சைனாவைத் திணறடித்த பாட்டி
உண்மைச் சம்பவம்
பெயர் இந்தியப் பெயர் போலத் தொனித்தாலும் உண்மையில் அவள் ஒரு பிரிட்டிஷ் பெண்மணி. 1930 – 40க்குள்ளான கால கட்டத்தில் அவர் சைனாவைச் சேர்ந்த “”சேக்கூ” என்ற நகரில் வசித்து வந்தாள். அங்கே அவளுடைய “”எம்ராயிடரி” துணிகள் வியாபாரம் நன்றாக நடந்து கொண்டிருந்தது. அவளுடைய அமைதியான வாழ்க்கையைக் குலைக்க வந்தது இரண்டாவது உலகப்போர்! ஜப்பானியர்கள் அவளைக் கைது செய்து 3 ஆண்டுகள் வரை சிறையில் அடைத்து வைத்தனர். பசியின் கொடுமையாலும், ஜப்பானியச் சிப்பாய்களின் வன்முறையாலும், பல கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்த அந்த நேரத்திலும், அவர் கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்காரவில்லை. அவளுக்குப் பிடித்த நல்ல ருசியான உணவு அவளுக்குச் சிறையில் கிடைக்கவில்லை என்றாலும், “”ருசியான உணவுகளைச் சமைப்பது எப்படி?” என்று ஒரு புத்தகமே எழுதிவிட்டாள்!
போர் முடிந்த பின் சிறையிலிருந்து அவளுக்கு விடுதலை கிடைத்தது. ஆனால் அதற்கப்புறம் 1949 இல், சைனாவில் புரட்சி ஏற்பட்டு, ஒரு பெரிய கலவரமே நடந்தது. மாசே துங்கின் செஞ்சேனை (ரெட் ஆர்மி), நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது! அதன் விளைவாக அவள் இரவோடு இரவாகச் சைனாவிலிருந்து வெளியேற வேண்டி வந்தது. அவள் வசித்து வந்த வீடும் போய்விட்டது. எம்ராயிடரி தொழிற்சாலையும் போய்விட்டது. வாடகைக்கு விட்டிருந்த மற்ற 5 வீடுகளும் கைப்பற்றப்பட்டுவிட்டன. (அந்தக் காலத்தில் அவைகள் ஏறக்குறைய 15 லட்சம் ரூபாய் பெறும்! இன்றைய அதன் மதிப்பு சுமார் 4 1/2 முதல் 5 கோடி ரூபாய்.)
வீடு வாசல், சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்தபின், கையில் சல்லிக் காசு இல்லாத லீலா, எப்படியோ பிரிட்டனுக்குத் திரும்பி வந்து சேர்ந்தாள்! ஆனால் மனதில் ஒரு உறுதியான முடிவு செய்துதான் வந்தாள். “”எப்பாடுபட்டாவது தன் இழந்த சொத்துக்களுக்கு நஷ்டஈடு வாங்காமல் விடமாட்டேன்” என்ற முடிவு அது.
ஆனால் அவள் முறையீட்டைக் கேட்பதற்கு யார் இருந்தார்கள்? இந்தப் போராட்டத்தை எப்படி எங்கேயிருந்து ஆரம்பிப்பது?
வழி என்னவென்று தெரியாத நிலையில் அவள் “பிரிட்டனின் வெளிநாட்டு அலுவலகத்திற்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் தன் போராட்டத்தை ஆரம்பித்தாள். இந்த அலுவலகம் போனில் தன் உடமைகளை இழந்து தவிப்பவர்களுக்கு உதவி செய்து வந்தது. லீலா அந்த அலுவலகத்திற்கு, தான் இழந்த உடமைகளின் ஒரு பெரிய பட்டியலை அனுப்பினாள்.
