”கெத்து”வின் உண்மையான தமிழ் அர்த்தம்

”கெத்து”
======
1950களில் கிராமங்களில் சினிமா ரசிகனாக இருக்கும் இளைஞனுக்கு பெண் கொடுக்க யோசிப்பார்கள். எனக்கு விவரம் தெரியாத காலத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ‘மதுரை வீரன்’ படம் பார்க்க மூன்று கி.மீ தொலைவில் உள்ள ஊரில் உள்ள கீற்றுத் திரயைரங்கிற்கு என் பெற்றோர் என்னையும் அழைத்துச் சென்றிருந்தனர். நான் படம் ஆரம்பிக்கும் முன்பே தூங்கிவிட்டேன். இடையில் அவ்வப்போது விழித்து சில காட்சிகளை ஓரிறு நிமிடங்கள் பார்த்துவிட்டு தூங்கிவிடுவேன். அதன்பின் வேறு திரைப் படங்களுக்கு அவர்களும் செல்லவில்லை; எனக்கும் அந்த வாய்ப்பில்லை. பின்னர் நான் வளர்ந்த பின்னர் பூம்புகார் படம் வெளியான போதுதான் எனக்கு காசு கொடுத்து அந்தப் படத்தை பார்த்துவர அனுமதித்தார்கள்.
====
என்னைப் போன்றே கிராமப்புறப் பிள்ளைகள் வளர்க்கப்பட்டார்கள். பின்னர் கல்லூரியில் படிக்கும்போது கல்லூரி மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கவேண்டிய கட்டாயம். கல்லூரி வாழ்க்கையின் போதுதான் சில விடுதி நண்பர்கள் சில படங்களுக்கு அழைத்துச் சென்றனர். இதெல்லாம் என் பெற்றோர்க்குத் தெரிந்திருந்தால் என்னை மொத்தியிருப்பார்கள். என் நண்பர்கள் பலர் அடிக்கடி சினிமா பார்க்கிறவர்கள். இருப்பினும் நான் சினிமாப் பார்ப்பதில் ஆர்வம் காட்டாமல் படிப்பில் மற்றும் கவனம் செலுத்தினேன்.
====
படிப்பை முடித்து வேலைக்கு வந்த பின்னர்தான் பாசமலர் , திருவிளையால், ஹரிதாஸ் போன்ற படங்களை என்னுடன் பணியாற்றும் நண்பர்களின் அழைப்பின் பேரில் பார்த்தேன். நானாக விரும்பி எந்தப் படத்திற்கும் சென்றதில்லை. நான் கடைசியாகத் திரையரங்கு சென்றது 1990 ஆம் ஆண்டு என்று நினக்கிறேன். உடன் பணியாற்றும் நண்பர் ஒருவரின் திருமணம் பழனியில் நடந்தது. அதில் கலந்து கொள்ள இரண்டு நண்பர்களுடன் சென்றேன். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொடைக்கானல் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பும் வழியில் நாங்கள் தஞ்சை வந்தபோது இரவு 9.45. நாங்கள் காரைக்கால் வர பேருந்து எதுவும் இல்லை. எனவே அங்குள்ள சாந்தி திரையரங்கில் ‘அரங்கேற்ற வேளை’ என்ற படத்துக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர். திரையரங்கில் நான் பார்த்த கடைசிப் படமும் அது தான்.
===
அதற்குப் பின்னர் தொலைக் காட்சி வந்த பின்பு ஒரு சில நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். இப்போது செய்தி, கவியரங்கம், பட்டிமன்றம்,இலக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றையே விரும்பிப் பார்ப்பதுடன் நகைச்சுவைக் காட்சிகளையும் பார்ப்பதுண்டு. மற்றபடி எனக்கு சினிமா ரசனை அதிகம் கிடையாது. அதற்கான காரணங்களை என் படைப்புகள் பலவற்றில் வெளிப்படுத்தியுள்ளேன்.
====
”கெத்து” என்ற தலைப்பில் ஆரம்பித்து என் திரைப்படம் சம்பந்தமான என் அனுபவத்தைக் கூறியதற்கு “கெத்து” என்ற திரைப்படம் பற்றி ’தி இந்து’, ‘The Hindu’ ஆகிய நாளிதழ்களில் வந்த செய்தி தான் காரணம். அந்தப் படம் சம்பந்தமாக ஒரு வழக்கு நடக்கிறது. ‘கெத்து என்ற சொல் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பாதாக அந்தச் செய்தியின் வாயிலாக அறிகிறேன்.
தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் ’கெத்து’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதை அறிவேன். அந்தச் சொல் சென்னைத் தமிழ்ச் சொல், அதைத் திரைத் துறையினர் ‘துணிச்சல்’ என்ற பொருளில் தான் பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் ’கெத்து’ பற்றிய செய்தியப் படித்த பின்புதான் அது சென்னைத் தமிழில் அதன் உண்மையான அர்த்தத்தில் பயன்படுத்தும் சொல் அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன்.
=======
’கெத்து’ = மோசடி, சூழ்ச்சி, ஏமாற்றுகிற, தந்திரம், சூழ்ச்சித் திறம், ஒன்றைச் செயாது தப்பித்தல், ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுதல், பொறுப்பேற்றுக் கொள்வதனின்றும் தப்ப இருப்பொருள்பட பேசு, ஏமாற்றி வழி நடத்து, தெளிவின்றி மழுப்பிப் பேசு, (இப்படி பல அர்த்தங்கள் உள்ள ஒரு தமிழ்ச் சொல் தான் ‘கெத்து’
=====
கெத்துவுக்கு என்ன அர்த்தம் என்று வின்சுலோ அகராதியைப் பார்த்தேன்(பக்கம் 354). அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொற்கள்::::
Wiles. Tricks, evasion, shift, equivocation. இந்தச் சொற்களின் தமிழாக்கம் தான் மேலே உள்ள அர்த்தங்கள்.
====
நன்றி: Winslow, M. Winslow’s A Comprehensive Tamil and English Dictionary. New Delhi: Asian Educational Services, 1992. First Published 1862.