11ஆதாமின் அப்துல்லா - பொள்ளாச்சி அபி

இப்போது குடிசைக்குள் இருந்த இருட்டு பழகிவிட்டது.கிழிந்த கோரைப்பாயொன்றில் விரித்திருந்த கந்தலில் முனியம்மா அமர்ந்திருப்பது தெரிந்தது.படுத்துக் கிடந்தவள் இப்போதுதான் எழுந்திருப்பாள் போலிருக்கிறது.ஒரே நாளில் நைந்த கந்தலைப் போல உருமாறியிருந்தாள்.“கொஞ்சம் பொறுங்க பாய்..துணி ஏதாவது எடுத்து விரிக்கிறேன். அப்புறமாய் உட்காருவீங்களாம்..”

“பரவாயில்லே முனியம்மா இப்படியே உட்கார்றேன்..” சொல்லியபடியே சாணம் மெழுகியிருந்த தரையில் படக்கென்று அமர்ந்து கொண்டான்.”உங்க அம்மா தவறிப்போனது எனக்குத் தெரியலை.தெரிஞ்சுருந்தா நேத்திக்கே வந்துருப்பேன்.!”

“எங்கே பாய்.. அண்ணன் தம்பின்னு யாருமில்லே..நான் ஒத்தையாளா அத்தனை காரியமும் பாக்க வேண்டியிருந்துச்சு. அதான் சொல்லியனுப்ப முடியலை.. நேத்து வரைக்கும் அம்மான்னு ஒரு உசிரு இருக்கப்போயி தெம்பாய்த்தான் பாய் இருந்தேன்.இப்ப அநாதையாயிட்டேனே நானு..” மெலிதாக உடையத் தொடங்கியிருந்த அவளது குரல் பெரும் கேவலாய் மாறியது.முந்தானையால் முகம் பொத்திக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள்.

சம்சுதீனுக்கு இப்போது எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.அவளது அழுகுரல் லேசாய் ஓயும்வரை காத்திருந்தான்.

மௌனமாய்க் கழிந்த சில நிமிடங்களையடுத்து.., “உலகத்துலே கடைசி மனுஷன் இருக்குற வரைக்கும் யாரும் அநாதையில்லே முனியம்மா.நீ கவலைப்படாதே..சும்மா கவலைப் பட்டு இனியென்ன ஆகப்போகுது..? ஹூம்..உங்க வழக்கப்படி என்ன சடங்கெல்லாம் இருக்கோ.. அதையெல்லாம் முடிச்சுகிட்டு,கடைப்பக்கம் வா.நமக்கு ஆண்டவன் இருக்கான் நல்ல வழி காட்டுவான் ..” அமர்ந்திருந்த இடத்திலிருந்து அவன் எழுந்து கொண்டான்.


“சரி..பாய்..வர்றேன்..”புடவையால் கண்களைத் துடைத்துக் கொண்டே சொன்னவள் நிமிர்ந்த போது அவன் வெளியேறிக் கொண்டிருந்தான்.அவள் அமர்ந்திருந்த கோரைப்பாயின் அருகே சில ரூபாய்த்தாள்களும்,அவை பறந்துவிடாமலிருக்க அதன் மீது சில அணாப் பைசாக்ளும் வைக்கப்பட்டிருந்தது.

ஒரு வாரம் கடந்துவிட்டிருந்தது.

முனியம்மா அன்று வழக்கம்போல,தனது கூடையுடன் கடைக்கு வந்துவிட்டாள்.சில்லறை வியாபாரிகளுக்கு சரக்குகளைக் கொடுக்கும் பரபரப்பிலிருந்தான் சம்சுதீன். அவளைக் கவனித்தானா இல்லையா என்பதும் தெரியவில்லை.

