உனக்காக ஓர் ஆனந்த ராகம்

* பால்கனி வந்த
பால்கனி நீ...

கணினி யுகத்தில்
ஸரி கம பத நீ...!

* ஒரு பார்வை
நீ பார்த்தால்
கிணற்றுத்தவளையும்
கடலில் குதிக்கும்...

ஒரு வார்த்தை
நீ சொன்னால்
கூண்டுக்கிளியும்
அரிமா பிடிக்கும் ...!

* நீ பூச்சூடி
நான் பார்த்ததில்லை
நீயே பூ ஆனதால்...

உன் கொலுசொலி
நான் கேட்டதில்லை - பூஞ்
சிரிப்பே இசை ஆனதால் ...!

* திரும்பிப் பார்க்கிறது
சூரிய காந்தியும் ;
நீ அணியும்
மஞ்சள் சுடியை...

விரும்பிக் கேட்கிறது
வானவில்லும்
உன் கூந்தல்
ஜடைமாட்டியை...!

* உன்
காது மடல் தழுவும்
பிளாஸ்டிக் கம்மலாய்
பிறவியெடுக்க ;
கண்ணடிக்கின்றன
நட்சத்திரங்கள்...

உன்
செவ்வாய் பருகும்
சிறு கேன் வாட்டராய்
உன்னுள் வழிய ;
மோதுகின்றன
கார்மேகங்கள் ...!

* அது
கருநிற
கேர்பின்கள் அல்ல ;
மழை மேகங்களை
பூட்டி வைத்த சாவிகள்...

இது
வலத்தோளில்
உலவிடக் கண்டால் ;
உளம் கலைந்தே
யாசிக்கும் சில காவிகள்...!

* நீ
நெற்றியில் வைக்கும்
புள்ளி போட்டுக்காக ;
தன்னைத் தேய்க்கிறது
பெளர்ணமி...

நீ பார்த்தும் பாராது
போகும்போதெல்லாம் ;
தணலாய்க் காய்க்கிறது
தாமரை...!

* வெண்ணிலவை
கொள்ளி வைத்து
கிள்ளிச் செய்த மோதிரம்
உன் விரலில்...

மின்னலிலே
நூல் எடுத்து
வெள்ளி சேர்ந்த சங்கிலி
உன் மார்பில் ...!

* " நானே தங்கம்தான் "
சொல்லாமல் சொல்லி
வெள்ளியை அணிகிறாயோ...

விளையாட்டுப் பிள்ளையாய் - என்னை
கொல்லாமல் கொன்று
வெட்கத்தைப் பொழிகிறாயோ...!

* மூச்சுக்காற்றை மட்டும்
வாய் வழியே விட்டு ;

வெடுக்கென நீ
நகைக்கும்

நிசப்தமொழிச்சுவை
மூன்றாம் பாலிலும் இல்லை ...


தமனிய மேனியே உன்னை
தயங்கியே நான் நெருங்க ;

பொசுக்கென நீ
மறைய

எரியும் மௌனம்
மயானக்கரையின் பிள்ளை...!


* இடக்கை மணிக்கட்டில்
மங்கலக்கயிறு - வாழ்வுதான் ;
பூமியில்
புண்ணிய ஜீவன்...

வலக்கை மணிக்கட்டில்
செல்லற்ற கடிகாரம் ? - மின்னணு
நாடியில்
நேரம் காட்டும் ...!


* கனமழையிலும்
வருகிறாய் வெயிலாய் ...

தார்ச்சாலையிலே
தெரிகிறாய் மயிலாய் ...!


* முகத்திரை போடுகிறாய்
அகச்சிறை ஆகாமல் ...

அகச்சிறை ஆனதனால்
முகத்திரை போடுகிறாய்...?

* நீ போகும்பேருந்தில்
கேட்கிறேன் நீலாம்பரி ...

நீ இல்லா பேருந்தில் - இருந்தும்
நானில்லை முகாரி ...!

* நீர் வேண்டும் நிலமாய்
நீ வேண்டும் வேராகிறேன் ;

நீ தீண்டிப் போகாமல்
தீ தீண்டும் சருகாகிறேன் ...!


* நீ தொட்டுத் தழுவ
மௌசுக்கும் மூச்சே இல்லை ;

நீ நெருங்கி விலக
யாரோடும் பேச்சே இல்லை...!


* என்
கீ போர்டிலும் பட்டன் இல்லை
உன் பேர் தவிர ;

நீ நீங்கினால் பட்டம் இல்லை
என் வான் உதிர...!.....


* உன்னைக் காதலிப்பவர்
ஆயிரம் பேர் உண்டு ;

உன்னால் காதலானவன்
நானொருவன் மண்டு...?


* வானவில்லும் வணங்கும்
வண்ணங்களில் வாழ்கிறாய் ;

வாழாமல் வாழ்ந்து - உன்
எண்ணங்களில் வீழ்கிறேன் ...!


* லட்சம் பதிப்பு
உன் விழி ;

அறிவாயோ
என் வ(லி) ழி...!


* நீ சிரித்தால்
தலைப்புச்செய்தி ;

நீ முறைத்தால் - மலரும்
இரங்கற்பா ...!


* " என் காதல்
நான் சொல்ல
நழுவுகின்ற பெண்ணோ ;

அழுகின்ற
என் ஆண்மை
காவியமோ மனமே...! "


* இப்போதெல்லாம்
சுவாசம் குறைந்து
வருத்துகிறேன் யாக்கை ;

ஏனோ ?

நிமிடத்திற்கு
இருபது முறை
உறிஞ்சுகிறாய் மூக்கை...!


* சொல் ...

இமைகளால்
இமயத்தை அறுக்கிறேன் - உன்

இமைகளால்
இதயத்தை இழக்கிறேன்...!


இயந்திர நரகம்
இனிது - இதில்

இதயமில்லா பயணம்
கொடிது...!


* எதார்த்தம் மீறிய
பிதற்றல் பேர்வழியாய் நான் ;

எல்லை மீறிய
அதிகப்பிரசங்கியாய் நீ...

பொருத்தம்தான் ....!!!


* " மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள் "- ஆம்

மாற்றமில்லை;

" என்னில் நீ பாதி
உன்னில் நான் பாதி" - வேறு

ஆற்றலில்லை...!


* எட்டாம் ஸ்வரம்தான்
நீ போடும் சொடுக்கு ;

எட்டுமோ வரம்தான்
மணமாலை எனக்கு ...!


* கண்றாவி நிகழ்வுதான்
இருக்கட்டும் ;

பார்க்கிறேன்
காதலை கடவுளாய் ...


கல்லறை சென்றும்
மறுஜென்மம் ;

எடுக்கிறேன்
கண்ணே சேராயோ...! ?


* என் காதல்
நீ மறுத்தால்
நடமாடும் பிணமாவேன் - அன்றேனும்

என் காதல்
நீ புரிந்தால்
உலகாளும் மனதாவேன்...!


* என் அன்பைச் சொல்ல
தாயில்லை உலகில் ;

தமிழன்னை சொல்வாள் -ஓர்நாள்
வழிமறித்து உன்னில் ...!


* உயிரே...!

ஒருவேளை ;

நீயும்
என்போல்......! ?

எழுதியவர் : (25-Dec-15, 6:57 pm)
பார்வை : 105

மேலே