லேப்டாப் மழையில் நனைந்தால் முதலுதவி டிப்ஸ்
மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி உதவி செய்கிறார்கள். நீரில் நனைந்த கணினி மற்றும் லேப்டாப்களை இலவசமாகப் பழுது நீக்கவும் சிலர் முன் வந்தார்கள்.
சென்னையைச் சேர்ந்த ஜி.பி.எஸ் சிஸ்டம்ஸ் & சர்வீஸ் நிறுவனம் தனது 9 கிளைகளிலும் டிசம்பர் 14 முதல் 20 வரை இலவச லேப்டாப் சர்வீஸ் செய்தது.
‘பயிலகம்’ எனும் மென்பொருள் பயிற்சி நிலையம் டிசம்பர் 13 மற்றும் 20 என இரண்டு ஞாயிறுகளில் மட்டும் லேப்டாப் / டெஸ்க்டாப் இரண்டையும் சர்வீஸ் செய்து தந்தார்கள். லேப்டாப் மழையில் நனைந்துவிடும்போது பொதுவாக மக்கள் செய்யும் தவறுகள் என்ன? என்ன செய்வது நல்லது? அனுபவபூர்வமாக சில டிப்ஸ்களை வழங்குகிறார் ஜி.பி.எஸ் சிஸ்டம்ஸ் & சர்வீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நாகேந்திரன்...
‘‘பொதுவாக லேப்டாப், மொபைல் உள்ளிட்ட எந்த மின்னணுப் பொருளாக இருந்தாலும் தண்ணீரில் தற்செயலாக நனைந்துவிட்டால், உடனடியாக அதை ஆஃப் செய்துவிட வேண்டும். பேட்டரி, பவர் சாக்கெட் என அதற்கு மின்னூட்டும் பொருட்களை உடனடியாகத் துண்டித்துவிட வேண்டும். மீண்டும் உடனடியாக ஆன் செய்யவே கூடாது.
தண்ணீர் லேப்டாப்புக்குள் சென்றிருந்தால் அது உள்ளே இருக்கும் இன்வெர்ட்டர் பகுதிக்குச் சென்றால்தான் ஆபத்து. அது பெரும்பாலும் லேப்டாப் மடியும் பகுதியில்தான் இருக்கும். அதற்குள் தண்ணீர் இறங்காமல் இருக்க வேண்டுமென்றால் லேப்டாப்பை V வடிவில் திறந்து அதை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்து கூடாரம் போல வைக்க வேண்டும். இதில் தண்ணீர் பெரும்பாலும் வடிந்து விடக்கூடும்.
அடுத்த கட்டமாக லேப்டாப்பில் எந்தெந்த உறுப்புகளை எல்லாம் கழற்றி எடுக்க முடியும் என சோதியுங்கள். நவீன மாடல் லேப்டாப்களில் ஹார்டு டிஸ்க், டி.வி.டி டிரைவ் போன்றவை எளிதாகக் கழற்றி மாட்டக் கூடிய வகையில்தான் தரப்படுகின்றன. பின்பக்கம் உள்ள ஒரு சின்ன ஸ்குரூவைக் கழற்றுவதன் மூலம் ரேம் போன்றவற்றைக்கூட கழற்றலாம்.
உங்களால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு பொருட்களைக் கழற்றினால் போதும். தெரியாமல் கழற்ற முயன்று எதையும் உடைத்துவிட வேண்டாம். கழற்றிய பொருட்களில் எங்கேனும் ஈரம் இருக்கிறதா எனப் பார்த்து சுத்தமாகத் துடைத்துக் காய வைக்க வேண்டும்.
பெரும்பாலும் கீ போர்டு மூலமாகத்தான் தண்ணீர் உள்ளே புகும். எனவே ஒரு மெல்லிய துணி அல்லது பஞ்சு, தேவைப்பட்டால் பட்ஸ் கொண்டு கீபோர்டின் இடைவெளிகளில் நன்கு துடைக்க வேண்டும்.
