வாழும் கஸல்
............................................................................................................................................................................................
கஸல் வரிசையில் நானும் இடம் பெறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
திருவண்ணாமலையில் இந்த மழைப் பருவம் மிக இனிமையாகத்தான் கழிந்தது. சாத்தனூர் அணை விளிம்பு வரை நிரம்பி, வான மகள் முகம் பார்க்கும் கண்ணாடியாக மாறியிருந்தது. இருப்பினும் திருவண்ணாமலை கடை நிலை ஊழியர்கள் முதற்கொண்டு அதிகாரிகள் வரை பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கும் சென்று வந்து... சென்று வந்து... சென்று வந்து... மெஷினாக நடத்தப்பட்ட விதத்தில் பேசாம நம்ம பக்கமும் ஒரு வெள்ளம் வந்திருக்கலாம் போல... என்று சிந்தனை ஓடியது. ஒவ்வொருத்தரும் சேவை செய்த திருப்தியுடன் அவரவர் தகுதிக்கேற்ப எடுத்து வந்திருந்த அரை கிலோ முதல் ஆறு கிலோ வரையான மன உளைச்சலிலும் அலைச்சலிலும் அலுத்துக் கொண்டிருந்தனர்.
“ ஏய், உனக்கு கஸல் பற்றி ஏதாவது தெரியுமா? ” என்றேன் என் நண்பன் சுந்தரிடம்..
“ ஐயையோ, அங்கேயும் மெடிக்கல் காம்ப்பா? ” துள்ளிக் குதித்தான் அவன்.
நான் நாக்கைக் கடித்தேன். ஊஹூம்.. எல்லோரும் மெடிக்கல் காம்ப்பில்தான் இருக்கிறார்கள்.. நான் மாத்திரம் கஸலுக்கு தப்பிக்க முடியாது..
மௌனமானேன்..
சுந்தர் என் பக்கத்தில் வந்தான். “ ஏய், உணர்ச்சிப் பூர்வமான உயர்ந்த நிலைக் காதல்தானே கஸல்.. நேர்ல பார்க்கறியா? ” என்றான்.
நான் அவனை ஆச்சரியமாகப் பார்த்தேன். “ சுயநினைவில்தான் இருந்தியா? ” என்று கேட்டேன்.
“ஆமா, நான் எப்ப கோமா ஸ்டேஜூக்குப் போனேன், இப்ப சுயநினைவோடு இருக்க? ”
“ இல்ல, கேள்வி கேட்டு ஒரு மணி நேரமாகுது, இப்ப பதில் சொல்றியே? ”
“ சே! ரெண்டு நிமிஷம்தான் ஆகுது..! அத விடு; கஸலை நேர்ல பார்க்கறியா? ”
“ ஹை... எதுனா புரோக்ராமா? ”
“ இல்ல.. ஒருத்தனுக்கு மூளையில கட்டி இருக்கு; அது கொஞ்ச கொஞ்சமா உயிர் முடிச்சை அழுத்த ஆரம்பிச்சிருக்கு. அதனால அவன் நாட்கள் எண்ணப்படுது.. இருபது வயசுதான் ஆகுது அவனுக்கு.. மத்தபடி ஈரல், இதயம், கண்ணு எல்லாம் நல்லாயிருக்கு.. இந்தப் பையன் எப்படி இருப்பான்னு நினைக்கிற? ”
“ டிப்ரஸ் ஆகி, பயந்து போய்.. ”
“ அதான் இல்ல.. சந்தோஷமா இருக்கான்... என் அண்ணணோட நர்சிங் ஹோம்ல இருக்கான்... அவனை வந்து பாரு.. வாழும் கஸல் அவன்..! ”
சாவு எப்ப வேணுமானாலும் வரும்கிற நிலையில் அவன் எப்படி சந்தோஷமாய் இருக்கான்?
