புல்வெளியும் களைப்பூண்டும்
நிலமுழுதும் சமன்செய்து புதிதாக மணல்பரப்பி
இளம்புல்லின் விதைவிதைத்து அதன்பின்னே உரம்தெளித்து
நாள்தோறும் நீர் பாய்ச்சி புல்வெளியைப் பேணுகையில்
நல்கவனம் அதில்செலுத்த நாம்சிறிது மறப்போமால்
புல்லதனைப் புறம்தள்ளி அதனூடே பூண்டுபல
வல்லியதாய் வளர்ந்திடுமே ; இதிலுண்டு ஓர்பாடம்
மனமென்னும் விளைநிலத்தை நன்றாகப் பதம்செய்து
குணமென்னும் விதைவிதைத்து நல்லறிவாம் உரமிட்டு
நன்னடத்தை நீர்பாய்ச்சி நாளும்நாம் வாழுகையில்
நற்குணங்கள் மட்டும்நாம் விளைத்திடவே நினைத்தாலும்
தற்செயலாய் அவற்றிடையே கோபங்கள் , காமங்கள்
தற்பெருமை , தன்னலங்கள் இவைபோன்ற பூண்டொக்கும்
வற்குணங்கள் வந்தடைய வாய்ப்புகளும் பலவுண்டு ;
சற்றுமவை சேராமல் களையெடுத்து வாழ்வோமே !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
