வண்டுகளின் தியானமும், தாமரை ஆலயமும் - ஆன்மீகச்சுற்றுலா

ஹரித்வார், ரிஷிகேஷ் ஷேத்ரத்தின் மகிமைகள், பெருமைகள். அந்த யாத்திரையை பல கோடி ஹிந்துக்கள் செய்வதன் நோக்கம். அங்கேயுள்ள கோவில்களின் சிறப்புகள் பற்றிய பதிவு இது.

இந்த பதிவு சற்று நீளமானது தான். இதில் பல கோவில்கள் பற்றி சொல்லப்பட்டு உள்ளதால். இது சற்று நீளமானது. அதே சமயம் இது ஆழமானதும் கூட. ஹரித்வார், ரிஷிகேஷ் இரண்டும் புண்ணிய ஸ்தலங்கள் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்திய தலைநகர் டெல்லியில் கூட. சக்தி வாய்ந்த பழமையான கோவில்கள் இருக்கின்றது. சக்திகளில் மிகப்பெரிய மகா சக்தியான பரா பட்டாரி [ யோக மாயா தேவி] க்கு கோவில் உள்ள இடம் டெல்லி.

ஒவ்வொரு கோவிலை பற்றியும் சுருக்கமான தகவலுடன் நாம் பார்ப்போம்.

புனித ஹரித்வார்

காஞ்சிபுரம், மதுரா, த்வாரகா, அயோத்தியா, உஜ்ஜெய்னி, காசி, ஹரித்வார் இந்த 7 ஸ்தலங்களும் முக்தி தரும் ஸ்தலங்கள். ஹரித்வார் க்கு மாயாபுரி என்றும் ஒரு பெயர் உண்டு. மாயா தேவிக்கு ஹரித்வாரில் தனியாக ஒரு கோவில் கூட உண்டு.

ஹரித்வாரில் கங்கை 253 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது. கங்கோத்ரியில் உற்பத்தியாகும் கங்கா தேவி. வடக்கே இந்த ஹரித்வாருக்கு தான் முதலில் வருகிறாள். அதனால் இந்த ஊருக்கு கங்காத்வாரா என்னும் பெயரும் உண்டு.

இந்த ஊரை ஹரத்வார், ஹரித்வார் என்று இரண்டு விதமாக சொல்வார்கள்.

ஹர என்றால் சிவன். த்வாரம் என்றால். நுழைவு வாயில். சிவனை அடையும் நுழைவு வாயில் இந்த ஹரத்வார். இதே பொருள். விஷ்ணுவிற்கும் பொருந்தும். ஹரித்வார் என்றால். விஷ்ணுவை அடையும் நுழைவு வாயில். சைவம், வைஷ்ணவம் இரண்டோடும் சம்பந்தப்பட்ட ஸ்தலம் ஹரித்வார்.

மேலும் மதுரையில் மீனாக்ஷி அவதாரம் போல். பார்வதி தேவி தாட்சாயணி என்னும் பெயரில் அவதாரம் செய்த ஸ்தலம் ஹரித்வார். மேலும். 51 சக்தி பீடங்களில் முதல் சக்தி பீடம். ஆதி சக்தி பீடம் ஹரித்வார். சைவர்கள் கைலாஷ் யாத்திரை செல்லும் முன் ஹரித்வாரை தரிசனம் செய்தே ஆக வேண்டும் என்றும். அதே போல் வைஷ்ணவர்கள் பத்ரிநாத் யாத்திரை செல்லும் முன் ஹரித்வாரை தரிசனம் செய்தே ஆக வேண்டும் என்றும் நமது சாஸ்திரம் சொல்கிறது.

ஹரித்வாரில் உள்ள முக்கிய கோவில்களை பற்றி சுருக்கமான தகவல்களோடு பார்ப்போம்.

1] நீலேஸ்வர் கோவில். ஹரித்வாரில் உள்ள மிக பழமையான கோவில்களில் இந்த நீலேஸ்வரரும் ஒருவர். நீலன் என்கிற மிகபெரிய சிவ யோகி கட்டிய மலை கோவில். மூர்த்தி சிறிது. கீர்த்தி பெரிது.