ஆவல் என்னைப் படுத்தியது. நர்சிங் ஹோம் போனேன்.. ஏதோ தோட்டத்துக்கு வந்ததைப் போலிருந்தது. மிக உயரமான ஒளி ஊடுருவும் ஃபைபர் கூரையின் கீழ் அசோக மரம், வேப்ப மரம் மற்றும் மாமரம்.. இவையெல்லாம் இயற்கை கிருமி நாசினிகள் மற்றும் கதிரியக்கத்தை தடுத்து நிறுத்துபவை.. குப்பென்ற மாவிலையின் சுகந்தம்.. பாத்தி பாத்திபாக துளசி, செம்பருத்தி, பொன்னாங்கன்னி போன்றவை தழைத்திருந்தன. இந்தப் பக்கம் பெரிய பெரிய கூண்டுகளில் லவ் பேர்ட்ஸ்.. புறாக்கள், வான்கோழிகள் மற்றும் செயற்கை ஓடை அமைத்து வாத்துக்கள்..! ஆஸ்பத்திரி வாசம் மருந்துக்குக் கூட இல்லை..!
தரைத் தளத்துக்கு முற்றிலும் எதிரான அமைப்பில் இருந்தது முதல் தளம் தொடங்கி மூன்றாம் தளம் வரையும்....! வடிகட்டப்பட்ட காற்று நுழையும் கண்ணாடிக் கூண்டுகள்.. “ம்ம்ம்.. ரும்ம்.. ” என்னும் எந்திரங்களின் இரைச்சல்.. வேதிப் பொருள்களின் வாசனை..! வெள்ளை மற்றும் பச்சை முகமூடி மனிதர்களின் நடமாட்டம்.. மைய கண்காணிப்பு அமைப்பு.. வானவில்லாய் நிறம் காட்டும் ஒயர்களில் தீவிர கண்காணிப்பிலிருந்த நோயாளிகளைப் பார்க்கிறபோது வலைக்குள் அகப்பட்ட திமிங்கிலத்தின் ஞாபகம் வந்தது...
நோயாளிகளின் அறைக்குப் பக்கத்திலேயே நர்சஸ் ஸ்டேஷன்.
நீரஜ் ரூம் எது என்றேன். அதுதான் அந்தப் பையன் பெயர்.
அதற்குள் சுந்தர் வந்து விட்டான். வந்ததும் வராததுமாய் இண்டர்காமை ஒற்றி, “ ரெண்டு சூப், கொஞ்சம் காளான், கீழே வச்சிட்டு எனக்கு ஃபோன் அடி..! ” என்றான்.
நீரஜ் அறைக்குப் பக்கத்திலிருந்த நர்சஸ் ஸ்டேஷன் போனோம். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை நோக்கினோம்..
மொட்டையடித்த தலையுடன் ஒரு இளைஞன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தான். மேம்போக்காகப் பார்த்தால் நோய் நொடியற்ற நல்ல தேகம் போல்தான் தெரிந்தது..
அவன் பார்வை மடிக்கணிணியில் லயித்திருந்தது.
அந்த அறையில் ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க பெண்ணின் படம் இருந்தது- தோட்டத்தில் பூப்பறிக்கிற பாவனையில்.....
துருதுருத்த பெண் போலும்.. கையொரு பக்கம், காலொரு பக்கம் இயங்கிக் கொண்டிருந்தது. முகத்தில் பாதிக்கும் மேல் கண்களோ என்று நினைக்கும்படியான பெரிய கண்கள்..! வரிசைப் பற்கள்..! சிரித்தும் சிரிக்காத உதடுகள்..! அலை பாய்ந்து விளையாடும் கூந்தல்...!
