தைப் பொங்கல் - கும்மி பாட்டு

தைப் பொங்கல் - கும்மி பாட்டு
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
பொங்குமின்பம் இனி தங்குமென்று
தைமகள் வந்திடும் வேளையிது
தாளமிட்டு கும்மி கொட்டுங்கடி...!!
சின்னஞ் சிறு மொட்டு சிறு பறை கொட்டி
சுற்றி வீதி வலம் வந்திடுவார்
போகி நல்ல இந்த போகி திருநாளில்
போட்டெரிப்பார் பழம் வீட்டுப் பொருள்.!!
தீய எண்ணந்தனைபோகி தீயிலிட்டுத்
தீக்கிரையாக்கிட வேண்டுமடி
தூய உள்ளமுடன் நாளும் வாழ்வோமென்று
சொல்லி சொல்லி கும்மி கொட்டுங்கடி..!!
பீடுடை திங்கள் மார்கழியில் தெரு
வீதியெங்கும் வண்ண கோலங்களாம்
கோல மெழில் அது கூடி மிளிர்ந்திட
பூவொடு விளக்கலங் காரங்களாம்..!!
திம்மித் தக்கத் திமி திம்மி.. திம்மியென
தாளமிசைத்திட நாட்டியங்கள்
ஆடியே தைமகள் இல்லத்தின் வாயிலில்
வந்திடுவாள் தோரணங் கட்டுங்கடி..!!
மஞ்சள் வெயில் அதிகாலையிலே
மங்கலமாய் வந்தனள் தைமகளாம்
வாழ்வின் வறுமைகள் நீக்க வந்தாள்
போற்றி.. போற்றி.. நீயும் கும்மியடி..!!
மஞ்சளிட்ட புதுப் பானையிலே
பொங்கி வழியுது பொங்கலடி
பொங்கலோ... பொங்கல்... பொங்கலென்று
சொல்லி சொல்லி நீயும் கும்மியடி.. !!
வாழும் வழி செய்யும் ஆதவனை
வணங்கி நன்றியும் கூறுங்கடி
நல்ல காலம்.. இனி நல்ல காலம் என்று
நாவினிக்கப் பாடி கும்மி கொட்டுங்கடி .!!