2] இந்த கோவிலும் பழமையான கோவில். சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன் முதலான அசுரர்களை தேவி பராசக்தி சண்டி தேவியாக அவதாரம் எடுத்து வதம் செய்த ஸ்தலம் இந்த சண்டி தேவி கோவில். இங்கே உள்ள மூல விக்ரஹத்தை ஸ்ரீ ஆதி சங்கரர் எட்டாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்தார். 1929 இல் காஷ்மீர மன்னரான சுச்சாத் சிங் இந்த கோவிலை புனரமைத்து கட்டினார்.

3] கௌரி சங்கர் கோவில். அர்த்தநாரீஸ்வரரை தான் கௌரி சங்கர் என்று சொல்வார்கள். இந்த கோவிலும். ஹரித்வாரில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்று.

4] சிவனை அழைக்காமல் தக்சன் யாகம் செய்தது. சிவன் வார்த்தையை மீறி சக்தி தேவி தக்சன் யாகத்திற்கு சென்றது. இது எல்லாம் ஏற்க்கனவே நீங்க திருவிளையாடல் படத்தில் பார்த்து இருப்பீர்கள். புத்தி சொல்ல வந்த தனது மகள், மாப்பிள்ளை இருவரையும் தக்சன் அவமதிக்க. சக்தி தேவி. அங்கே இருந்த யாக குண்டத்தில் குதிக்கிறாள். அவ்வாறு சக்தி தேவி நெருப்பில் குதித்ததில் சக்தி தேவியின் உடல் 51 துண்டங்களாக சிதறி. அந்த 51 துண்டங்களும் 51 சக்தி பீடங்கள் ஆனது. அந்த 51 சக்தி பீடங்களில் இது ஆதி சக்தி பீடம். இதன்பின்னர் சிவன் தக்ஷனை தண்டிக்கிறார். தக்ஷன் தனது தவறை உணர்ந்து திருந்துகிறான். தக்ஷன் சிவனை வழிபட்ட இந்த இடம் தக்ஷ மகாதேவ் கோவில் என்று அழைக்கபடுகிறது.

5] ஸ்ரீ யந்திர ஆலயம்- சக்தி தேவி உபாசனைக்கு என்றே இருக்கும் ஒரு மிக முக்கிய ஆலயம் இது. தக்ஷ மகா தேவ் மந்திரிலிருந்து ஒரு 300 மீட்டர் தொலைவில் உள்ள கோவில். பல்லாயிரம் பக்தர்கள் தினம், தினம் வந்து சக்தி தேவியின் அருளை பெரும் ஸ்தலம் இந்த சக்தி யந்திர ஆலயம்.

6] ஹரி கி பாரி- இவ்விடம் விஷ்ணு காட் என்று அழைக்கபடுகிறது. இவ்விடம் விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்த இடம். அவர் தனது பாத சரணங்களை பதித்த இடம் என்று தலமான்மியம் விஷ்ணு காட்டை மிக சிறப்பித்து சொல்கிறது. இந்த தீர்த்த கட்டத்தை தனது தம்பி பத்ரி ஹரியின் நினைவாக விக்ரமாதித்தன் அமைத்தார். ஹரித்வாரில் இந்த விஷ்ணு காட்டில் ஸ்நானம் செய்வது தான் மிக விசேசம். இங்கே தான் கங்கா ஆரத்தி நடக்கும்.

7] சதி குண்ட்- இவ்விடம் பிரும்ம குண்டம் என்றும் அழைக்கப்படும். இந்த குண்டத்தில் தான் சக்தி தேவி குதித்தாள்.

8] மாயா தேவி கோவில்- தேவி துர்க்கை 3 முகத்தோடு காட்சி அளிக்கும் ஸ்தலம் இது. மாயா தேவியாக இங்கே துர்க்கை காட்சி தருகிறாள். இந்த ஆலயம் விஷ்ணு குண்டத்திற்கு அருகே உள்ளது.

