எதனினும் எது அழகாம்
பனி கொஞ்சும் வைகறையோ பாரழகாம்
கனி அமிர்தோ கன்னலோ சுவையழகாம்
கற்றை மரங்களுக்கு காற்று அழகாம்
எற்றை இரவுக்கும் நில வழகாம்..!
கலங்கரை விளக்கமது கட லழகாம்
களங்கமிலா உள்ளமது காதல் அழகாம்
வீதி சேர்கையில் தேர் அழகாம்
சாதி தோற்கையில் சாமிக்கும் அழகாம்..!
நடைபெற வேணுமெனும் கன வழகாம்
நடத்திக் காட்டுமந்த துணிவு அழகாம்
சொல்திறமும் செயல்திறமும் ஆட்சிக்கு அழகாம்
வீழ்வதும் எழுவதும் வெற்றிக்கு அழகாம்..!
புரிதலும் பொறுத்தலும் பதிக்கு அழகாம்
பரிதலும் கரிதலும் நட்புக்கு அழகாம்
வெஞ்சினமும் வன்சொல்லும் வாதுக்கு அழகாம்
வெந்தழலும் புண்நெஞ்சும் வேள்விக்கு அழகாம்..!
மக்களுக்கும் மாக்களுக்கும் வித்தியாசம் எதுவென
காட்டுமந்த மாண்பே மனிதருக்கு அழகாம்..!

