காட்சிப் பிழைகள் -18

தலை குனிந்து
குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறாய் நீ
இமைகளைக் கட்டவிழ்த்து
மெல்லப் பருகுகிறேன்

என் வயலெட் வண்ணப்பூக்கள்
என்னைப் போலவே
உன் பார்வைத் தொடுதல்
அறிந்து நகர்வதேயில்லை

நீ நான்
நான் நீ
இடம் பொருள் மறந்து
காதல் செய்கிறது
என் விழிகளிரண்டும்

இமை கவிழ்த்து
உறங்கினால் சென்றுவிடாதே
கனவுகள் கொள்ளை போகட்டும்
இன்றும் நாளையும் கூட

உன் அருகாமையின் இதம்
ஜென்மங்களின் அரும்புதலில்
மற்றுமொரு முன்பனிக்காலம்

இழையாய்
இதழ் பிரித்துச் சிரிக்கிறாய்
உதட்டின் ரேகைகளில்
சிவக்கிறேன் நான்

உன் விரல் நுனி
நகமாவது வெட்டி
விட்டுச் செல்
என் காலைகள் பூக்கட்டும்

காதல்
ஹார்மோன்கள் சுரப்பில்
ரகசியங்களுக்கு
ஆடை தரிக்கிறேன்
நீயென!

உன்னில் எவ்வளவு
தொலைகிறேன் என்றால்
பதில் சொல்லத் தெரியவில்லை
உன்வரைக்குமானது அது

எப்போதும் போல்
சலனங்களற்ற
வெள்ளை இரவில்
இரு கருப்புப் பூக்கள்
நம் நிழல்களைத் தவிர
அங்கே வேறொன்றுமில்லை

கைகளை இறுக்கி மூடித்
திறந்து பார்க்கிறேன்
உயிர்த் துளிகள்
இளைப்பாரட்டும் அவை
மீண்டும் உருகுவதற்குள்

சில்லென்ற மழை
குளிர் காயும்
உன் நினைவுகளைப் போல்
இதம் தருவதில்லை

எந்தப் பனித்துளியும்
சுடுவதில்லை
உன்னைப் போன்று

இளம் சூடான
தேநீரின் நா
தித்திப்பை நவிழ்கிறது
காற்றோடு கலந்துவிட்ட
உன் மென் முத்தங்கள்

உன்னில் மூழ்கித்
தொலைந்து உன்னையே
குடிக்கும் என் தாகம்

காதல்
சரியா தவறா
நீயே சொல்!...



-கார்த்திகா

எழுதியவர் : கார்த்திகா AK (29-Dec-15, 12:09 am)
பார்வை : 481

மேலே