாமல்,"கார் இஸ் நைஸ்டா.புதுசா?"என்று ராஜன் கேட்டான்.
"ஆமாம்.ஷிஃப்ட் டிசேய்ர்.புது மாடல் ராச்"என்று ஒரு மெல்லிய புன்னகையை சிந்தினான் சுந்தர்.
"அது ஷிஃப்ட் இல்ல மாமா...ஸ்விஃப்ட்.இன்னும் உனக்கு ப்ரொனௌன்சியேசனே வர்லடா.
பின்னக் கணக்காவது இப்ப வருமா?"என்று கேட்க போனவன்.."கணக்கும்,ப்ரொனௌன்சியேசன விட காசும்,ப்ரொஃபைலும் தாண்டா முக்கியம் என்று
அவன் திருப்பி சொல்லிட்டா எங்க போய் மூஞ்சிய வச்சுக்கிறது?"-அமைதி காத்தான் ராஜன்.
அந்த பைக் ரேஸ் இளைஞர்கள்,பார்வையாளர்களை கவர இன்னும் வேகத்தை அதிகப்படுத்தி இருந்தனர்.ஒருமுறை திரும்பி பார்த்துக் கொண்டான்.
"சரி.எங்கடா டின்னெர் போவோம்?"என்றான் சுந்தர்.
"இல்லடா.முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு.உன்ன பாக்க தான் வந்தேன்.சாரிடா..அர்ஜெண்ட்...நீட் டு கோ"-ஆங்கிலத்தை கலக்க வேண்டிய நிர்பந்தத்தை
எண்ணி மனதில் கூசினான்.
"நோ ப்ராப்டா.நாளைக்கு பாம்பே போறேன்.வந்ததும் நம்ம மீட் பண்ணி பேசுவோம்" என்று கேசுவலாக சுந்தர் சொன்னான்.
தன்னை கத்திப்பாராவில் இறக்கிவிடும் படியாக ராஜ் சொன்னான்.அதிகமாக சுந்தர் தான் அந்த காருக்குள் குடியிருந்த அமைதியை களைத்தான்.
அதுவும் கூட இருளை களைக்கும் சூரியன் ஒளியை போலதொரு ஆதிக்கமாகத்தான் ராஜனுக்குத் தோன்றியது.இறங்குவதர்கான இடத்தையும் காட்டி,
காரில் இருந்து இறங்கிக் கொண்டான்,கையை மட்டும் உயர்த்தி காட்டிவிட்டு,வண்டி கிளம்பும் முன் எதிர்திசையை நோக்கி ராஜன் வேகமாய் நடந்தான்.
கிண்டி ரைல்வே ப்ளேட்ஃபாரம் வரை நடந்தே வந்ததில் கால்கள் கடுகடுவென வலித்தது.ப்ளேட்ஃபார சேரில் அமர்ந்து கொண்டான்.
தூரத்தில் அவன் பழைய ரூம்மேட் ராம் நிற்பதை பார்த்தான்.ஒரு கையில் ஃபைலும்,மற்றொரு கையில் ஃபோனையும் நோண்டிக் கொண்டிருந்தான் ராம்.
படிப்பை முடித்து இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் அவனுக்கு வேலை கிடைத்ததாகத் தெரியவில்லை.
'இங்கு எல்லோருக்கும் நாம் வாழ்ந்து,கடந்து வந்த மனிதர்களை தேடிப்போய் பார்க்க ஆசைதான்.அவர்களை அவர்களாகவே பார்க்க முடியுமா?
தெரியவில்லை.நமக்கும்,தெரிந்த மனிதர்களுக்கும் என்றுமே சமமே செய்ய முடியாத ஒரு தராசு நிற்காமல் ஆடிக் கொண்டிருக்கிறது.இங்கு சில
மனிதர்களின் மீதான நினைவுகளும் கூட பிம்பங்கள் தான்.நிகழ்காலத்தில் அதன் பிரதிபலிப்பை நாம் பிடிக்க நினைக்கையில் ஏமாந்துவிடும்
தருணங்களே அதிகம்.'
அங்கு நிற்கும் ராமுவின் பிம்பத்தை கொலை செய்யவோ,களைக்கவோ மனமின்றி ராஜன்,ரயிலை பிடிக்க வேகமாய்
ஓடிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான்."நடமாடும் பிம்பங்கள் தான் இந்த மனிதர்கள்"என்று சிரித்துக் கொண்டான்.
-வ.பாரி இளஞ செழியன்
10/3/2015