நம்பிக்கைச் சிறகுகள்

நம்பிக்கைச் சிறகுகள் போதும் எமக்கு.
விண்ணை மண்ணாய் மாற்றும்
வித்தைகள் கற்ற நாங்கள்
வார்த்தைகள் கொண்டு தம்பட்டம் அடியாமல்
வானத்தில் பறந்து எம் பட்டம் விடுவோம் !

நீங்கள் நினைக்கலாம்
எங்கள் கைகளில் இருப்பது
பட்டமென்று ,
பட்டமல்ல அது.
விழுந்துவிட எத்தனிக்கும் பூமியை
பிஞ்சு கரங்களால் தாங்கிப் பிடிக்கும்
காகிதச் சும்மாடு .

எங்களை எங்கள் உலகத்தில் நின்று பாருங்கள்
உங்களிலிருந்து உதிர்ந்துபோன
எங்களின் காலம் உங்களை
எங்கள் உலகத்துக்கே
மறுபடியும் அழைத்துப் போகக்கூடும் .

வாருங்கள் எம்மோடு வந்து
விளையாடுங்கள்.
உங்கள் வறட்டுப் பிடிவாதங்களை
எடுத்து வீசிவிட்டு
எங்கள் மனதோடு எங்களிடம் வரும் உங்களை
இந்த வானம் மட்டுமல்ல
எந்த வானமும் நிராகரிக்கப் போவதில்லை.

*மெய்யன் நடராஜ்
வல்லமை மின்னிதழ் நடத்தும் படக்கவிதைப் போட்டியில் முதலிடத்திற்குத் தேர்வான கவிதை - படம் - வல்லமை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (6-Jan-16, 2:19 am)
பார்வை : 463

மேலே