என் நிலாவே
நிலவு
* * * * *
ஒரு நிலாமுற்றத்தில் நான்
நீ என்னிடமிருந்து
விலகிப் போகிறாய்
இருள் கௌவிக் கொல்கிறது
அலைகளூடே
நடுங்கும் கடல் போல
உன் சொர்க்கத்தில்
கரை ஒதுங்கவே
நான் தத்தளிக்கிறேன்
உன் பார்வையில்
ஒளிச்சேர்க்கை செய்கிறது
என் உயிர்க்கலங்கள்
நீயோ விதவிதமாய் பூத்து
வினா எழுப்புகிறாய் என்னுள். ...
நீ வர நேரம் கடக்கிறாய் - என் நிழல்
என்னையே கேட்கிறது
உன்னை காணவில்லை என்று
கூடவே நடக்கிறாய்
ஏன் என் கூட வர மறுக்கிறாய்
என் இரவு நீயின்றி
தூங்க மறுக்கிறது
தலை குளித்து
சிலிர்த்த துளிக்குளிர்மையில்
துவட்டி விட்டேன்
என் இதயக் கொதிப்பை
அது உன் இருப்பிலே
நிலைத்து சிதைகிறது
மலர்கள் கமழ
மழை நனைந்தது - என்
மனம் கமழ நீ
நனைய மறுத்து விட்டாய்
நான் துடித்தது தெரியாதா ?
மாதம் முழுவதும்
வித விதமாய் வெளிக்கிட்டாய்
அடிக்கடி காணாமல்
மரக்கட்டையானேன் நான்
உனக்கு புரியாதா ?
முழுதாய் ஒழிந்து
வேடிக்கை காட்டினாய்
என் உயிரே இருளில் உறைந்தது
உனைக் காணாமல் அறிவாயா ?
முழுதாய் ஒளிர்ந்து
முக்குளித்தாய்
முகம் அப்படியே
மலர்ந்தது புரிவாயா ?
எனக்கு உன் வெளிச்சம்
தான் விடியல் பாதை
உனக்கு ஏன் விளங்க மறுக்கிறது
நீ பதித்துச் சென்ற
பாதச் சுவடுகளை
பின்தொடரும் கதிரவன் போல
என் இதயம்
ஏன் பிரகாசிக்க மறுக்கிறது
உன்னுள் என்ன காயம்
மௌனமாய் விழிக்கிறாய்
காரணம் சொல்
உன் நுதல் நடுவில்
திலகமிட துடிக்கிறது
நீயாக......என் விரல்கள்
நீயாகவே அமிழ்ந்து கிடக்கிறாயே
என்னுள் திலகமாக. ......
- பிரியத்தமிழ் -