விதையினைத் தெரிந்திடு
வெற்றுப் பேச்சில் வாழ்வினைத் தொலைத்து
பற்றினை இழந்திடும் பரிதாபம் போக்கு
முற்றிப் போனால் முருங்கையும் வீணே
வற்றிப் போனால் வாழ்வும் வீணே
கற்றுக் கொண்டு காரியம் ஆற்று !.........
வெற்றி தராத புகழைக் கூட
தோல்விகள் தந்திடும் துவண்டு போகாதே
வெற்றுக் கையென வேதனை கொண்டு
அற்றது வாழ்வென அலுத்துக் கொள்ளாதே !......
விரல்கள் பத்தும் வீரமாய் இருக்கு
உரமோடு நீயும் உழைத்துப் பாரு
உலகமே உன்னை வியந்து பார்க்கும்!......
கற்றிடு !கற்றதைப் பற்றுடன் பிடித்திடு
உற்றென வெல்லாம் உறவென வந்திடும்!
விதையென உன்னை மண்ணில் விதைத்தார்
புதைந்து போனாலும் முளைத்து எழுவாய்
வீரிய விதையாய் விரைந்து வளர்ந்து
விருட்சமாய் விரிந்து நிழலினைக் கொடுப்பாய்
பழுத்த மரமாய் பலனைத் தந்து
பசியினைப் போக்கும் பக்குவம் பெறுவாய்.
பறவைகள் தங்கும் வேடந் தாங்கலாய்
நிறைவைப் பெறுவாய் நிம்மதி அடைவாய்.
பிறப்பது சம்பவம் ஆயினும் உந்தன்
இறப்பது இருக்கணும் சரித்திர மாக ....
வேற்றுமை தன்னை நெஞ்சில் விடுத்து
ஒற்றுமை கொண்டு உலவிடப் பாரு....
உற்றவர் உன்னை உதறித் தள்ளினும்
மற்றவர் உன்னை மதித்து நிற்பார் !
மதங்களைக் கடந்து மனதை மதித்த
அப்துல் கலாமை நெஞ்சில் நிறுத்து !!!
அதர்மங்கள் கூட அடங்கிப் போகும் !
கோடியில் பிறந்தும் கோடி மக்கள்
தேடியே வந்து தேம்பி அழுததும்
நாடே நெஞ்சம் வெடிக்கத் துடித்ததும்
வீடெல்லாம் வேதனை நொறுங்க வைத்ததும்
நெஞ்சில் கொஞ்சம் நினைத்து பாரு
எதுவாய் ஆகணும் என்பதை உணர்ந்து
அதுவாய் ஆகிட எழுவாய் நீயும் !
தன்னலம் தொலைத்து தலைமகன் ஆகி
உன்னையும் மண்ணில் விதைக்கப் பாரு ..........