பணம் – ஒரு பக்க கதை

பணம் – ஒரு பக்க கதை
-------------
கொட்டும் மழை… சுற்றி எங்கும் பால் பாக்கெட்
கிடைக்கவில்லை. பசியில் அழும் குழந்தைக்கு
எதைத் தருவதென்று அமுதாவுக்குத் தெரியவில்லை.
அந்தக் குடியிருப்பெங்கும் அதே கதைதான்.

வாடிக்கையாய் பால் போட வரும் வேம்புலி, மழைக்கு
பயந்து வீட்டோடு இருந்துவிட்டதாகத்தான் எல்லோரும்
நம்பினார்கள். ஆனால், இங்கே வாடிக்கையாகத்
தரவேண்டிய பாலை, தண்ணீரில் தத்தளித்த அடுக்கு
மாடி குடியிருப்பில் அவன் அதிக விலைக்கு விற்றுக்
கொண்டிருந்தான்.

சம்பாதித்த அதிக லாபத்தை மிக்க மகிழ்ச்சியோடு
வீடு கொண்டு சென்ற வேம்புலிக்கு காத்திருந்தது
அந்தப் பேரதிர்ச்சி. வயோதிகத்தில் துன்பப்பட்டுக்
கொண்டிருந்த அவன் தாய் உயிர் பிரியும் தறுவாயில்
அல்லாடிக் கொண்டிருந்தார்.

பை நிறைய பணமிருந்தும் கடைசியாக அவன் தாயின்
வாய்க்கு ஊற்ற ஒரு மிடறு பால் வாங்க அந்தக் காசு
பயன்படவில்லை.

ஊரெங்கும் பால் தட்டுப்பாடு. மற்ற பால்காரர்கள்
மட்டும் என்ன பிழைக்கத் தெரியாதவர்களா?

இறந்த அவரை அன்று மாலையே அருகிலிருந்த மின்தகன
மயானத்துக்குத் தூக்கிச் சென்றான். இலவச அமரர் ஊர்தி
கிடைக்காததால், இரட்டிப்பாகக் காசு கொடுத்து தாயின்
தகனத்தை முடித்துவிட்டு வந்தான் வேம்புலி.
பணம் அத்தனையும் காலியாகியிருந்தது!

————————————-
எஸ்.கார்த்திகேயன்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (25-Dec-15, 9:55 am)
பார்வை : 164

மேலே