“ஆமா, இவன் என்ன பண்றான்? அந்தப் பொண்ணு யாரு? ”
“யாரா இருப்பாள்னு யூகிச்சு சொல்லு.. ”
“இவனோட காதலியா இருக்கலாம்.. ரெண்டு பேரும் உயிருக்குயிரா காதலிச்சுட்டு இருக்கலாம்.. அந்த பொண்ணு கொடுக்கற நம்பிக்கையில இவன் சந்தோஷமா இருக்கான்.., அப்படித்தானே? ”
“ ஐயே, அந்தப் பொண்ணை இவனுக்கு யார்னே தெரியாது, ஏன், இவன் பார்த்தது கூட இல்ல.. ”
” பின்னே அவ யாரு? ”
“ அவ பேரு வனிதா.. அந்தப் பொண்ணோட யூ டுயூப் படத்தைதான் இவன் பார்த்துட்டிருக்கான்..! ஜில்லுன்னு இருக்கா இல்லே! இவளுக்கு இதயத்தசை பலவீனமாயிருக்கு..! எப்ப வேண்டுமானாலும் இதயம் துடிப்பை நிறுத்திக்கும் ! ! இப்ப ஃபேஸ் மேக்கரை வச்சி காலத்தை ஓட்டிட்டு இருக்கா.. ஃபேஸ் மேக்கர் ஒரு மூணு வருஷம் நல்லா வேலை செய்யும்னு வச்சுக்கோ.. அப்புறம் திரும்ப நித்திய கண்டம்தான்.. ! இவளுக்குப் பொருந்துற மாதிரி ஒரு இதயம் கிடைச்சா.. அதாவது இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தா இவளுடைய பிரசினை தீரும்..! ”
“ அதாவது.. ”
“ அதாவது நீரஜோட இதயம் இவளுக்கு நல்லாப் பொருந்தியிருக்கு..! நீரஜ் இங்கே வந்தபோது கண்ணீரும் கம்பலையுமா டிப்ரஸாகத்தான் இருந்தான்.. அவன் பார்த்த டாக்டர்கள் எல்லோருமே அவன் பிழைக்க வாய்ப்பில்லேன்னுதான் சொல்லியிருந்தாங்க. ஆபரேஷன் செய்ய முடியாதபடி உயிர் முடிச்சோட கட்டி ஒட்டிட்டு இருக்கு..! கொஞ்சம்.. கொஞ்சமே கொஞ்ச்சம்... இடைவெளி கிடைச்சா கூட ஆபரேஷன் பண்ணிட முடியும்.. ஆனா இடைவெளிக்கு எங்கே போறது? இதுதான் அவன் பிரசினை..
அண்ணா அவன் கிட்ட பிரசினை பத்தி பேசவே இல்லே.. உடல்தானம் பத்தி பேசினாரு. இந்தப் பெண்ணோட வீடியோவை எல்லாம் காட்டினாரு.. அவன் மனசு வச்சா அவன் இதயம் சாவுக்கு அப்புறமும் துடிக்கும்னு சொன்னாரு.. ”
“ ஓ..! ”
“ நீரஜ் நல்ல பையன் சீலி..! அது மட்டுமில்ல.. உனக்கும் எனக்கும்தான் இதயம்கிறது ரத்தத்தை பம்ப் பண்ணுற ஒரு தசை..! ஆனா சாதாரண மனுசங்களுக்கு — அதுவும் நீரஜ் மாதிரி இளைஞர்களுக்கு இதயம்தான் வாழ்க்கையே..! அவனோட ஆசைகளின் ஊற்று அது..! அவனைப் பொறுத்த வரை எண்ணங்கள் அங்குதான் ஆரம்பிக்குது.. அது காட்டுற கனவுதான் கண்ணுக்குள்ளும் நாடி நரம்புக்குள்ளும் கசியுது...!
அவனோட இதயம் ஒரு அழகான இளம் பெண்ணுக்குப் போகுதுன்னா அதுல எவ்வளவு த்ரில் இருக்கு பாரு..! இதயத்தைக் கொடுப்பேன்கிறதுக்கு இதுதானே அர்த்தம்? இனிமே அவளுக்குள்ள அவன் உயிருக்குயிரா வாழப் போறான் இல்லையா? ”
“ சரி, அவன் பார்க்க சாதாரணமா இருக்கான்..! சந்தோஷமா இருக்கான்னு எப்படி சொல்ற? ”
“ ஈ ஈ ஜிதான்.. மூளை அலைகளை பதிவு செய்யற கருவி..! மனுசன் கிட்ட மேலோங்கியிருக்கற உணர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் மூளை அலைகள் உண்டாகும்.. ஆனந்தமா இருக்கிறபோது வெளிப்படுற அலைகளை இவன் கிட்ட ரெகார்ட் பண்ண முடியுது.. இது தவிர கல்லு மாதிரி இன்னொரு நிரூபணமும் இருக்கு..!
