இனி ஒரு விதி செய்வோம்

பிறந்தவ ரனைவரும் இறப்பது நிச்சயம்
பிறவியை முடிக்குமுன் பேதமும் ஏனடா ?
அறவழி மட்டுமே ஆற்றலைப் பெருக்கிடும்
அதற்கிணை யில்லையே நினைவினில் கொள்ளடா !

ஆர்ப்பரித் தெழும்பியே அழித்திடும் ஆணவம்
ஆசையும் பொறாமையும் புகுந்திடும் மனத்தினில்
வேர்விடு முன்னரே அகற்றிட முனைந்திடு
வெடித்திடும் போதினில் வீரியம் குறைத்திடு !

பயங்கர வாதமும் தலைவிரித் தாடினால்
பகைமையும் துரோகமும் நட்புற வாடுமே
முயற்சியால் களையெடு முழுமையாய் விரட்டிடு
முடிவுரை எழுதிடு மடிந்திடச் செய்திடு !

அன்பெனும் ஆயுதம் அகத்தினி லேந்திட
அழிந்திடும் ஆணவம் ஆசையு மகன்றிடும்
ஒன்றென யாவரும் வேற்றுமை நீங்கிட
ஒருதாய் மக்களாய் ஒற்றுமை பேணடா !

சாதிகள் மறைந்திட சமரசம் பெருகிட
சமத்துவம் நிலைத்திட சரித்திரம் பேசிடும்
நீதியும் நேர்மையும் செகத்தினில் நிமிர்ந்திட
நீங்கிடும் தரணியில் தீவிர வாதமும் !

மரத்துமே போனதோ மண்ணிலே மனிதமும்
மடமையை முற்றிலும் மடிந்திடச் செய்யடா
புரட்சியும் போர்களும் புரிந்திட வேண்டுமோ
புதுமையாய் உலகினை மாற்றிடப் பொங்கடா !

தனியொரு மனிதனாய் செகத்தினை வெல்லடா
தவித்திடு முயிர்களின் தாகமுந் தீரடா
இனியொரு விதிதனைச் செய்திடப் புறப்படு
இனிதெனப் பெற்றநற் சுதந்திரம் காத்திடு !

( தினமணி கவிதைமணியில்11:01:2016- ல் வெளிவந்தது )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (14-Jan-16, 11:52 pm)
பார்வை : 106

மேலே