கனாக் கண்டேன்

கனாக் கண்டேன்!

கனாக் கண்டேன் கண்ணே!
கனாக் கண்டேன்-நம்
காதல் கனிந்துவரக் கண்ணே!
கனாக் கண்டேன்.

அலுத்துத் திண்ணையிலே கண்ணே!
அயர்ந்து தூங்கையிலே-காதல்
விழித்து உயிரிற் கண்ணே!
விடியல் காட்டியதே!

கொழுத்தச் சோலையிற் கண்ணே!
துளுத்துக் கனவிலே-நிசம்
பழுத்து மணந்து கண்ணே!
பரவிய காதலே!.

நீயும் நானுந்தான் கண்ணே!
நீரில் ஆடிவிட்டு-ஆடை
ஈரம் காயம்விடக் கண்ணே!
இறுக்கி உணத்துகிறோம்.

சேலை சுருளில் கண்ணே!
ஒளித்து ஓரமுன்னை-என்னை!
தூணாக்கி மாட்டிக் கண்ணே!
தானாய் சுழல்கிறாய்!

இலைச்சுருள் அல்வா கண்ணே!
என்கரம் நிசமோ-ஆனாலும்
தகைநான் சத்தியம் கண்ணே!
தமிழின் பத்தியம்.

காய்வதும் சேலையோ கண்ணே!
காளை நானுந்தான்-வனப்பு
மேய்வதோ கண்கள்தான் கண்ணே!
தீய்வது ஆன்மாதான்.!

பக்கமே ஊரிருக்கோ கண்ணே!
அச்சம் தடுக்கிறதோ-பாவி
வெக்கம் நெஞ்சிருக்கே கண்ணே!
எச்சம் தமிழிருக்கே!

ஆற்றங் கரைமேல்க் கண்ணே!
அழகுக் கிராமந்தான்-பண்பில்
போற்றும் காதல்க் கண்ணே!
பழகு மரபுதான்.

காயும் சேலையிற் கண்ணே!
காற்று அலைகிறதே--திவலை
மாய்ந்தும் ஆறும் கண்ணே!
மாற்றும் நானிலையோ !

பொறாமை போட்டிக் கண்ணே
பொல்லாச் சூட்டிற்கோ-காதல்
உறாமை கேட்டிற் கண்ணே
ஒளித்தான் சூரியனோ!.

மீட்டிய அழகுநீக் கண்ணே
மிளிர்ந்த சிலைதானோ-நான்
ஈட்டிய முதலாக் கண்ணே!
கூட்டி முத்தமிட்டேன்.

இப்படிக் கனவுதான் கண்ணே!
இனிக்கக் காண்கையிலே--பொறா
தொப்பென மாங்கனி கண்ணே!
தொட்டு எழுப்பியதே!

எப்படித் தாங்குவன் கண்ணே!
அப்படி பெருஇழப்பை-நீதான்
செப்படி தேங்கனி கண்ணே!
ஒப்படி ஒருமுறையே!

அள்ளி விழுங்கக் கண்ணே!
ஆவல் துடித்தாலும்-தொட்டு.
கிள்ளி நுகரக் கண்ணே!
காவல் துறப்பாயோ!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (12-Jan-16, 6:39 am)
பார்வை : 118

மேலே