9] மான்சா தேவி கோவில்- சிவனின் புதல்வி என்று மான்சா தேவியை சொல்கிறார்கள். இந்த கோவிலை Tower of Haridwar என்று சொல்வார்கள். ஹரித்வாரில் உள்ள ஷிவாலிக் மலையில் இந்த ஆலயம் உள்ளது. இங்கே அம்மன் மூன்று வாய் ஐந்து கரங்கள். மற்றும் இன்னொரு அம்மன் 8 கரங்களோடு காட்சி தருகிறாள்.

10] மஹா மிருத்யுஞ்ஜெய மந்திர்- மிருத்யுஞ்செய மந்திரத்திற்கு என்றே உள்ள கோவில். கோடி கணக்கான மிருத்யுஞ்ஜெய மந்திரத்தை உரு ஏற்றிய ஸ்தலம் இது. பிறப்பு, இறப்பு என்கிற பிறவி பெருங்கடலில் இருந்து நம்மை மீட்கும் மோக்ஷ மந்திரம் இந்த மிருத்யுஞ்ஜெய மந்திரம்.

11] இந்த ஆலயத்தின் கண்ணாடி வேலைப்பாடுகள், இங்கே உள்ள தெய்வ விக்ரகங்கள் பாப்பவர்களின் மனதை கொள்ளை கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

12] சப்த ரிஷி ஆஸ்ரமம்- வசிஷ்டர், பரத்வாஜர், ஜமதக்னி, கௌதமர், அத்திரி, அகஸ்தியர், விஸ்வாமித்ரர் முதலான ரிஷிகளில் மிகப்பெரிய 7 பேரை சப்த ரிஷிகள் என்பார்கள். அந்த சப்த ரிஷிகளும் ஒருநாள் ஹரித்வாரில் உள்ள கங்கை கரையில் ஒன்றாக சேர்ந்து உலக நலனுக்காக தவம் செய்தார்கள். அப்பொழுது கங்கை சீறி பாயும் அந்த ஓசை. சப்த ரிஷிகளின் தவத்திற்கு இடையூறாக இருக்கவே. கங்கா தேவி 7 கிளைகளாக பிரிந்து தனது சத்தத்தை குறைத்து கொண்டாள். சப்த ரிஷிகள் தவம் செய்த இடம் சப்த ரிஷி ஆஸ்ரமம். இங்கே உள்ள கங்கையின் 7 கிளைகள் சப்த சரோவர் என்று அழைக்கபடுகிறது.

13] மா ஆனந்த் மயி ஆஷ்ரம்- திருவான்மியூர் ஸ்ரீ சக்கர ஆனந்தாம்பிகே பற்றி அடியேன் இதற்கு முன் தொடர் எழுதினேன் அல்லவா. ஹரித்வாரிலும் ஒரு ஆனந்தாம்பிகே இருக்கிறார். மிக சக்தி வாய்ந்த பெண் துறவி. [30 April 1896 – 27 August 1982] ஆன்மீக பூமியில் உதித்த மிக சிறந்த மலர் மா ஆனந்த் மயி என்று சிவானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் போற்றிய ஞானி. பரமஹம்ச யோகானந்த ஸ்வாமிகள் ஆனந்தாம்பிகே பற்றி Anandamayi as "joy-permeated என்னும் நுல் எழுதியிருக்கிறார். இந்த ஆனந்த மயி. தன்னை நாடி, தேடி வருவோருக்கு அருளை வாரி, வாரி வழங்கி கொண்டு இருக்கின்றாள்.

14] கீதா மந்திர்- கேதார் நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி முதலான நான்கு முக்கிய புண்ணிய ஸ்தலங்களை நாம் குளிர் காலத்தில் பார்க்க முடியாது. அப்ப அங்கே ரோடு பிளாக் பண்ணிடுவாங்க. அந்த 4 ஸ்தல மூர்த்திகளையும் இங்கே பார்க்கலாம். இங்கே உள்ள அணைத்து தெய்வ விக்ரஹங்களுமே மிக பிரும்மாண்டமாக இருக்கின்றது.

