இலக்கிய அமுதம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

இலக்கிய அமுதம் !
நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


திருவரசு புத்தக நிலையம், 23, தீன தயாளு தெரு,

தியாகராயர் நகர்,
சென்னை-600 017. பேச : 044-24342810. 282 பக்கங்கள்,

விலை : ரூ. 180.

*****

அமுதம் உண்டால் மரணம் இல்லை என்பார்கள். இந்த ‘இலக்கிய அமுதம்’ படித்தால் மரணம் தள்ளிப் போகும், வாழ்நாள் நீட்டிக்கும் என்று உறுதி கூறலாம். தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் எழுத்து, பேச்சு இரண்டையும் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வருபவர். ஓய்வும் சோர்வும் தற்கொலைக்குச் சமம் என்பார் தந்தை பெரியார். நூலாசிரியர் ஓய்வின்றி சோர்வின்றி தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.


அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. மிக அழகாகப் பதிப்பித்த திருவரசு புத்தக நிலையத்திற்கு பாராட்டுக்கள். இந்த நூலில் ‘கவியமுதம்’ என்றா முதல் பகுதியில் 12 கட்டுரைகளும், ‘செவ்வியல் அமுதம்’ என்ற இரண்டாம் பகுதியில் 9 கட்டுரைகளும், ‘சிந்தனை அமுதம்’ என்ற மூன்றாம் பகுதியில் 9 கட்டுரைகளும் ஆக மொத்தம் முத்தாய்ப்பான

30 கட்டுரைகள் உள்ளன.



கவிமணி பற்றிய பதிவு அவரை நம் கண்முன் நிறுத்தி விடுகின்றது. அவருடைய அற்புதமான கவிதைகளை மேற்கோள் காட்டி குழந்தைப் பாடல்களை எழுதியவர் உமார் கய்யாம் பாடல்களை மொழிபெயர்த்த சிறந்த மொழிபெயர்ப்பாளர், வெண்பா வடித்தவர் என்றும் அவரது பன்முக ஆளுமையை கட்டுரையில் விரிவாக விளக்கி உள்ளார். இன்றைய இளைய சமுதாயம் கவிமணி பற்றி அறிந்து கொள்ள அரிய வாய்ப்பாக கட்டுரை உள்ளது.


கவியரங்க மேடைகளில் இன்றைக்கும் வாசிக்கும் போது கைதட்டல் பெறும் வைர வரிகள் கவிமணியின் வரிகள்.


எது கவிதை?

உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்
உருவெ டுப்பது கவிதை ;
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து உரைப்பது கவிதை !



(கவிமணியின் கவிதைகள் ப.24)


நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் தனிச்சிறப்பு என்னவென்றால் எந்த ஒரு கட்டுரையிலும் மேம்போக்காக எழுத மாட்டார். கவிதை வெளிவந்த நூல், பக்க எண் என மிக நுட்பமாக எழுதுவார்கள். மூலநூலையும் வாசிக்க வாய்ப்பாக வாசகருக்கு எளிமைப்படுத்தி எழுதிடுவார்.


மாமனிதர் அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானி, சிறந்த குடியரசுத் தலைவர், சிறந்த மனிதநேயர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் சிறந்த கவிஞர் என்பதை உலகிற்கு பறைசாற்றும் விதமாக வடித்திட்ட கட்டுரை மிக நன்று.


குர்ஆன்

உன்னைப் பெற்ற தாய்

குறள்

உன்னை
வளர்த்த தாய்

அதனால் தான்

நீ சாதித்தாய்!


மாமனிதர் அப்துல் கலாம் பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான், ரத்தினச்சுருக்கமாக எழுதிய வைர வரிகளுடன் கட்டுரையைத் தொடங்கி உள்ளார். கலாம் கவிதைகளில் சிறு துளி.


அழகிய சூழ்நிலை

அழகிய மனங்களை உருவாக்குகிறது
அழகிய மனங்கள்

புதுமையையும், படைப்பாற்றலையும்

உருவாக்குகின்றன.



உண்மை தான். ஒரு படைப்பாளிக்கு மனம் செம்மையாக இருந்தால் தான் படைப்புகள் படைக்க முடியும். அவரும் ஒரு படைப்பாளி என்பதால் உணர்ந்து வடித்த கவிதை நன்று. இது போன்று அவர் எழுதிய பல கவிதைகள் நூலில் உள்ளன. படிக்கும் வாசகரை பரவசப்படுத்துகின்றன. நாடறிந்த நல்ல கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய பதிவும் நூலில் உள்ளது.


கட்டுரையின் தலைப்பே அவரைப் பற்றிய பிம்பத்தை உணர்த்துவதாக உள்ளது. பாருங்கள்.


