சேர்ந்து வாழ்வதே அன்பாகும்

அன்னை வடிவம் அன்பு
அழகின் உருவம் அன்பு
ஆணுடன் பெண்ணை இணைத்து
அகிலத்தைக் காப்பதும் அன்பு

உண்மை உரைப்பது அன்பு
உலகத்தின் இயக்கம் அன்பு
துன்பம் வந்திடும் நேரம்
துயரைத் துடைப்பது அன்பு

அண்ணல் காந்தி புத்தர்
அறிந்து சொன்னது அன்பு
அப்துல் கலாமின் மனதில்
ஆழ்ந்து பதிந்ததும் அன்பு

அன்னை தெரசா மண்ணில்
அருளிய சேவையும் அன்பு
வள்ளல் இராம லிங்கர்
வாரிக் கொடுத்ததும் அன்பு


தர்மம் செய்வதும் அன்பு
தானமும் தவமும் அன்பு
தீமைகள் செய்யும் உறவை
திருத்திடும் உண்மை அன்பு

கண்ணில் தெரிவது அன்பு
கருணைக்கு மருந்தும் அன்பு
தேடியும் கண்கள் அறியா
தெய்வம் என்பதும் அன்பு

நாட்டில் நல்லறம் நடக்க
நல்வழி சொல்வது அன்பு
வீட்டில் இல்லறம் செழிக்க
வழிவகை செய்வதும் அன்பு

முன்னோர் சொன்ன சொல்லில்
முதலில் நிற்பது அன்பு
நல்லோர் நெஞ்சில் நின்றே
நாட்டைக் காப்பதும் அன்பு

பனையைப் பொன்ற துன்பம்
தினையள வாகும் அன்பால்
பாறையைப் போன்ற மனதும்
பனியாய் மாறும் அன்பால்

உண்மை அன்பால் ஊனுருகும்
ஊனில் கலந்தஉயிர் உருகும்
கண்ணில் நீரும் பொங்கும்
கரங்கள் எல்லாம் இணையும்

பொன்பொருள் தருவது அன்பல்ல
புன்னகை செய்வது அன்பல்ல
சிறிதும் தீமைகள் செய்யாது
சேர்ந்து வாழ்வதே அன்பாகும்

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (28-Dec-15, 4:12 am)
பார்வை : 87

மேலே