கண்ணீரான மழை

மூசாப்பு மூடிய
அந்தி விலக ஆகாய
கங்கையாய் உருமாறி
மிதக்கும் மேகம்
மழையாய் விழுகையில்


ஓட்டை குடிசையின்
ஓடாகிப் போன
துவாரங்கள் வழி
சொட்டென விழுந்து
பரவுகிற தண்ணீர்


கூடை சுமந்தவளின்
கனவுகளுக்குள் புகுந்து
கொண்ட- வெள்ளமாய்
வரப்புடைத்து பாய்கிறது ஆறு
மலை கடந்து நதி விடுத்து
தரை கடத்தி நிறம் பூண்டு
கடலடைகிறது - அவள்
கண்ணீரின் உவர்ப்புடன்

அழுது வடிக்கும்
அவள் தாய்மை
மடியில் குறுகி
உறங்கும் குழந்தையின்
தூக்கம் கலைத்துவிடா
பதட்டத்தோடு-மெளனமாய்
ஒப்பாரி தொடர்கையில்


திரள் பிடரி முடி
பிடித்திழுக்கும் வேதனை
நனைந்து போன வாழ்வின்
துயரை-கண்ணீராய்
வடிக்கிறாள்...

நாளைய
வேளைக்கான உணவின்
தேவை பற்றி...
காலி வயிறின் மடிப்புகள்
கண்டு
கலங்கியவளாய்....

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (22-Jan-16, 6:10 pm)
பார்வை : 198

மேலே