”
“ அந்த நிரூபணம் என்ன சொல்லுது? ”
“ இவன் சாவை வரவேற்கத் தயாராயிட்டான்னு சொல்லுது..! ஒரு நெருங்கிய நண்பனுக்காகக் காத்திருக்கிறது மாதிரி.. காதலிக்காக வழி பார்த்து நிற்கிற மாதிரி.. ”
நான் நீரஜின் காமெரா பதிவுகளைப் பார்த்தேன். கணிணிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான் – அதாவது அந்தப் பெண்ணுக்கு..! கண் கொள்ளுமளவு கண்ணீரும் உதடு கொள்ளுமளவு புன்னகையும்..!
“அது சரி, அந்த நிரூபணம் எங்கே? ”
சுந்தர் சற்றுத் தாமதித்தான், “ சொல்றேன்.. அதுக்கு நீ நாப்பத்தெட்டு மணி நேரம் பொறுத்திருக்கணும்..! ”
“ இப்ப கீழே வா..! சூப் வந்திருக்கும்.. ! ”
நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம்.
பிரமிப்பிலேயே இரண்டு நாட்கள் கழிந்தது. சாவை ஏற்கும் மனப்பக்குவம் தொண்ணூறு வயதுக் கிழவனாருக்கும் வாய்ப்பது அபூர்வம்..!
பகவான் ரமண மகரிஷி கூட புற்று நோயால் வேதனைப்பட்டிருக்கிறார்.. ! இந்த உடல் வேறு, நான் வேறு..! உடலின் முடிவு என்னை எந்த விதத்திலும் பாதிக்காது என்று எடுத்துக் கொள்கிற மன வலிமை அவருக்கு இருந்தது..!
இந்தப் பயல் தத்துவ ஞானியுமல்ல, யோகியுமல்ல.. ! வாழ்க்கையை அந்தப் பக்கமாக அறிந்து வந்த அனுபவசாலியுமல்ல..!
இவன் மென்மையான கனவுலக வாசி..! அந்தப் பெண்ணின் படத்தை வைத்துக் கொண்டு ஈடுபாட்டை வளர்த்துக் கொள்கிறான்..! இவனுக்குள் பக்குவமும் வைராக்கியமும் வந்ததெப்படி?
சுந்தர் நிரூபணம் என்றானே? என்ன நிரூபணம் அவனுக்குக் கிடைத்திருக்கும்? நாற்பத்தெட்டு மணி நேரம் கெடு சொன்னானே ஏன்? இவன்.. இவன் இறந்து விடுவானோ? அந்தப் பெண்ணுக்கு ஆபரேஷன் நடக்குமோ?
இருபது வயதில் எத்தனை கனவுகள் ஆசைகள் இருக்கும்! டாக்டர் சொல்வதை நம்புவதைத் தவிர இன்னொரு உடலில் இதயம் துடிப்பதற்கான சாத்தியக்கூறு இவன் அறியாததாயிற்றே..! பெற்றோர், உற்றம், சுற்றம், நண்பர்கள், பழகிய இடம்.. எல்லோரையும் மீண்டும் சந்திக்க முடியாதபடி பிரித்து எடுத்துச் செல்லும் வலி நிறைந்த அனுபவமல்லவோ மரணம்..! வனிதாவின் மேல் காதலை வளர்த்துக் கொண்டு காதலின் பெயரால் மரணத்தை தாங்குகிறான்.. இவன் உண்மையிலேயே வாழும் கஸல்தான்..!
