பொய்களின் ஊர்வலம்
பொய்களின் ஊர்வலம்
பொய்யென்று தெரிந்தும்
யாரும் திட்டுவதில்லை-
புகழ்ந்து பேசுபவர்களை!
“ஏன் தாமதம்?”என்னும்
மேலதிகாரியிடம்
எப்போதாவது சொல்லியிருக்கிறோமா-
தூங்கிவிட்டேன் என்று!
காத்திருந்து
கருவாடான பின்பு
வரும்
காதலியிடம் சொல்கிறோம்-
இப்போதுதான் வந்தேன் என்று!
எல்லா சேலைகளுக்கும்
உத்தரவாதம் தரப்படுகிறது-
சாயம் போகாது என்று!
கடன் வாங்கும்போதெல்லாம்
தரமுடியாதென்று
தெரிந்துகொண்டேதான் சொல்கிறோம்
அடுத்த வாரமே தந்துவிடுகிறேன் என்று!
குணமாகாது என்று தெரிந்தும்
மருத்துவர் சொல்கிறார்-
எல்லாம் சரியாகிவிடும் என்று!
வாழ்க்கை
அவசியப் பொய்களால்
அலங்கரிக்கப்பட்டிருக்கிறது!
பிடித்தாலும்
பிடிக்காவிட்டாலும்
நிறுத்த முடிவதில்லை-
வரிசைகட்டி வரும்
பொய்களின் ஊர்வலத்தை!

