என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் 27
ஆங்கிலப் புத்தாண்டுப் பிறந்து சற்றேறக்குறைய ஒரு மாதம் முடிய உள்ளது . இடையினில் தமிழர் திருநாளாம் தைத் திங்கள் முதல் நாள் , பொங்கல் விழாவும் , தமிழ் புத்தாண்டும் நமை கடந்து சென்றது .
சென்ற வருடம் இறுதியில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் பெய்திட்ட பெருமழையாலும் வேறு சில காரணங்களாலும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர் . அதை மறக்க செய்திடவும் , மன ஆறுதலுக்காகவும் இந்த தமிழர் விழா நாட்கள் வந்து சென்றன . தமிழரின் வீர விளையாட்டுக்கான அடையாளம் " ஜல்லிக்கட்டு " விவகாரம் ஒரு புயலை கிளப்பி விட்டு உச்சநீதி மன்றம் வரை சென்று , அவர்களின் தீர்ப்பால் இந்த வருடம் நடைபெறாமல் கழிந்தது . அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தும் ஒன்றும் பயனில்லை . இனி அதைப் பற்றி இங்கே பேசுவதும் பகிர்வதும் சட்டத்திற்குப் புறம்பானது என்பதால் அதை விடுத்து வேறு பொருளைப் பற்றி பேசுவோம் என்று நினைக்கிறேன் .
நான் சிறு வயதிலும், இளமைக் காலத்திலும் நடந்திட்ட பொங்கல் விழா காட்சிகள் என் கண் முன்னே ஓடுகிறது .
பருவத்திற்கேற்ற எழுச்சி , இளமைக்கேற்ற வேகம் , காலத்திற்கேற்ற சூழலின் நிகழ்வுகள் , என்று பல கோணங்களில் எண்ணங்கள் வந்து போகிறது . அந்தக் காலம் மனிதர்களை மனிதர்கள் மதித்த காலம் , மனங்களில் நேசம் குடியிருந்த காலம் , கூட்டுக் குடும்பங்கள் நிறைந்திருந்த காலம் , உறவுகள் இடையே உண்மை பாசம் பரவியிருந்த காலம் , ..... மகிழ்ச்சி தாண்டவம் ஆடிய காலம் . மீண்டும் வராது நிச்சயம் அக்காலம் .
போகிப் பண்டிகை என்றால் அபோழுதெல்லாம் பழைய கழிவுகளை எரிப்பதற்கென்றே ஒரு மாதத்திற்கு முன்னரே அந்த பொருட்களை எடுத்து சேகரிக்க ஆரம்பித்துவிடுவார்கள் . அதற்கென்று இடமும் உண்டு. அதிகாலை யார் முதலில் கொளுத்துவது என்று வீடுகளின் இடையே ஒரு அமைதி போட்டியே நிலவும் . நாங்கள் மிக சிறுவர்களாக இருந்தபோது மேளம் கொட்டுவது போல , அந்த சிறிய கருவியை கையினால் தட்டி வீதி உலா வருவோம் அந்த நேரத்திலும் . அங்கங்கே எங்களுடன் நண்பர்கள் இணைவார்கள் . இப்போது அடுக்கு மாடி கட்டடங்கள் வந்ததால் அதிகமாக யாரும் வெளியே வருவதே இல்லை ....இடமும் இல்லை கொளுத்திட தனிதனியாக அவர்களுக்கு .
பொங்கல் பண்டிகை அன்று அனைவரும் ஒன்று கூடுவர் ..பல பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்வர். ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவோம் . உண்மையில் விழாக்கோலம் பூண்டிருக்கும் இல்லங்கள் . உள்ளமும் களிப்படையும் . உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும் . இப்போது பலருக்கும் தமிழர் என்ற உணர்வே குறைந்துவிட்டது . இன்னும் சில காலத்தில் அது மறைந்தாலும் ஆச்சர்யம் இல்லை. தலைமுறை இடைவெளி அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது . உறவுகளில் விரிசல் , போட்டி , பொறாமை , வருத்தங்கள் , உள்ளத்தில் இருள் , இவைதான் அதிகரிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மாற்றுக் கருத்து இல்லை. வெளிப்படை என்பது அடியோடு வீழ்ந்து விட்டது . எதிலும் மறைமுகத்தன்மை தான் தெரிகிறது .
