முடியின் முடிவு
நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது என்று இப்போது தோன்றுகிறது .என் பதிமூன்று வயது மகன் மகேஷைப் பார்க்க எனக்கே கஷ்டமாக இருந்தது .இரண்டு நாட்களாக அவன் வெளியில் எங்கும் போகவில்லை .நண்பர்களைப் பார்க்கவில்லை .உறவினர்களைச் சந்திக்கக் கூட மிகவும் சங்கடப்பட்டான் ,
"போப்பா .எல்லாம் உன்னாலதான் என்று குற்றம் சாட்டினான் .
"எல்லாரும் என்னை மொட்டைத்தலை ,மொட்டைத்தலைன்னு கேலி பண்றாங்க ".அவன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது .எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி வந்து இறங்கியது .
நடந்தது இதுதான் .அவன் முடி காடுபோல் வளர்ந்திருந்தது .
"தலையை எண்டா இப்படி வச்சிருக்கே?" என்று கூறி நான்தான் அவனை சலூனுக்கு அழைத்துச் சென்றேன் ."கொஞ்சம் ஓட்ட வெட்டுப்பா "என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.அவன் அதிகமாகவே வெட்டிவிட்டான் , அதற்குப் பிறகுதான் இத்தனை களேபரங்களும் அரங்கேறின.
"நான் வெளியே போகமாட்டேன் . எந்த வேலையும் செய்ய மாட்டேன் .எனக்கு அசிங்கமா இருக்கு ",என்று கூனிக் குறுகினான் மகேஷ் .சரியாகச் சாப்பிடவில்லை.தூங்கவில்லை. பேயறைந்ததுபோல் இருந்தான்.
"நான் கொஞ்சம்தான் குறைக்கச் சொன்னேன் .கடைக்காரன் இப்படி பண்ணுவான்னு நினைக்கலை."என்றேன்.
மகேஷ் மெளனமாக இருந்தான்.என் கண்களைச் சந்திக்காமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் இன்னும் சமாதானமாகவில்லை என்று புரிந்துகொண்டேன். முடியைச் சட்டென வளரச் செய்யும் மந்திரம் ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.ஆனால் அப்படி எதுவும் இல்லையே!
இனி ஜென்மத்துக்கும் அவன் முடி விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று முடிவு செய்துகொண்டேன்.
"இனிமே எப்பவும் இப்படி நடக்காது.சாரிப்பா "என்றேன் வருத்தத்தோடு.என் குற்றவுணர்ச்சி சற்றே குறைந்ததுபோலத் தோன்றியது.