எலக்ட்ரானிக் பொருட்களில் உள்ள ஈரத்தை முற்றிலுமாகக் காய வைக்க ஹேர் டிரையரைப் பயன்படுத்தலாம். பார்ட்ஸ்களை பிரித்துவிட்டு, அது பொருத்தப்பட்டிருந்த இடைவெளி வழியாக ஹேர் டிரையரின் வெப்பக் காற்றை உட்செலுத்தலாம். ஆனால், அது நம் கை பொறுக்கும் சூட்டில்தான் இருக்க வேண்டும். ஒரே இடத்தில் அதிக நேரம் வெப்பக்காற்றைப் பாய்ச்சவும் கூடாது. வெப்பக்காற்றால் உள்ளே உள்ள சால்டரிங் ஈயம் உருகி பாதிப்பு வர வாய்ப்பிருக்கிறது. ஆக, இந்த முறையில் உலர வைக்கும்போது கவனம் அதிகம் தேவை. கணினி குறித்த அடிப்படைகள் அறியாதவர்கள் இதை முயலாமல் இருப்பது கூட நல்லது.
இந்த முதலுதவிகள் எல்லாம் முடிந்துவிட்டால், லேப்டாப்புக்குள் கொஞ்சமும் ஈரம் இல்லை என உங்களுக்கே நம்பிக்கை வந்தால், மெல்ல அனைத்தையும் பொருத்தி, பேட்டரியையும் இணைத்து ஆன் செய்து பார்க்கலாம். திரை உயிர் பெற்றுவிட்டால் உங்கள் முயற்சி சக்ஸஸ். ஒருவேளை அது பவர் ஆன் ஆகவில்லை என்றாலோ, சத்தம், தீப்பொறி உள்ளிட்ட பிரச்னைகள் நேர்ந்தாலோ, உடனடியாக பேட்டரியை நீக்கி சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்வதே நல்லது.
முதலுதவி முயற்சி வெற்றிகரமாக அமைந்தாலுமே கூட அவர்கள் எங்களின் இலவச சர்வீஸைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே அறிவுறுத்துகிறோம். காரணம், சர்க்யூட் போர்டை நீர் நனைத்துச் சென்ற தடயம் எப்படியும் அதில் இருக்கும். அதன் மீது பூஞ்சை போல வெண்மை படிந்திருக்கும். இப்போதில்லை என்றாலும் அது காலப் போக்கில் எப்போதாவது ஷார்ட் சர்க்யூட் ஆகி லேப்டாப்பை வீணாக்க வாய்ப்பிருக்கிறது. சர்வீஸ் சென்டர் என்றால் லேப்டாப்பை முழுவதுமாகப் பிரித்து ஐ.பி சொல்யூஷன் கொண்டு சுத்தப்படுத்திவிடுவார்கள். இது முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்யும்!’’
டெஸ்க்டாப் கணினி நனைந்தால் என்ன செய்வது? அதைச் சொல்கிறார் ‘பயிலகம்’ நிறுவனத்தின் இயக்குனர் மணிகண்டன்...‘‘லேப்டாப்பை விட கணினி சி.பி.யூவைக் கழற்றுவது சுலபம். முடிந்தவரை அதன் உறுப்புகள் அனைத்தையும் கழற்றி வெயிலில் ஒரு நாள் முழுக்க உலர்த்துவது நல்லது. ரொம்ப நனைந்து விட்டிருந்தால் முடிந்தவரை பவர் ஆன் செய்யாமலேயே சர்வீஸுக்குக் கொண்டு வருவதுதான் சிறந்தது.
ஈரம் உலராமல் ஆன் செய்துவிட்டால் கிட்டத்தட்ட மதர் போர்டையே மாற்ற வேண்டிய நிலை வரலாம். அது பெரிய செலவு. சிலருக்கு செலவை விட டேட்டா முக்கியம். தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான பாஸ்வேர்டுகளைக் கூட கணினியின் நினைவகத்தில்தான் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் பலர். ஆனால், அவசரப்பட்டு ஆன் செய்து ஹார்டு டிஸ்க்கையே செயல் இழக்கும்படி செய்துவிடுகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் இலவசமாக டேட்டாவை எடுத்துக் கொடுத்தோம். ஆனால், இத்தனை முக்கியமான தகவல்களை கணினியில் சேமித்திருப்பவர்கள், தங்களின் சொந்த முதலுதவி எதையும் நம்பாமல் மிகமிக கவனமாக செயல்படுவதும் உடனுக்குடன் நம்பகமான சர்வீஸ் சென்டரை நாடுவதும் அவசியம்!’’
ஈரம் உலராமல் ஆன் செய்துவிட்டால் கிட்டத்தட்ட மதர் போர்டையே மாற்ற வேண்டிய நிலை வரலாம். அது பெரிய செலவு. சிலருக்கு செலவை விட கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கும் வங்கிக் கணக்கு பாஸ்வேர்டு போன்ற டேட்டாக்கள் முக்கியம்.
நன்றி - குங்குமம்