தன்னுடைய வீடுகள், ஃபாக்டரி, மட்டுமின்றி 300 பிளேட்டுகள், கண்ணாடி டம்ளர்கள், கிராமபோன் பெட்டி, எம்ராயிடரி செய்த பெட்ஷீட்டுகள், சிறு துண்டுகள், கைக்குட்டைகள், தொப்பி மாட்டும் ஸ்டாண்டு, விசிட்டிங் கார்டுகள் வைக்கும் “டிரே’ உள்பட தான் இழந்த எல்லாச் சிறிய சிறிய பொருள்களையும் அதில் குறித்திருந்தாள். அவளிடமிருந்த ஃபோர்டு ஸெடான் காரைக் கைப்பற்றி ஜப்பான் மிலிட்டரி ஆபீசர்கள் கொடுத்திருந்த இற்றுப் போன ரசீதின் நகலையும், போர் முடிந்த பின் அந்தக் காரை அவளுக்குத் திருப்பித் தந்துவிடுவதாக வாக்குறுதி அளித்து “கர்னல் ஷிகோ’ என்ற மிலிட்டரி ஆபீசர் எழுதியிருந்த கடிதத்தையும் கூட அவள் பட்டியலோடு சேர்த்து அனுப்பினாள். அமெரிக்கர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்த வீடுகளின் விவரங்களையும், அந்த வீடுகளின் அங்குலப் புகைப்படங்களையும் அனுப்பக் கூட அவள் மறக்கவில்லை.
ஆனால் உடனே பதில் எதுவும் வராததால் அவள் மனம் தளரவில்லை. புதுவேகத்துடன் கடிதத் தாக்குதலை ஆரம்பித்தாள்! இடைவிடாமல் கடிதத்துக்கு மேல் கடிதம் எழுதி, “”இந்த நஷ்ட ஈட்டுத் தொகையை நான் யாரிடமிருந்து கேட்டுப்பெற வேண்டும்? சீனர்களிடமிருந்தா? ஜப்பானிடமிருந்தா?” என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். (அவளுடைய சொத்துக்களை அந்த 2 நாடுகளும் கபளீகரம் செய்திருந்தன.)
லீலாவின் கடிதத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத வெளிநாட்டு அலுவலகம் கடைசியில் சுருக்கமான ஒரு பதிலை எழுதி அனுப்பியது. “”1951 இல், யுத்தம் முடிந்துபோன போதிலும் ஜப்பானுடன் இன்னும் “சமாதான உடன்படிக்கை’ கையெழுத்தாகவில்லை! ஆகவே தற்போது நாங்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம்” என்று எழுதிய பிரிட்டிஷ் அரசு, அவருக்கு ஒரு “அட்வைஸ்’ஸும் செய்தது. “”முடிந்தால் நீங்கள் நேரிலோ அல்லது யாராவது ஏஜெண்ட் மூலமாகவே சைனாவுக்குப் போய் சீன அதிகாரிகளின் முன் உங்கள் சொத்துக்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.”
1949 இல் சீனாவில் புரட்சி நடந்தது. கம்யூனிஸ்ட் ஆட்சி வந்தபிறகு அங்கிருந்து தப்பித்து வெளியேறுவது எவ்வளவு கடினமாக இருந்தது, என்னென்ன ஆபத்துக்களையெல்லாம் எதிர்த்துச் சமாளிக்க வேண்டியிருந்தது என்பதை லீலா மறந்துவிடவில்லை. அதே நாட்டுக்கு மறுபடியும் திரும்பிச் செல்லுவதா? முதிர்ந்த 70 வது வயதில் அது சாத்தியமா? ஊஹும்!
விஷயமும் நஷ்டஈடு கோரிக்கையும் இதோடு முடிந்து விட்டது போலத் தோன்றியது அவளுக்கு! ஆனாலும் தனது பழைய ஆல்பத்தில் தன் வீடுகளின் புகைப்படங்களைப் பார்க்கும்போதெல்லாம் “எப்படியும் நஷ்டஈட்டைப் பெறாமல் விடக்கூடாது’ என்ற வேகம் அவள் மனதில் தோன்றி, அவளை மீண்டும் செயல்படத் தூண்டும்!
சில வருஷங்களுக்குப் பிறகு லண்டனில் சைனாவின் தூதரகம் ஒன்று திறக்கப்பட்டது. உடனே லீலா மறுபடியும் தன் வீட்டின் புகைப்படங்கள், ஆவணங்கள், இழந்த பொருள்களின் பட்டியல் முதலியவற்றை அவர்களுக்கு அனுப்பி நஷ்டஈடு கோரினாள்.
ஆனால் சீனர்கள் அவ்வளவு எளிதில் மசிந்து விடுவார்களா என்ன? லண்டனிலேயே இருந்த போதிலும், ஆங்கிலம் தெரிந்திருந்த போதிலும், “”எங்களுக்கு சீன பாஷைகள் தெரியும்! ஆங்கிலத்தில் எழுதின உங்கள் கோரிக்கை செல்லாது! ஆகவே நிராகரிக்கப்படுகிறது” என்று எழுதி விட்டார்கள்.
