இரக்கம் கொள்
விழிகளால் வீழ்த்தினாய் ஒருநாள்
தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறேன்!
அதற்கு என்னை முழுவதுமாக
கருணைக் கொலை செய்வது எப்படியென்று
உன் விழிகளுக்கு கற்றுக் கொடு
உன் மௌனத்தின் மொழிகள்
இப்போதுதான் கேட்க ஆரம்பித்திருக்கின்றன
புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்
புரியும்படி விளக்கம் சொல்ல
உன் மௌனத்திற்கு அறிவுரை சொல்
உன் சிரிப்பில் முத்துக்கள் சிதறுகின்றன
ஏழை எனக்கு எதுவும் கிடைக்கவில்லை
ஏழைக்கு கருணை காட்டும்படி
உன் சிரிப்புக்கு சொல்லிக் கொடு
நெற்றியில் பிறை கொண்டு ஒளி வீசுகிறாய்
என் வாழ்வுதான் இருண்டே கிடக்கிறது
குருடனுக்கு வழி காட்ட உன் நெற்றிக்கு சொல்லிக் கொடு
இதழ்வானில் மழை தூவுகிறாய்
தாகம்தான் கூடிக்கொண்டே போகிறது
தவித்த மனதின் தாகம் தீர்க்க
உன் இதழுக்கு சொல்லிக்கொடு
இமைகளை விரித்து தென்றல் வீசுகிறாய்
என் உடம்பெல்லாம் வியர்க்கிறது
உன் இமைகளை குளிர்காற்று வீசும்படி ஆனையிடு
உன் செவ்வாழை கால்களில் வழுக்கி
பாதத்தில் விழுந்த கொலுசு
என்னை காதலிக்கச் சொல்லி கெஞ்சுவதைப் பார்
தயவுசெய்து இரக்கம்கொண்டு என்னை காதலித்துவிடு