முனியம்மாவும் அவனது கவனத்தைக் கவர எந்த முயற்சியும் செய்யவில்லை.கடையின் ஓரத்தில் அமைதியாகääஒதுங்கிநின்று கொண்டாள்.ஏற்கனவே பழைய பாக்கியாக நிறையத்தொகை நிலுவையிலிருக்கிறது. இன்றைக்கு வியாபாரத்திற்காக பழங்களைக் கேட்டாள் என்ன சொல்வானோ..? கறாராக எதையாவது சொல்லிவிட்டால் என்ன செய்வது..? முனியம்மாவின் மனசுக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது.

சரக்கெடுத்தவர்கள் இடத்தைக் காலி செய்த தருணத்தில், “முனியம்மா..சுக்குக் காப்பி குடிக்கிறியா..? வாங்கிட்டுவரச் சொல்றேன்” அவனது கேள்வியில் கலைந்தாள் முனியம்மா.

“இல்லே..வேண்டாம்..”

“காலையிலே சாப்பிட்டியா..?”

“ஹூம் ..என்ன..ஆங்..சாப்பிட்டேன்”

சரி..கொஞ்சம் கடைக்குள்ளே வந்து உட்காரு.உங்கிட்டே கொஞ்சம் பேசணும்..” என்றுமில்லாத வகையில் அவனது பேச்சு அவளுக்கு அதிசயமாய்த்தான் இருந்தது. இருந்தாலும் அந்த அழைப்பு அவளுக்குப் பிடித்திருந்தது.

மறுக்காமல் கடைக்குள்ளே நுழைந்தபடியே.. “எங்கிட்டேயா.. அதிசயமா இருக்கு..என்ன பேசணும்.? சொல்லுங்க பாய்..”

என்ன இத்தனை நாளா இல்லாம ரொம்ப மரியாதையாய்.. வாங்க போங்கன்னு பேசறே..?”

‘ஆமாம்..இதென்ன..நான் எப்போதிலிருந்து இப்படிப் பேசத்துவங்கினேன்.அவளுக்குள் எழுந்த கேள்விக்கு உடனடியாக அவளுக்கும் விடை கிடைக்கவில்லை. "அது வந்து..வந்து..ஏன் மரியாதையாப் பேசுனா உங்களுக்குப் பிடிக்காதா..?"

"பிடிக்கலேன்னு யார் சொன்னா..? இதுக்கு முந்தி இப்படியில்லையே..திடீர்னு இப்படிப் பேசுறதுக்கு என்ன காரணம் இருக்கும்;னுதான் கேட்டேன்.."

எனக்கும் தெரியலை..காரணம் தெரிஞ்சா நீங்கதான் சொல்லுங்களேன்.

சம்சுதீன் சிலவிநாடிகள் ஒன்றும் பேசவில்லை.இவ்வளவு நாளா நீ என்னைப்பத்தி என்ன நினைச்சியோ..அதே மாதிரிதான் நானும் நினைச்சிருந்தேன். என்ன இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்னு இருந்தேன்.ஆனா இப்ப அதுக்கான நேரம் வந்திருச்சுன்னுதான் நினைக்கிறேன்..! நாம கல்யாணம் பண்ணிக்கலாம்..!” படபடவென்று சம்சுதீன் சொல்லி முடிக்க.., முனியம்மா திக்குமுக்காடிப் போனாள்.

‘தனக்கும் அப்படியொரு ஆசையிருந்தாலும் ,இதுவரை வார்த்தைகளால் வெளிக் காட்டியதில்லை என்றுதான் அவள் நினைத்திருந்தாள்..ஆனாலும்,அவனிடம் பேசிய வார்த்தைகள், வளர்த்த வம்புகள் என் மனதை வெளிப்படுத்தி விட்டதோ..தேங்காய் உடைத்ததுபோல படீரென்று அவனும் இப்படிக் கேட்டுவிட்டானே..! இப்போது என்ன பதில் சொல்வது..?’ அவளது அமைதியான யோசனையைக் கண்டு,சம்சுதீன் முகத்தில் லேசாகப் பதற்றம் கூடியது.

“முனியம்மா..என்ன பதிலையேக் காணோம்..”