ஆனால் கிழவி விடுவதாக இல்லை! பற்பல வருஷங்கள் சைனாவில் வசித்திருந்ததினால் அவளுக்கு சீன மொழியும் நன்றாக பேசவும் எழுதப் படிக்கவும் தெரிந்தது! உடனே சீன பாஷையில் கோரிக்கையை எழுதி அனுப்பினாள்! அதற்குச் சீன தூதரகத்தினர் கொஞ்சம் கூடச் சங்கோஜமில்லாமல், சுத்தமான ஆங்கிலத்தில் பதிலளித்தார்கள். “”உலக யுத்தத்தின் போது “செக்கூ’ நகரை ஜப்பானியர்கள் ஆக்ரமித்து இருந்தார்கள். அவர்கள்தான் உங்கள் சொத்துக்களைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள்! அவர்கள் உங்கள் வீடு வாசல் உடமைகள் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டார்கள்!
அவர்களிடமிருந்து “செக்கூ’ நகரைக் கம்யூனிஸ்ட்டுகள் விடுவித்தபோது அங்கே எதுவுமே மீந்து இருக்கவில்லை! ஆகவே நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை! நஷ்டஈடு கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.”
இது உண்மையல்ல என்று லீலாவுக்குத் தெரியும். ஏனெனில் “செக்கூ’ நகரம் ஜப்பானியர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அவளுடைய உறவினன் ஒருவன் அந்த நகரத்துக்குத் திருட்டுத்தனமாகப் போய்ப் பார்த்திருந்தான். அவளுடைய வீடுகள் அப்படியே இருந்தன. ஆனால் பாத்ரூம்களிலிருந்து குழாய்கள் உட்பட எல்லாப் பொருள்களையும் கழற்றி எடுத்துச் சென்றிருந்தார்கள் ஜப்பான் படையினர். லீலா சீன தூதரகத்துடன் தன் போராட்டத்தை விடவில்லை! அவர்களும் கொடாக் கண்டர்களாக இருந்தார்கள்.
லீலாவுக்கு வயது எண்பதாகிவிட்டது! அவளுக்குப் பதில் வேறு யாராவது இருந்திருந்தார்களானால் தோல்வியை ஒப்புக் கொண்டு, இனி நம்மாலாவது ஒன்றுமில்லையென்று முற்றுப் புள்ளி வைத்திருப்பார்கள். ஆனால் லீலாவோ சளைக்காமல் சீனர்களையும் பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் கடிதக் கணைகளால் தாக்கிக் கொண்டே இருந்தாள். ஆண்டுகள் சென்று கொண்டிருந்தன. லீலா 90 வது வயதை அடைந்தபோது அவளுடைய இரட்டைச் சகோதரி காலமாகி விட்டாள்! அவளுடைய இரண்டு புதல்வர்கள் அவளுடைய 70 வது வயதிலேயே காலமாகி விட்டிருந்தார்கள். ஆனால் லீலாவின் வாழ்க்கைப் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது.
“”சீனர்களிடமிருந்து என் சொத்தையும் நஷ்டஈட்டையும் பெறாமல் நான் சாகமாட்டேன்” என்று அவள் “சபதம்’ எடுத்துக் கொண்டிருந்தாள். கடைசியில் 1980 ஆரம்பத்தில், சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. சைனாவுக்கு மேற்கத்திய நாடுகளிலிருந்து நிதிஉதவி தேவைப்பட்டது. ஆனால் நிதியுதவி பெறுவதற்கு முன் தாங்கள் காசு பண விஷயத்தில் ரொம்பவும் நேர்மையுள்ளவர்கள் என்று மேல்நாடுகளுக்குக் காண்பிக்க வேண்டுமே! நிரூபிக்க வேண்டுமே! ஆகவே அவர்கள் தங்கள் பழைய எதிரி நெம்பர் 1 பக்கம் பார்வையைத் திருப்பினார்கள். அதுதான் 99 வயது பாட்டி லீலா!
லீலாவின் கடிதத் தாக்குதல் ஓயாமல் நடந்து கொண்டுதானிருந்தது. இந்த வயதில் கைகள் சற்று நடுங்க ஆரம்பித்திருந்ததால் அவள் கையெழுத்தும் சற்றுக் கோணல் மாணலாகி விட்டிருந்தது! ஆனால் அவளுடைய பேரன் அவளருகில் துணையாகவும், உதவியாகவும் இருந்து கடிதங்கள் எழுதுவதில் ஒத்துழைத்தான்.