நர்சிங் ஹோமில் இரண்டாவது தளத்தில் தனிமையில் கண்காணிக்கப்படுகிறான்.. நோய்த்தொற்று ஏற்படாதிருக்க..! மரணம் கொடுமையானது என்றால் அதைத் தனித்து சந்திப்பது அதிலும் கொடுமையான ஒன்று..!
நினைக்க நினைக்க பிரமிப்பே ஏற்பட்டது.. இளைய தலைமுறை வெகு சுலபமாக சிகரத்தை எட்டி விடுகிறது..!
அன்று சுந்தர் என்னை அழைத்துச் சென்றது அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகள் அனுமதிக்கப்படும் வார்டுக்கு..!
நான் உள்ளுக்குள் பதறினேன். பூ உதிர்ந்து விட்டதா? அந்தப் பெண்ணுக்கு இதய மாற்று சிகிச்சை நடந்து விட்டதா? சடக்கென்று ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது..
உள்ளே பார் என்றான் சுந்தர்..
இது ஆண்கள் வார்டாயிற்றே?
உள்ளே.. உள்ளே.. நீரஜ்...! ஆம்..! நீரஜ்..
“ ஏய்..! இவனுக்கு ஆபரேஷனே பண்ண முடியாதுன்னு சொன்னியே..! ” ” அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமாய் நான் கூவினேன்..
“ ஆமாம்.. அப்படித்தான் இருந்தது.. இது இவனோட பழைய சிடி ஸ்கேன்.. அந்த கட்டியைப் பாரு.. உயிர்முடிச்சு வரைக்கும் நீண்டிருக்கா.. இப்ப புது ஸ்கேனைப் பாரு.. கட்டி சுருங்கியிருக்கா.. இவனோட பாசிட்டிவ் மனநிலையால மூளைக்குள்ள சில ரசாயண மாற்றங்கள் நடந்திருக்கு..! எந்த ரசாயணமோ கட்டியை தின்னுருக்கு.. இன்னும் சொல்லப் போனா ஒரு தனிப்பட்ட ரசாயணம் இந்த வேலையைச் செய்திருக்காது.. கூட்டாக சில ந்யூரோ டிரான்ஸ்மிட்டர்கள் இந்த வேலையைச் செய்திருக்கணும்..! நான் நிரூபணம்னு சொன்னது இதைத்தான்..! சில மில்லி மீட்டர் இடைவெளி..!.. ஆபரேஷனை முடிச்சிட்டோம்.. லட்டு மாதிரி கட்டியை எடுத்துட்டோம்..! ஒரு வாரம் இங்க ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு வீட்டுக்குப் போயிட வேண்டியதுதான்..!
“ சந்தோஷம்..! சந்தோஷம்..! ! சரி... வனிதா என்ன ஆவா? அவ என்ன பண்ணிட்டிருக்கா? ”
மறக்காமல் கேட்டேன்..
“ யாருக்குத் தெரியும்? ” தோளைக் குலுக்கினான் அவன். “ கண்ணில பட்ட பொண்ணைக் காட்டி அண்ணன் அடிச்ச கப்ஸா அது..! அது இந்தளவு பலன் கொடுக்குமுன்னு அண்ணனுக்கே தெரியாது..! ”
“ அடப்பாவமே.. ” நான் சிரித்தேன்.. “ உங்க அண்ணன் நீரஜ் கிட்ட இப்ப என்ன சொல்வார்? ”
“ வனிதாவுக்கு வேற இதயம் கிடைச்சு முழுசும் குணமாயிட்டுப் போயிட்டா - உன்னை மாதிரியேன்னு சொல்வாரு..! ”
காதலுக்காக தற்கொலை செய்து கொண்டவர்களை நாங்கள் நிறையப் பார்த்திருக்கிறோம்.. காதலால் மரணத்தை வென்றவனை ஆசை ஆசையாக இப்போது பார்க்கிறோம்..!
முற்றும்