15] ஹரிஹர் ஆஷ்ரம்- சுவாமி அவேதாஷனந்த் கிரி மஹராஜ் என்பவர் பல நுறு ஞானிகளுக்கு ஞானி. பல சாமிகளுக்கு ஒரு சாமியா பெரிய சாமினு ஒருத்தர் இருப்பார் இல்ல. அத்தகைய ஒரு பெரிய சாமி தான் இவர். இந்த ஸ்வாமிகளின் மஹா சமாதி இங்கே தான் உள்ளது. மேலும் மிகுந்த சிறப்பு பொருந்திய ஏக முக ருத்ராக்ஷ மரம் இங்கே உள்ளது. இந்த ருத்ராக்ஷ மரம் தரிசனத்துக்கு மட்டுமே. விற்ப்பனைக்கு அல்ல.

16] பூமா நிகேடன்- ஆதி சங்கரரின் கொள்கைகளை பின்பற்ற. ஸ்வாமி பூமனந்த தீர்த்தர் உருவாக்கிய ஸ்தாபனம் இது. பல சமுதாய சேவைகளையும் பூமா நிகேடேன் செய்கிறது.

இவையெல்லாம் ஹரித்வாரில் பார்க்க வேண்டிய முக்கியமான கோவில்கள்.

அடுத்து ரிஷிகேஷ் பற்றி பார்ப்போம்.

யோக கலையின் ராஜ தானி என்று ரிஷி கேஷை சொல்வார்கள். ஹரித்வாரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் ரிஷிகேஷ் உள்ளது. மது, மாமிசம் இரண்டுமே ரிஷி கேசில் தடை செய்யப்பட்ட பொருட்கள்.

ரைபிய ரிஷிக்காக மஹா விஷ்ணு இங்கே ஒரு மாமரத்தின் அடியில் தோன்றினார். மேலும் அக்னி தேவன் இங்கே சிவனை வழிபட்டு அவர் ஒரு தீர்த்தம் உருவாக்கினார்.

ரிஷிகேசில் பார்க்க வேண்டிய முக்கிய கோவில்கள் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

1] அகிலேஷ்வர் மஹா தேவ், 2] தசாவதார கோவில், 3] கங்கா தேவி கோவில். நான்காவது.

4] லக்ஷ்மண ஜ்வாலா- ராமரின் தம்பி லக்ஷ்மனருக்கு என்று ஒரு தனி கோவில் என்றால். அது இங்கு மட்டுமே. இங்கே லக்ஷ்மணர் ஒரு பாலம் மூலம் கங்கை நதியை கடந்தார் என்று ராமாயணத்தில் குறிப்பு இருக்கின்றது. அவர் எந்த இடத்தில் பாலம் மூலம் நதியை கடந்தார் என்று ராமாயணத்தில் உள்ளதோ. அதே இடத்தில் 1927 வெள்ளைய அரசாங்கம். ஒரு இரும்பு தொங்கும் பாலம் கட்டியது. இன்றும் பார்ப்பவர்கள் அனைவரையும் அந்த பாலம் கவர்கிறது. உலக புகழ் பெற்ற ஜெர்மன் பேக்கிரி. இந்த பாலம் அருகே உள்ளது. குல்பி சாப்பிட்டு கொண்டே செல்பி போட்டோ பலர் இந்த பாலத்தில் எடுத்து கொள்கிறார்கள். மேலும் இந்த லக்ஷ்மண ஜ்வாலா அருகே உள்ள குளத்தில் குளிர் காலத்தில் குளித்தால். வெது, வெதுப்பாக இருக்கும். வெய்யில் காலத்தில் குளு, குளு என்று இருக்கும்.

5] நீலகண்ட மஹாதேவ ஆலயம்- அமிர்தத்தை தேவர்களுக்கு கொடுத்து. சிவன் ஆலகால விஷம் உண்டு. அவரின் கழுத்து நீல நிறமாக ஆன இடம் இந்த ஷேத்ரம். ரிஷிகேசில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஷேத்ரம் உள்ளது. டென்ஸ் வனப்பகுதியால் சூழப்பட்ட, பங்கஜ, மதுமதி போன்ற அருவிகள் இசைபாடும் அழகான ஒரு இடம் இந்த நீலகண்ட ஷேத்ரம்.

