குருவருள் பதிற்றந்தாதி

ஓடித் திரிந்த உணர்வுகளை ஒன்றாக்கிப்
பாடிக் களிக்கப் பகலிரவாய்ப் - பாடங்கள்
நாடிக் கொடுத்திட்ட நற்குருவுக் கோர்புகழைத்
தேடிக் கொடுப்பேன் தினம்!
-----------------------------------------

கற்றுப் பயனடையக் காத்திருக்கும் எல்லோர்க்கும்
பற்றுடனே பாடம் பயில்விக்கும் - நற்கவிஞர்!
என்னுள் கவியும் இருப்பதைக் கண்டுணர்ந்து
நன்றே'கற் பித்தார் நயந்து! 1

நயந்தே'என் ஆற்றல் நலமுறவே நாளும்
வியன்றமிழ் என்னுள் விளைத்தார்! - பயங்கொள்
இடத்தில் பரிவோ[டு] எனையணைத்து, நெஞ்சில்
திடங்கொள்ள வைத்தார் தெளிவு! 2

தெளிவாய் இலக்கணத்தைத் தித்திக்கும் வண்ணம்
அளித்துப் பெயர்தந்த அன்பர்! - ஒளிரும்
தமிழறிவால் ஓங்கும் தமிழ்த்தொண்டர்! அத்தன்
அமிழ்தெனக் கொண்டார் அகம் ! 3

அகத்துள் அழகொளிரும்! அன்புநிறைந் தோங்கும்!
இகத்தின் இறையுணர்த்தும் துாயர்! - முகத்தின்
மலர்வில் முகிழ்ந்திருக்கும் முத்தமிழ் வாசம்!
வலவன் அளித்த வரம்! 4

வரமொன்று பெற்றார்! வளர்தமிழ்த் தாயின்
கரமென்றும் ஆனார்! கடமை! - உரமிட்டு
மன்றம் வளர்த்தார்! மறையெல்லாம் கற்பித்தார்!
என்றும் எழுத்தாணி ஏற்று! 5

ஏற்றம் அளித்திடுவார்! இன்றமிழ்ப் பாவலர்க்குப்
போற்றும் புலமை புகட்டிடுவார்! - ஆற்றல்
செறிந்த கவியரசைச் சேர்ந்தடைந்தேன்! நல்ல
நெறிகளைக் கற்கும்என் நெஞ்சு! 6

நெஞ்சில் கனவுகளை நித்தம் சுமப்போர்க்கும்
அஞ்சாமல் கல்வி அளித்திடுவார்! - விஞ்சையனைத்
தஞ்சம் அடைந்தே தகைமை வளர்த்திடுவோம்
கொஞ்சும் கவிகள் கொடுத்து! 7

கொடுத்தும் குறைவுதனைக் கொள்ளாத கல்வி
கொடுத்துக் களிப்பார் குழுவில் - விடுப்பின்றிப்
பற்றுடன் கற்றுவரும் பாட்டரசர் மாணவரைப்
பொற்புடன் போற்றும் புவி! 8

புவியைப் புரட்டும் புலமையைத் தந்து
கவியை வளர்க்கும் கவிஞர்! - செவியுள்
இனிக்கும் செழுந்தமிழை ஈந்திடுவார்! பாரில்
தனித்தமிழ் செய்த தவம்! 9

தவமொளிர் நெஞ்சும் தமிழொலிர் வாயும்
உவந்தளிக்கும் கையும் உடையார்! - கவிமனமே!
சொல்லாண்மை மேவிச் சுடர்த்தமிழ் பாடிடுவாய்
வில்லாளன் வேகத்தில் கற்று ! 10

எழுதியவர் : பாவலர் .வீ.சீராளன் (28-Jan-16, 1:57 am)
பார்வை : 158

மேலே