மேலும் அவன் பிரிட்டிஷ் அரசில் எரிபொருள் துறை மந்திரியாக வேறு இருந்தான். அவன் தன் பாட்டியின் சொத்தின் முழு விவரங்களுடனும், ருசுக்களுடனும் புதியதாக ஒரு பட்டியலைத் தயாரித்து, சீனாவிடமிருந்து இந்த மாதிரி நஷ்டஈடு கோரும் கேஸ்களைக் கையாண்டு கொண்டிருந்த அதிகாரிக்கு அனுப்பி வைத்தான். எனினும் பிரச்னை அவ்வளவு எளிதில் தீருவதாக இல்லை.
“”லீலாவுடைய “பாஸ்போர்ட்’ செல்லுபடியானதாக இல்லை. எனினும் அவளுடைய கோரிக்கையைச் சீனர்களிடம் சமர்ப்பிப்பதற்காக அவளுடைய பிறந்த தேதியின் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், திருமணத்துக்குப் பின் தன் பெயரை மாற்றிக் கொண்டதற்கான சான்றிதழ் முதலியவற்றை அனுப்பினால் எங்களால் முடிந்ததைச் செய்வோம்” என்று பதில் வந்தது.
லீலாவிடம் இந்த ஆவணங்களில் எதுவுமே இருக்கவில்லை. எப்படியிருக்க முடியும்? இரண்டு உலக மகாயுத்தங்கள் மூன்று வருஷச் சிறைவாசம், சீனப்புரட்சி முதலியவற்றின் கொடுமைகளுக்கு ஆளாக நேர்ந்த தருணத்தில் ஒரு பெண்ணால் அவைகளையெல்லாம் எப்படிக் காப்பாற்றிப் பத்திரமாக வைத்துக் கொள்ள முடியும்?
இருந்தாலும் பேரன் பின்வாங்கவில்லை. பாட்டியின் போராடும் திறனை அவனும் வாரிசாகப் பெற்றிருந்தான். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாழ்க்கையில் வந்த சூறாவளிகளிலும் புயல்களிலும் அந்த ஆவணங்கள் எங்கோ தொலைந்து போய்விட்டன என்றும் அவைகளை மீண்டும் திரும்பப் பெறுவது சாத்தியமில்லாததால் அவைகள் இல்லாமலேயே அவளுடைய கேசை மனிதாபிமான நோக்கோடு பார்த்து “ஸெட்டில்’ செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான்.
கடைசியில், 100 வயதான லீலாவுக்கு 1982 ஆம் ஆண்டு மே மாதம் வந்த கடிதத்தில் அவளுடைய கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது என்றும், நஷ்ட ஈட்டுத் தொகை சில நாட்களுக்குள் அவளுக்கு “செக்’ மூலம் அனுப்பப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“”இனிநான் நிம்மதியாக கண்ணை மூடுவேன்” என்று லீலா அதற்குப் பதில் எழுதி அனுப்பினாள்!
உண்மையிலேயே சில நாட்களுக்குப் பிறகு அவள் கண்ணை மூடிவிட்டாள். நஷ்டஈடு “செக்’ வருவதற்கு முன்னதாக அவள் கண்களை மூடிவிட்டது ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. ஏனெனில் அவள் கேட்டிருந்த 4 கோடி தொகைக்குப் பதில், 1400 பவுண்டுக்குத்தான் (இன்றைய நிலவரப்படி வெறும் 11/4 லட்சம் ரூபாய்) செக் வந்தது. அதாவது 1935 இல் “செக்கூ’ நகரில் அவள் வீடுகளுக்கு இருந்த மதிப்பில் 1/5 பங்கு!
“”தி ஸ்பெக்டேட்டர்” (கூடஞு குணீஞுஞிtச்tணிணூ) என்ற நாளிதழில் லீலாவின் பேத்தியான “”பிரான்சிஸ் ஆஸ்போர்ன்” என்பவர் தன் பாட்டியைப் பற்றி எழுதிய மேற்படி உண்மைக் கதையின் முடிவில், இப்படி எழுதினாள்…
“”இந்த செக் வந்த போது என் பாட்டி உயிரோடு இருந்திருந்தால் அவள் கோபம் எல்லையைக் கடந்திருக்கும். அவள் இறந்திருக்கவே மாட்டாள் பாக்கித் தொகையை வசூல் செய்யாத வரை!”
சித்ரலேகா குஜராத்தி வார இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் தமிழில்: விஜு