6] வசிஷ்ட குகை- வசிஷ்ட முனிவர் தவம் செய்த குகை. தியானம் செய்ய சரியான இடம் இது

7] எலி வழிபட்ட சிவஸ்தலம் வேதாரண்யம், குரங்கு, அணில், காக்கை வழிபட்ட ஸ்தலம் குரங்கணில் முட்டம், எறும்பு வழிபட்ட ஸ்தலம் திருவெறும்பூர், பசு வழிபட்ட ஸ்தலங்கள். திருகோகர்ணம் முதலான பல ஸ்தலங்கள். மயில் வழிபட்ட ஸ்தலங்கள் மயிலாப்பூர், மயிலாடுதுறை, மயிலம் முதலான பல ஸ்தலங்கள். அதே போல் ரிஷி கேசில் மஹ ரிஷி மகேஷ் யோகி ஆஸ்ரமதிற்கு ஒரு மிகப்பெரிய வண்டு படையே வந்தது. எதற்கு? தியானம் செய்ய. இன்றும் பல நுறு வண்டுகள். அந்த ஆஸ்ரமம் வரும் பக்தர்களுக்கு எந்த வித தொந்தரவும் செய்யாமல் தியானம் செய்து கொண்டு இருக்கின்றன.

8] சிவானந்தா ஆஸ்ரமம்.

இவையெல்லாம் ரிஷிகேசில் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்கள்.

பெரும்பாலான கோவில்கள், ஆஸ்ரமங்கள் அருகருகே இருப்பதால்.இரண்டு நாட்களில் ஹரித்வார், ரிஷிகேஷ் பயணத்தை முடித்து விடலாம்.

19 மசூரி பயணம்.

வட இந்தியாவின் ஊட்டி. தெற்கே மலைகளின் ராணி ஊட்டி. வடக்கே மலைகளின் ராணி மசூரி. மசூரி மலை 6579 அடி.

மசூரியில் பார்க்க போகும் இடங்கள்.

1] Camel's Back Road, 2] Lal Tibba, 3] Company Garden, 4] Municipal Garden, 5] SOHAM Heritage & Art Centre, 6] Kempty Falls, 7] Jharipani Falls, 8] Gun Hill, 9] Happy Valley, 10] Lake Mist, 11] Mussorie Adventure Park.

வரும் 19 காலை 6 மணிக்கு ஹரித்வாரில் இருந்து கிளம்பி விடுவோம். ஹரித்வாரில் இருந்து மசூரி 86 கிலோ மீட்டர் தூரம். மாலை ஐந்து மணிக்கு நாம் மசூரியில் இருந்து டெல்லிக்கு வால்வோ வேன் மூலம் திரும்புவோம். மசூரி டூ டெல்லி 296 கிலோ மீட்டர்.

டெல்லியில் நாம் வெறும் சுற்றி பார்க்கும் இடங்களை மட்டும் பார்க்க போவதில்லை. சில பழமையான கோவில்களையும் பார்க்க போகிறோம். டெல்லியில் பழமையான கோவில்கள் இருக்கின்றதா என்று நீங்கள் ஆச்சர்யபடுவது புரிகிறது. ஆம் சில பழமையான கோவில்கள் டெல்லியில் இருக்கின்றது.

டெல்லி பகுதியில் உள்ள பழமையான, பிரபலமான கோவில்களை நாம் பார்ப்போம்.

1] கௌரி சங்கர்- டெல்லி சந்தினி சௌக்கில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்.

2] கல்காஜி கோவில்- 1764 இல் கட்டப்பட்ட காளி கோவில். இங்கே வைஷ்னோ தேவி சந்நிதியும் மிக பிரசித்தி பெற்ற ஒன்று.