கவிஞர்களுள் மோனையைப் போல


முன் நிற்கும் அப்துல் ரகுமான்.


அவரது பல்வேறு கவிதைகள் மேற்கோள் காட்டி திறன் விளக்கி கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு புகழ்மாலை சூட்டி உள்ளார்.


கண்ணில் ஏன் மை தீட்டவில்லை? என்கிறாயா தோழி சொல்கிறேன்.


கண்ணுக்குள் என்

காதலர்

அவர் முகத்தில்

கரி பூசலாமா?
என் சூரியன் மீது

இருட்டைத் தடவுவதோ?
வீட்டுக்குள்ளே அவர்

வாசலில் எதற்கு

வரவேற்புக் கோலம்
அவரையே தீட்டி

அழுகுபெற்ற கண்ணுக்கு

மையலங்காரம்

வேண்டுமா?


இப்படி படித்தால் மறக்க முடியாத பசுமையான, இனிமையான கவிதைகள் நூல் முழுவதும் மேற்கோள் காட்டி கவிதை விருந்து வைத்துள்ளார்.


வளர்ந்து வரும் கவிஞர்கள் இந்த நூல் வாங்கிப் படித்தால் கவிதை பற்றிய நல்ல புரிதல் ஏற்பட்டு புதிய படைப்புகளில் புதுமை படைக்க பேருதவியாக இருக்கும். கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை ஆளுமை பற்றியும் கட்டுரை உள்ளது.


இனிய நண்பர் மு. முருகேஷ் அவர்களின் மனைவி முகநூல் தோழி கவிஞர் வெண்ணிலா அவர்களின் படைப்பாற்றல் பற்றியும் கட்டுரை உள்ளது. பல கவிதைகளை மேற்கோள் காட்டி வளர்ந்து வரும் பெண் கவிஞருக்கு வரவேற்பு கம்பளம் விரித்து உள்ளார் நூல் ஆசிரியர்.


இக்கட்டுரையில் பல கவிதைகள் மேற்கோள் காட்டி இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. படிக்கும் உங்களுக்கும் இக்கவிதை பிடிக்கும் என்று உறுதி கூறலாம். ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வரும் ஆணாதிக்க சிந்தனை என்பது கற்பிக்கப்படாமலே ரத்தத்தோடு கலந்து தொடர்ந்து வருகிறது என்பதை சில வரிகளில் உணர்த்தி உள்ளார், பாருங்கள்.


உள்ளே வீசப்படும்

செய்தித்தாளை
அப்பாவிடம் கொடுக்கவும்

கீரை விற்பவள் வந்தால்
அம்மாவைக் கூப்பிடவும்

கற்றுக் கொள்கிறாது குழந்தை
யாரும் கற்றுத் தராமலே. ப. 260.


கவிஞர்களின் மூல நூல் எல்லாவற்றையும் வாசிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இலக்கிய அமுதம் ஒரு நூல் படித்தால் ரசினிகாந்த் சொல்லும் புகழ் பெற்ற வசனம் போல நூறு நூல் படித்ததற்கு சமம்.


அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அரங்க. பாரியின் கவிதை உலகத்தை மிகச் சிறப்பாக படம் பிடித்துக் காட்டி உள்ளார் நூலாசிரியர்.


ஈழத்தமிழரின் கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. அவர்களின் வாழ்வில் விடியல் இன்னும் விளையவில்லை. அதனை மிக நுட்பமாக உணர்த்தும் அரங்க. பாரி அவர்களின் கவிதை பாருங்கள்.


கவிதையின் கண்ணீருடன் தொடங்கும் இத்தொகுப்பு.


எனது வடிவில்

இருப்பதாலோ

ஈழத்தில்

இவ்வளவு கண்ணீர். ப. 60.


கணினி யுகத்திலும் வரதட்சணைக் கொடுமைகள் இன்னும் ஒழிந்த பாடில்லை. ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. படிக்கும் வாசகர் மனதில் தைக்கும் விதமான அரங்க. பாரி அவர்களின் மற்றொரு கவிதை.


மாத விலக்கே

நிற்கப் போகிறது

இனி மாமன் வந்தால்
தான் என்ன?

மச்சான் வந்தால் என்ன?


நூலின் இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதி மேற்கோள் காட்டவில்லை. காரணம் நூல் விமர்சனமே நூல் அளவிற்கு வந்து விடக்கூடாது என்பதால். நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பொதுநல நோக்குடன் இலக்கிய அமுதம் நூலின் மூலம் இலக்கிய விருந்து வைத்துள்ளார். பாராட்டுக்கள்.


.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (23-Jan-16, 10:20 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 133

சிறந்த கட்டுரைகள்

மேலே