காதல் தேவதையே

விழிகளில் காதல்
விதைகளைத் தூவிய தேவதையே !
வழியும் அமுதில்
பிரம்மன் எழுதிய ஓவியமே !
வழியினில் காணும்
மலர்களில் உன்முகம் யார்வரைந்தார் ?
எழிலாய் வரைந்தவர்
யாரெனச் சொல்லடி என்னுயிரே !

கரும்பினைத் தூணாய்
எழுப்பியே கட்டிய மண்டபமே !
கரங்களில் வந்தும்
கமழ மறுக்கிற செண்பகமே !
விரும்பியபோதும்
வெளியினில் சொல்லத் தயக்கமும் ஏன்?
வெறுப்பது போலே
நடிப்பதும் ஏனடி என்னுயிரே ?

உயிர் வரை சென்றே
உறக்கம் கலைத்தெனைத் தாக்குகிறாய்!
கயிறாய் இளைக்கும்
வகையில் வருத்தியே வாட்டுகிறாய் !
பயிராய் இருக்குமென்
பார்வையில் நீரென நீவருவாய் !
வெயிலாய் போசுக்கிஎன்
வேரினைத் தீய்ப்பதும் ஏனடியோ?

கனவினில் எல்லாம்
கனியாய் இனிப்பவள் நீயன்றோ
நினைவினில் மாயம்
நிறைத்திடும் தேவதை நீயன்றோ
உணவாய் இருந்தே
உயிரில் கலப்பவள் நீயன்றோ
மனதைப் பிழிந்து
மறைவாய் இருப்பதும் ஏனடியோ ?

ஒருநாள் என்னுயிர்
சேரும் துணையென நீவருவாய் !
திருநாள் அதுவென
மாறும் பொழுதினில் தோள்தருவாய் !
இருளில் விளக்காய்
இருந்தென் ஒளியினை நீவிதைப்பாய் !
உருகிக் கரைந்தேன்
உயிர்தரும் தேவதை நீதானே !

எழுதியவர் : மதிபாலன் (27-Dec-15, 4:42 pm)
சேர்த்தது : மதிபாலன்
Tanglish : kaadhal thevathaiye
பார்வை : 142

சிறந்த கவிதைகள்

மேலே