யோசிக்கணும்நாம எல்லாரும் யோசிக்கணும்

சூட்சுமம்
-----------------
பண்டிகைகள் இல்லாத வாழ்வை நினைத்துக் கூட பார்க்க முடியாதுதானே...? அது இளைப்பாறலின் சிறகு...... ஓடி ஓடி உழைத்த மனதின் அமைதி.... சிரிக்க......சிந்திக்க... புரிந்து கொள்ள... புரிய வைக்க.... ஒரு தவம் கலைந்த கொண்டாட்டம்... உற்சாக நதியின் மொத்தங்களின் பக்கங்கள் அனைத்தும் கவிதையாய் கிறுக்கி விட்டு சிரிக்கும் பிள்ளையின் மனதுக்குள் திரும்பும் நமக்கான பாதை. குடும்பங்கள் பண்டிகைகளால் மகிழ்ந்தது....ஒரு காலத்தில்...ஆனால் இன்று ? ...மனம் ஓடிய அளவுக்கு மூளை ஓடவில்லை.. அதற்கு தெரிந்து விட்டது.... தெரிவதெல்லாம் தெரிந்தது தானா என்ற தெரியாமையோடுதான் இங்கு பார்ப்பதும் பார்க்கப் படுவதும்....ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் மாற்றம் வந்து கொண்டேதானிருக்கும்... அது இயற்கையின் வியப்பு.... இணுங்களின் உயிர்ப்பு போல...அன்றும் இன்றும் என்று இரண்டு காலங்களைப் பற்றியும் போகிற போக்கில் ஒரு சேரதான் பார்க்க வேண்டி இருக்கிறது.. அது அப்படித்தான்.. ஒரு கட் ஆப் தேதி கொண்டு பார்க்கும் படி காலத்தின் வலிமை பிரிந்து கிடைக்கவில்லை..அது தொடர் நீட்சி... எங்கு விட்டோம் என்று கூறுவதும் இயலாத ஒன்று.. பத்துக்கு எட்டுதான் சரியாக வரும்....இரண்டு தொக்கிதான் நிற்கும். இரண்டு என்று விட்டு விட முடியாது..... அது எல்லாக் கால வாழ்வியலின் சூட்சுமம்...

பொருள்
---------------
நிஜமாகவே அந்தக் காலம் என்பது.. மனதுக்குள் இதமாகி வருடும் மையிலிறகு காலம்தான்... அது மனது நிறைந்து வழியும்... பருவ மழை.... காற்றும் கவிதையும் மிதக்கும் கப்பலென காணும் விழி எங்கும் விழாக் கோலம் பூண்டு.. ஒவ்வொரு பண்டிகையையும்... மனத்தால் உளமார நடுவீ ட்டுக்குள் வைத்து தாங்கிய காலம்....மனங்கள் இணைந்து... கொண்டாடிய காலம் அது.... ஆனால் நுட்பமாக ஒன்றை கவனிக்க வேண்டும்.... அந்தக்காலம் என்று பேசுபவர்கள் அவர்களின் இளமை அல்லது பால்யத்தின் காலம்தானே அது.. அப்படி என்றால்.. இன்றைய குழந்தைகள், இளைஞர்கள், அவர்களின் காலத்தில் அந்தக் காலம் என்று பேசப் போவது இந்தக் காலத்தை தானே... ?அப்படி என்றால்.. காலத்தின் பொருள் என்ன...! அல்லது... கொண்டாட்டங்களின் பொருள் என்ன...?