3] ஜண்டெ வாலன் மந்திர்- தேவி துர்கையை கண்ணால் கண்ட பத்திரி பகத் என்கிற மகானால் சுமார் 255 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில். இந்த கோவில் நாம் தங்க போகும் கரோல் பாகில் தான் இருக்கின்றது.

4] அணைத்து தெய்வங்களையும் படைத்த தெய்வமாக சாக்தம் சொல்வது. பரா பட்டாரி என்னும் யோக மாயா.தேவி யோக மாயாக்கு தனி கோவில் மிக, மிக அபூர்வம். டெல்லியில் யோகமாயா கோவில் Mehrauli யில் உள்ளது.

5] காத்யாயனி கோவில்- சத்தர்பூரில் உள்ள 70 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ள பிரும்மாண்டமான கோவில். இந்த கோவிலுக்குள் 20 பெரிய, சிறிய தனி, தனி கோவில்கள் இருக்கின்றது.

6] உத்தர சுவாமிமலை மந்திர்- தமிழ் கடவுள் முருகன் இல்லாத இடம் ஏது? இந்தியாவின் தலை நகரிலும் அவர் இருக்கிறார். வேண்டியதை தரும் கண்கண்ட தெய்வமாக பல ஹிந்தி வாலாக்கள் இவரை அங்கே வழிபாடு செய்கிறார்கள்.

7] அக்ஷர்தாம் கோவில்- இது ஸ்ரீமன் நாராயணனுக்கு என்று அமைக்கப்பட்ட கோவில். இந்தியாவின் மிகப்பெரிய கோவில்களில் அக்ஷர்தாமும் ஒன்று. இங்கே கூட்டம் பெரிது. கலைவேலைபாடுகள், ஒலி வேலைபாடுகள், படகு சவாரி அனைத்தும் இனிது, இனிது. இதை பார்க்க இரண்டு கண்கள் மட்டும் பத்தாது.

8] Connaught ஹனுமான் மந்திர்- 1724 இல் கட்டப்பட்ட ஹனுமான் கோவில். இந்த கோவிலுக்கு என்று ஒரு தனி சக்தி, சிறப்பு உண்டு. காரணம். இங்கே ஸ்ரீ ராம், ஜெயராம், ஜெய, ஜெய ராம் என்னும் மந்திரத்தை தொடர்ந்து பல லக்சம் முறை சொல்லி. அதன் மூலம் கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற கோவில் இந்த கோவில்.

9] கரோல் பாக் ஹனுமான்- இவர் கரோல் பாகில் நாம் தங்க போகும் இடத்திற்கு அருகிலேயே உள்ளார். 108 அடி உயர மிக பிரும்மாண்டமான ஹனுமான்.

10] தாமரை ஆலயம்- உலகில் சமீபத்தில் தோன்றிய மதம் பஹாய். தியான மார்க்கம் ஒன்றே நம்மை இறைவனுக்கு வெகு அருகில் அழைத்து செல்லும் என்பதே இந்த மதத்தின் கோட்பாடு. இந்த தாமரை வடிவ ஆலயத்தின் அழகை பார்க்கும் நமது முகம் மலர்ந்த தாமரை போல் ஆகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நமது என்ன அலைகளை கட்டுபடுத்தும் விதத்தில் சகஸ்ரதள அமைப்பில் தான் இந்த ஆலயம் இருக்கின்றது. இந்த ஆலயத்துள். சிலைகளோ, மத சின்னங்களோ இல்லை. சின்னா பின்னமாக நமது மன கவலைகள் இங்கே கால் வைத்தவுடன் அழிகிறது. மணி கணக்காக இங்கே அமர்ந்து தியானம் செய்வோர் பலர்.

11] கிருஷ்ணர் பிறந்த மதுராபுரி மற்றும் விருந்தாவனை தரிசித்து விட்டு. பின்னர் தாஜ் மஹாலை சுற்றி பார்த்து விட்டு. டெல்லி திரும்புவோம்.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (17-Jan-16, 10:03 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 272

சிறந்த கட்டுரைகள்

மேலே