நான் விரும்பும் நிலை - உதயா

யாருமற்ற வேளைதனில்
என் இமைகளின் விரிப்பிலே
எண்ணங்களின் கதவுகள்
திறக்கிறது மூடுகிறது.

தன்னை சுற்றி
நிகழ்ந்துக் கொண்டிருக்கும்
ஏதோவொரு ஓய்வற்றநிலையில்
நான் தொலைந்து போகிறேன்.

என்னை தொட்டுத் தழுவும்
மெல்லியக் காற்று
மென்மைக்குள் என்தேகத்தை
புகுத்திச் செல்கிறது.

ஒரே வினாடியில்
பனிச் சாரலிலும்
கனல் சாரலிலும்
மூழ்கி எழுகிறேன்.

சில கணங்களுக்கு
மழலையில் புகுந்து
இளமையில் நடந்து
முதுமையில் இளைப்பாறுகிறேன்.

எனக்கு தெரியாமலே
என் இதழ்கள் மலர்கிறது
என் கண்ணீர்
ஓடிக்கொண்டிருக்கிறது.

எனது இந்த
தியானமற்ற நிலையில்
துயிலில் பிறக்கா சொப்பனங்கள்
எண்ணற்ற வரங்களை குவித்து செல்கிறது.

மோகமும் தாகமும்
கானலில் நீண்டவாறே
மாயங்களில் மிளிர்ந்து
மாண்டுப்போகிறது.

என் இமைகளின்
இறுக்கத்திற்குள்
இருள் குறைகிறது
ஒளி நீள்கிறது.

என் மூளையின்
நரம்பில் கிடக்கும்
ஒவ்வொரு முடிச்சும்
தானாக அவிழ்கிறது.

நான்
அசைவற்ற நதியில்
ஓடமாய்
மிதக்கிறேன்.

விளக்க இயலா
ஏதோவொரு மகிழ்ச்சியில்
என் ஆன்மா
புரண்டு எழுகிறது.

என் வாழ்க்கை
துறவிக்குள்ளும்
ரசிகனுக்குள்ளும்
மாறி மாறி கண்விழிக்கிறது.

நான் ரசிகனுக்குள்
துறவியை அடைத்துக்கொண்டு
தொலைந்த இடத்தில் இருந்து
எழுந்துக்கொள்கிறேன்

- உதயா

எழுதியவர் : உதயா (23-Jan-16, 1:46 pm)
பார்வை : 125

மேலே