அழித்த வெள்ளமும் காத்த உள்ளமும்

அழித்த வெள்ளமும் காத்த உள்ளமும்....!!

வானிலை அறிக்கை விட்டிருந்தார்
செயற்கைக் கோள் செய்தியாளர்
அடைமழையின் அறிகுறிகளை
கூகிள் வரைபடங்களில் ....!!

"எப்போதும் போலான மழைதானே"
ஏளனம் செய்தோரின் இல்லம் தேடி
வேட்டையாடி களித்திருந்தது மழை...!

ஆக்கிரமிப்பு நடத்திய இடத்தையெல்லாம்
ஆக்கிரமிப்புகள் செய்து
அதிகாரம் செலுத்தி இருந்தது மழை...!!

எந்த அதிகாரிகளால் என்ன செய்ய இயலும்..?
சட்டாம்பிள்ளையாய்
சண்டித்தனம் செய்திருந்தது மழை..!

விதி மீறல்களில் எங்களின் சதி
இப்படியாகத்தான் இருக்கும்
ஆவேசத்தில் அத்தனை பேரையும்
பழிவாங்கி இருந்தது மழை..!

ஓட விரட்டியது, படியேற வைத்தது
மிதக்க வைத்தது, அடித்தும் சென்றது ...!!

உடமைகளை விழுங்கியது
உணவுப் பொருட்களை விழுங்கியது
எல்லோருக்கும் பசியை அளித்து
பசி தீர்த்துக் கொண்டது மழை..!!

பசியும் பட்டினியும் சமமானபோது
சொந்தமும் பந்தமும் ஒன்றாகிப் போனது

ஒரு குவளைத் தண்ணீர்
சொட்டு சொட்டாக நா நனைத்துக் கொண்டது
ஒட்டுமொத்தக் குடும்பமும் ....
பங்கீடுகளில் சண்டைகள் ஏதுமின்றி...!

எதிரி என்று நினைத்தவன்
கையிருப்பு உணவை
கண்ணியமாய் பகிர்ந்தளித்திருந்தான்
மதம் பிடித்த மதம் அடங்கிப் போனது
மனிதம் துளிர்விட ஆரம்பித்த நேரத்தில்..!!.

ஏழைக்கான வறுமை நோயை
எல்லோருக்குமாய் பரப்பி
ஏழை பணக்காரன் பேதம் அழித்திருந்தது மழை ..!!

உன்னைக் காப்பாற்ற நானும்
என்னைக் காப்பாற்ற நீயும்
எல்லோரையும் காப்பாற்ற அவர்களுமாகிப் போனார்கள்..!
அரசியல் வாதிகள் மட்டும் விதி விலக்காய்..!

துன்பம் ஒருவருக்கு மட்டும் சொந்தமாகியிருந்தபோது
தலைகாட்டாத மனித நேயம்
எல்லோருக்குமாய் சொந்தமானபோது
துள்ளித்தான் திரிந்தது...!!

சாதி மத பேதங்களை, ஏற்றத் தாழ்வுகளை
முறியடித்த மாமழையே
வெள்ளமாக வந்து
மனிதநேய பாடங்கள் கற்பித்த
வாத்தியார் நீ...
தேர்ச்சி பெற்றோம்
நீ வைத்த தேர்வினில்...

இனி உன்வரவு
வாசல் வரை மட்டும் இருக்கட்டும்
வணங்குகிறோம் உன்னை தெய்வமாய்...!!

"இல்லையென்றால்..."
என்று சொல்வதற்கில்லை
உன் வலிமை முன்பாக
வலுவிழந்துதான் போகிறோம்...!!

எழுதியவர் : சொ.சாந்தி (2-Jan-16, 9:24 pm)
பார்வை : 61

மேலே