'அந்தக் காலம்........ அந்தக் காலம்....... அந்தக் காலத்தில் 3 மணிக்கே எழுந்தோம்.... எண்ணை வைத்து குளித்தோம்... புதுத் துணி போடுவோம்.... பட்டாசு வெடித்தோம்....மாடு வளர்த்தோம்... மாட்டுக்கு வண்ணம் பூசினோம்...பொங்கல் வைத்தோம்... உறவுகள் சேர்ந்து உண்டு மகிழ்ந்தோம்.... மனது சந்தோசமாக இருந்தது......." என்று கூறுகிறார்களே... இந்தக் காலத்திலும் 3 மணிக்கு எழுங்கள்.. யார் வேண்டாம் என்று கூறினார்கள்.... குளியுங்கள்... புத்தாடை அணியுங்கள்....பொங்கல் வையுங்கள்.... இன்றைய கால கட்டத்துக்கு தகுந்தாற் போல பட்டாசு வெடிப்பதற்கான கெடுவை கணக்கு பண்ணி வெடித்துக் கொள்ளுங்கள்... யார் தடுத்தார்....?.. பிரச்சினை காலங்களில் இல்லை... உங்களிடம் இருக்கிறது........தனக்கு வயது ஆகி விட்டது என்ற தாழ்வு மனப்பான்மை ஆட்டிப் படைக்கிறது.......கையில் பொம்மை துப்பாக்கி வைத்துக் கொண்டு வெடித்து விளையாடினால் பக்கத்து வீட்டுக்காரன் என்ன நினைப்பான் என்கிற பயம்... எப்போது உங்களுக்காக இல்லாமல் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்காக வாழத் தொடங்கினீர்களோ அன்றே உங்கள் பண்டிகை மட்டுமல்ல.. சராசரி நாட்கள் கூட களவு போய் விட்டன...எப்பவும் மனதுக்குள் ஒரு குழந்தையை தவழ விடுங்கள் தோழர்களே.... தவிப்பும்.. மிதப்பும் இல்லாமலே போய் விடும்.. யாருக்குதான் பிரச்சினை இல்லை.. பொருளாதாரப் பிரச்சினை இருந்து கொண்டேதானிருக்கும்.. அது நம் நாட்டின் பொருளாதாரக் கொள்கை சார்ந்த விஷயம்...அவரவருக்கு என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு கொண்டாடுங்கள்... அது தான் உங்களின் கொண்டாட்டமாக இருக்கும்..... எல்லாருக்குமே ஏன், அந்த காலம் பிடிக்கிறது....தெரியுமா...? ஏன்.... 'அப்போ அப்டி.. நான் சின்ன வயசுல....' என்று தொடர்ச்சியாக கூறுகிறார்கள்... தெரியுமா...?..அது உங்கள் பெற்றோரின் காலம்... அப்போது உங்கள் அப்பா அம்மாவின் அரவணைப்பில் பாதுகாப்பாக இருந்தீர்கள்..... முடிவெடுக்கும் இடம் அவர்களுடையதாக இருந்தது..... ஆக... ஒவ்வொரு பண்டிகையும்.. கொண்டாட்டமாக இருந்தது...பாட்டியின் சுருக்கு பை... சுகந்தம் தான்... அதற்காக பணப் பை வேண்டாம் என்று கூற முடியுமா... அன்று விறகு எரித்தோம்... அதற்காக எரிவாயு வேண்டாம் என்று கூற முடியுமா.... நவீனம் கற்றுத் தரும் தொழில் நுட்பத்தைக் கொண்டாடுவோம்... பாரம்பரியத்தை பற்றிக் கொள்வோம்...

மந்திரம்
-----------------
"அன்று அப்படி,,......." என்று பேசுபவர்கள் இன்றும் அதை செய்ய ஏன் முன் வருவதில்லை... ஆரம்பம் ஒன்று வேண்டும் தானே... இந்த வருடம் நீங்கள் ஆரம்பியுங்கள்.. அடுத்த வருடம் உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் ஆரம்பிப்பான்.. உரலில் இடியுங்கள்... வீட்டு முறைப்படி பலகாரம் செய்யுங்கள்..வாசலில் மாவுக் கோலம் போடுங்கள்... சொந்த பந்தங்கள் வீடுகளுக்கு செல்லுங்கள்... நண்பர்களிடம் ஈகோ பார்க்காதீர்கள்.... இல்லாதவர்களுக்கு கொடுங்கள்...முகத்துக்கு ஒரு இன்ச் அளவுக்கு முகப் பூச்சு போடுவதை தவிருங்கள்.. சொந்த முகத்தில் உண்மை அகத்தை விதையுங்கள்...பேசிக் கொண்டே இருக்காதீர்கள்......இன்று, நம்மை தொலைக்கிறோம் என்றால் 'அன்றை' நாம் மீட்டேடுப்பதும் நம் கடமை... 'இப்படி ஆகிடுச்சே.. இப்படி போச்சே'- என்று கூறிக் கொண்டே இருப்பதில் அர்த்தம் இல்லை... இன்றைய நாட்கள் அன்றைய நாட்கள் போல இல்லை என்றால் இன்றைய மனிதர்கள் சரி இல்லை என்றுதான் அர்த்தம், நாம் உட்பட...... முதலில் நாம் மாறுவோம்.. பண்டிகைகளை அன்றைய முறைப்படி செய்ய தொடங்குவோம் .. மாற்றம் இப்படித்தான் வரும்...... அன்றைய காலம்.. பசி ஆற்றும் காலம்.. இன்றைய காலம் வியாபார காலம்.. எல்லாமே சந்தையின் அடிப்படையில்தான் செயல் படுகிறது.... அதுவும் இந்திய சந்தை என்பது லட்டு மாதிரி ....அது தான் மொபைலயும் ... மோட்டாரையும் இங்க வந்து கொட்டுகிறான்...... "ரெண்டு வாங்குனா ஒன்னு பிரீன்னு சொன்னா..." கண்ணை மூடிகிட்டு வாங்குகிற பழக்கத்தை விடுவோம்...அதன் பின் முக்காடு போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பது வியாபார தந்திரம்....கொள்ளையின் மந்திரம்.......