இல்லே..திடீர்னு நீங்க இப்படிக் கேட்டவுடனே என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரியலை..”
ஒரே வார்த்தைதான் உனக்கு சம்மதமா..இல்லையா..ன்னுதான் தெரிஞ்சுக்கணும்..! அதுக்கு இப்ப என்ன அவசரம்னு கேட்காதே.உன்னோட அம்மாவை இழந்துட்டு,ஆதரவில்லாம தனியா நிக்குறே.இனியும் எதுக்கு அப்பிடியே இருக்கணும். இன்னும் கொஞ்சநாள் கழிச்சு பண்ணப் போற கல்யாணத்தை இப்பவே பண்ணிகிட்டாத்தான் என்னன்னு எனக்குத் தோணுச்சு.

சம்சுதீன் சொல்கின்ற காரணங்கள் எல்லாவற்றைக் குறித்தும் அவளும் முன்னரே யோசித்துத்தான் இருந்தாள்.அவளால் அப்போது எந்தத் தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை.

ஆனால்,என்னைக்குறித்து நன்றாக யோசித்த பின்தான் முழுமையான ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பது நன்றாகவேத் தெரிந்தது.

எனக்கு சம்மதம்தான்.,ஆனால்..அம்மா செத்துப்போயி ஒரு வாரம்தான் ஆச்சு.உடனே எனக்கு கல்யாண ஏற்பாடுன்னா..எப்பிடி..?

அம்மா இறந்த துக்கம்ங்கற நெலமையிலேருந்து பார்த்தா உன் கேள்வி சரிதான்.இப்ப நாம கல்யாணம் பண்ணிக்கிறதுங்கறது கொண்டாட்டத்துக்கு இல்லே.உனக்கு நானும்,எனக்கு நீயும்னு ஒரு ஆதரவுக்குத்தான்.இப்பத் தனியா இருக்குற நீ எங்கவீட்டுலே வந்து இடம்மாறி வாழறதுக்கு ஒரு காரணம்னு மட்டும் நினைச்சுக்கோ..இதுக்கும் மேல விளக்கமா எனக்கு சொல்லத் தெரியலை..” வியாபாரத்தில் கறாரானஅவனது பேச்சு போலவே அவனது கல்யாணப்பேச்சும் இருப்பதைக் கண்டு முனியம்மாவிற்கு ‘பக்’; கென்று சிரிப்பு வந்தது.
வாய்விட்டு சிரித்ததில் அவளது சம்மதம் தெரிந்தது.

"அப்பனே முருகா..எனக்கொரு நல்லவழியைக் காட்டிட்டே.. " நன்றியால் அவளது நெஞ்சு நிறைந்தது.

ஆனா..ஒரேயொரு விஷயம்தான் எனக்காக நீ பண்ணணும்”சம்சுதீன் இப்படிச் சொன்னதும் அது என்னவாயிருக்கும்..? அவளுக்குள் கேள்வி எழுந்தது.

“நீ முஸ்லீமா மாறிக்கணும்.அப்பத்தான் நம்ம சொந்தக்காரங்களோட புழங்குறதுக்கு வசதியா இருக்கும்.

அவள் சில விநாடிகள் யோசித்தாள்.வேறு எந்த சொந்தமுமில்லாத தனக்கு, இனி சொந்தமாக எதுவுமேயில்லை என்பது புரிந்தது.

இனிவரப்போகும் புதியசொந்தங்களாவது வருத்தப்படாமலிருக்கட்டுமே..! அவள் சரி என்று சம்மதித்தாள்.

அடுத்து வந்த சில நாட்களின் இடைவெளியில் கலீமாவும் குரானிலிருந்து சில சூராக்களும் சொல்லிக் கொடுக்கப்பட்டு, திருமணத்திற்காகக் காத்திருந்த முனியம்மா கதீஜாவாய் மாறினாள். நிக்கா நடந்து முடிந்தது.

பாத்திமாவின் வீட்டிற்கு அடுத்த வீட்டில் அவர்களது ஆனந்தமான குடித்தனம் துவங்கியது.

========== தொடரும்

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (1-Jan-16, 10:50 pm)
பார்வை : 105

மேலே