இதனிடையே மதவெறி , சாதி சச்சரவுகள் , அரசியல் கேடுகளால் எழும் காழ்ப்புணர்ச்சிகள் மேலோங்கி வருவதும் கண்கூடாக தெரிகிறது. அது வைரசைவிட வேகமாக பரவுகிறது என்பதுதான் மிகவும் வருந்தத்தக்க ஒன்று . சமூகம் மேம்பட பலர் பாடுபட்டனர் ....இன்னும் சிலர் பாடுபட்டும் வருகின்றனர் என்பதில் ஐயமில்லை . ஆனால் அதையெல்லாம் மீறி நடைபெற்றுவரும் சில நிகழ்வுகள் மோசமான நிலைக்கு சமூகத்தை எடுத்து சென்றுவிடுமே என்று நினைக்கும்போது உள்ளம் பதறுகிறது....வருங்காலம் இன்னும் சீரழியுமோ என்ற கவலையும் மேலோங்குகிறது .
இந்த பூமியில் மனிதனாய் பிறந்த அனைவருமே சமம்தான் . சாதியை வைத்து மதங்களைக் கொண்டு பிரிவினை எண்ணமே எழக்கூடாது என்பதே என் அவா ....வேட்கை என்றும் கூறலாம் . சமீபத்தில் ஒரு செய்தித்தாளில் படித்தேன் ...ஒரு குறிப்பிட்ட சாதியை சார்ந்தவர்களை , அந்த கிராம கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று தடுத்து நிறுத்தியதாகவும் அதனால் கலவரம் ஏற்பட்டதாகவும் வந்த செய்தி அது. மனம் நொந்து விட்டேன் ...ஆனால் நான் கோவிலுக்கு செல்பவன் இல்லை ....தந்தை பெரியாரின் பகுத்தறிவு பாதையில் தான் வழி நடப்பவன் என்று அனைவரும் அறிந்த ஒன்று . நானே இதனை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டும் இருந்தேன் ...ஆனால் இன்னும் தீண்டாமை எனும் நச்சுக்காற்று வீசுவதை காணும்போது உள்ளம் வலிக்கிறது. இதற்காகத்தானே தந்தை பெரியார் அவர்களும் பேரறிஞர் அண்ணா அவர்களும் மேலும் அவர்ளை பின்பற்றி வருபவர்களும் போராடி வந்தனர் ..போராடுகின்றனர். ஏன் இந்த கொடுமை நாட்டில் நடக்கிறது . அரசியல் லாபத்திற்காக , சொந்த நலனுக்காவும் ஒரு சிலர் அரசியல் செய்வதும் , கட்சிகள் ஆரம்பிக்கும் அவலத்தை இங்குதான் அதிகம் காண முடிகிறது. வருந்தத்தக்க விஷயம்.
மனிதன் பிறக்கும்போதும் , இறக்கும்போதும் சாதியை எடுத்து வருவதும் , கொண்டு செல்வதும் இல்லை . இன்னும் சொல்லப்போனால் பிறக்கும்போது தான் எந்த சாதியென்றோ , மதமென்றோ அறியாதவன். இடையில்தான் இந்த கொடூரப்பேய் வந்து நுழைகிறது . இவையெல்லாம் மாறிட வேண்டும் . சாதி மதங்கள் ஒழிய வேண்டும் ...வெறியும் அடங்க வேண்டும் .
அதற்கான முயற்சியில் மொத்த சமுதாயமும் இணைந்து பாடுபட்டால்தான் சாதிக்க முடியும் . வளரும் இளைஞர் பட்டாளம் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும் . இப்போதுதான் கலப்புத் திருமணங்கள் காதல் என்ற பெயரால் அரங்கேறி வருகிறது . ஒருவழியில் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான் . ஆனால் அவர்கள் நிலைத்து ஒருமித்து வாழ்க்கையில் பயணித்தால் , பொன்னான எதிர்காலம் உருவாகும் . சாதி மதங்கள் மறையத் தொடங்கும் .
இந்த எண்ணத்துடன் , வேண்டுகோளுடன் ...இந்தப் பகுதியை முடிக்கிறேன் .
மீண்டும் சந்திக்கிறேன் ...
பழனி குமார்
23.01.2016