அன்பிட்:
--------------
கலாசார சீரழிவு ஏற்படுகிறது என்றால் மாற்றுங்கள். போராடுங்கள்.. வீட்டில் டிவி பார்க்கவா விடுமுறை...முகநூலில் இருக்கலாம்.... காலத்தின் கட்டாயம்... ஆனால் முகநூலாகவே இருக்க கூடாது... 'குளிக்க போறேன்.. டாய்லெட் போறேன்னு' ஸ்டேடஸ் போடுவது எந்த வகையில் நியாயம்.. இன்றைய தொழில் நுட்பத்தை இவ்வளவு மொக்கையாக உபயோகிக்கும் நாம்தான்... அன்றைய காலம் என்று பேசிக் கொண்டு முகமூடி போட்டுக் கொண்டு திரிகிறோம்...வறுமை இரண்டு காலங்களிலும் இருக்கத்தான் செய்கிறது.... அந்த காலத்தில் செழிப்போடுதான் எல்லா குடும்பங்களும் பண்டிகை கொண்டாடினார்களா... இல்லை... இந்த காலத்தில்தான் எல்லாருமே கஷ்டப் பட்டுக் கொண்டு இருக்கிறார்களா ..? வறுமை, வாழ்வியல் பிரச்சினை... கொண்டாட்டம், வழக்கத்தின் பிரச்சினை... போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது......என்ன இருக்கிறதோ... அதற்குள்தான் உங்கள் கொண்டாட்டம் இருக்க வேண்டும்.. அதுதான் உண்மையும் கூட.. நாம் உண்மைக்கு மிக அருகில் சற்று வெளியில் நிற்பதையே நாகரிகம்.. வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டு திரியும் அன்றைய ஆட்களாகவே இருப்பது அன்பிட் தொடர்பான ஒன்று...

அன்று ரவிக்கை போடாமல் இருந்தார்கள்.. அது இன்று ஸ்லீவ்லெஸ் ஆக விரிந்து இருக்கிறது... எல்லாமே ஒன்று தான்.... 'அன்று' இன்னொன்றாக மாறி 'இன்று' வருகிறது.. அவ்வளவு தான்... ஒன்று மட்டும் முக்கியம்.. மாறுவது...... மாற்றங்களோடு தன்னை நிலை நிறுத்திக் கொள்பவன்தான் அடுத்த நிலைக்கும் செல்கிறான்... இது கணக்கு... அன்பையும் தூக்கி கொண்டே தொழில் நுட்பத்தோடு நடை பயில பழகுங்கள் தோழர்களே... வாழ்க்கை முழுக்க கொண்டாட்டம்தான்....இன்றைய கசப்புகளை விட்டெறிந்து விட்டு, இன்றைய தொழில் நுட்பங்களோடு.....இன்றைய.. வசதிகளோடு.. இன்றைய இலகுவோடு, இந்தக் காலத்தை அந்த காலம் போல மாற்றுங்கள், அன்றைய அன்பை போல.. அன்றைய ஒற்றுமையைப் போல...அன்றைய மனப்பக்குவத்தைப் போல... இந்தக் காலத்தை... பண்டிகைகளால் நிரப்பி கொண்டாடுங்கள் ...இது டிஜிட்டலின் பொற்காலம்... நினைத்த இடத்தில எல்லாமே நடக்கிறது.. இது அறிவியலின் கொடை.. அற்புதத்தின் கைகளில் மனிதன் .. இதை மனதின் ஒவ்வாமைக்கு பலி கொடுக்க முடியாது.... புத்திசாலிகள் இன்றைய காலத்தின் வாசலில் அன்றைய வீட்டைக் கட்டுகிறான்... நீங்கள் புத்திசாலிகள் என்றே நம்புகிறேன்...

முடிவு மாதிரி ஒன்று
-------------------------------------

எல்லா காலத்துக்குள்ளும் ஓர் இந்தக் காலம் இருந்து கொண்டுதான் இருக்கிறது... அது மீண்டும் ஒரு அந்த காலத்தை விட்டு விட்டே நகருகிறது...அந்தக் காலத்தில் குடும்பம், குட்டி, உறவு..சொந்தம் என்று கூடி....யாவரும் வீடு முழுக்க அமர்ந்து தங்கள் கைகளால், மனத்தால் செய்யப் பட்ட பலகாரங்கள் கொண்டு .. அளவோடு முழுதாக உடுத்தி...அன்பைப் பரிமாறி.... ஆசுவாசம் நிரப்பி... நம்பிக்கை விதைத்து.... இளைப்பாரல் பூண்டு.... மீண்டும் உழைக்க, கைகள் கூடும்....ஒற்றுமை செய்து கொண்டாடிய பண்டிகைகளை இந்தக் காலத்திலும், கிடைக்கின்ற அறிவியல் வசதிகளை... அளவோடு.. நுட்பாக.. தேவைக்கேற்ப பயன் படுத்தி....பக்கத்து வீட்டுக்காரனின் முகம் பார்த்து....நிகழ்த்துவதே.. இந்த பட்டிமன்றத்தின் குறிகோளாக இருக்க வேண்டும் என்பதுதான்.. இங்கே முடிவும்...


கவிஜி

எழுதியவர் : கவிஜி (6-Jan-16, 8:10 pm)
பார்வை : 317

மேலே